KAUAI’S HINDU MONASTERY OF AMERICA

§

image§

ஆய்வுப் பொது அறிமுகம்§

1.1 ஆய்வுத் தலைப்பு

“அமெரிக்க காவாய் இந்து ஆதீனம்”§

1.2 ஆய்வு அறிமுகம்

“சனாதன தர்மம்” என சிறப்பிக்கப்படும் இந்து சமயமானது மிக நீண்டதொரு வரலாற்றினைக் கொண்டு காணப்படுவதோடு மனித வாழ்க்கைக்குத் தேவையான கலை தத்துவம் அறிவியல் அறவியல் விரதங்கள் கிரியைகள் அரசியல் பொருளியல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கமாக கொண்டும் காணப்படுகின்றது. அவ்வாறிருக்க இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படும் இந்து சமயமானது இன்று உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் வியாபித்திருப்பதனை காணக்கூடியதாக உள்ளது.§

வரலாற்றாதாரங்களின் அடிப்படையில் பார்த்தோமானால் மேலை நாட்டைச் சேர்ந்த குறிப்பாக பாரசீகர்கள் மற்றும் ஜரோப்பியர்கள் சிலரது செயற்பாடுகள் இந்து சமயத்தினை பாதிப்பிற்கு உள்ளாக்கக் கூடியதாக இருந்தாலும் மக்ஸ் முல்லர் (Max Mullar), வில்லியம் ஜோன்ஸ் (William Jones), எச்.எச்.வில்சன் (H.H wilson), A.A. மக்டொனால் (A.A. Macdonell), T.H. க்ரிபித் (T.H. Griffith), போன்ற பலரது செயற்பாடுகளும் இந்து சமயமானது பல்வேறு பரிணாமங்களை தன் வளர்ச்சிப் பாதையில் சந்தித்ததற்கும் இன்றைய இயந்திர உலகின் இந்து சமய நிலையிருப்பிற்கும் அடிப்படையாக இருந்தது என்றால் அது மிகையாகாது.§

இவர்களுள் வில்லியம் ஜோன்ஸ் (William Jones), மக்ஸ்முல்லர் (Max Muller) ஆகியோர் அவர்களின் சிறந்த செயற்பாடுகளின் காரணத்தினால் இந்து சமயத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் பணத்திற்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்லது மத மாற்றச் செயலுக்காகவோ இந்து சமயம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை மாறாக இவர்கள் இந்து சமயத்தினையும், சமஸ்கிருத மொழியையும் நேசித்தே தமது இந்து சமயம் சார்ந்த பணிகளை மேற்கொண்டனர்.§

இவ்வாறிருக்க தற்காலத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் இந்து சமய சுதேசிகள் தவிர்ந்த ஏனையவர்களால் குழுவாகவும் தனித்தும் இந்து சமயம் பின்பற்றப்பட்டும் வளர்க்கப்பட்டும் வருகின்றமையினையும் காணக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் எடுத்துக்காட்டுகளாக அமெரிக்காவில் இயங்கி வருகின்ற காவாய் இந்து ஆதீனம் (Kauai's Hindu Monastery), கானா நாட்டில் சுவாமி கானானந்த ஸரஸ்வதி என்பவரால் நடாத்தப்பட்டு வரும் ஆச்சிரமம் (The Hindu Monastery of Africa, Accra) சோவியத் ரஸ்யாவிலே காணப்படும் திவ்விய லோகா ஆச்சிரமம் (Divya Loka Ashram of Russia) அமெரிக்காவில் காணப்படுகின்ற பக்தி வேதாந்த ஆச்சிரமம் (The Bhaktivedanta Ashram) இத்தாலியில் உள்ள சுவாமி கீதானந்த ஆச்சிரமம் (Svami Gitananda Ashram) போன்றவற்றை சிறப்பாக கூற முடியும்.§

§

அந்தவகையில் அமெரிக்காவில் 1970ஆம் ஆண்டு சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி (Satguru Sivaya Subramuniyaswami) என்பவரால் உருவாக்கப்பட்டு இன்றும் சிறப்பாக இயங்கி வருகின்ற காவாய் இந்து ஆதீனமானது (Kauai's Hindu Monastery) இந்து சமயத்திற்கு அளப்பரிய சேவைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆதீனம் மேலைத்தேசத்தவர்களால் நிறுவப்பட்டது. எனினும் இப்பொழுது மலேசியா சிங்கப்பூர் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து தமிழர்களும் சந்நியாசிகளாக உள்ளனர். இவர்களுக்கு சமஸ்கிருத மொழியில் பயிற்சி அளிக்கப்பட்டு அன்றாட சமயச் சடங்குகளை செய்கின்றனர். முக்கியமான திருவிழாக்களுக்கு ஆதீனத்துக்கு சிவாச்சாரியர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இவ்வாதீனமானது இந்துக் கோயில்களை அமைத்தும், இந்து சமயச் சிந்தனைகளை பிரச்சாரம் செய்தும், இந்து சமயம் சார்ந்த நூல்களை வெளியிட்டும், நூலகங்களை அமைத்தும், இந்துக் கலைகளை வளர்த்தும், இந்து சடங்கு சம்பிரதாயங்களை பயன்படுத்தியும் பாதுகாத்தும் வருவதோடு இந்துக் கல்வியினையும் கற்பித்து வருகின்றது.§

இவ் ஆதீனத்தில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குதாரர்களாக இருந்து இந்து சமயக் கொள்கைகளை உலகிற்கு வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் மிக முக்கியமாக இருவர் தெய்வ நிலையில் வைத்துப் போற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இவ்வாதீனத்தினை உருவாக்கிய யாழ்ப்பாணத்தின் யோகர் சுவாமிகளின் சீடரான சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி (Satguru Sivaya Subramuniyaswami) எனும் அமெரிக்கரும் தற்சமயம் இவ்வாதீனத்தினை வழிநடத்தி வருகின்ற சற்குரு போதிநாத வேலன் சுவாமி (Satguru Bodhinatha Veylanswami) என்பவரும் சிறந்த இந்து சமயம் சார்ந்த செயற் திட்டங்கள் மூலமாக முழு உலகத்தையும் ஈர்த்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.§

அந்தவகையில் இந்து சமயமானது உலகளாவிய ரீதியில் வெளிப்பட அமெரிக்காவில் உள்ள காவாய் இந்து ஆதீனத்தின் (Kauai's Hindu Monastery) உதவியை எவ்வாறு பெற்றது என்பதனையும், அதன் விளைவால் இந்துப் பண்பாடானது எவ்வாறான நிலைக்கு சென்றுள்ளது என்பது பற்றியும் இந்து சமூகத்திற்கு வெளிப்படுத்துவதாக இவ் ஆய்வு அமைகின்றது.§

§

1.3 ஆய்வின் நோக்கங்கள்

எந்தவொரு ஆய்வும் மேற்கொள்ளப்படுவதற்கு பல நோக்கங்கள் காணப்படுகின்றன. தவறுகளற்ற வகையிலும், பொருத்தமான வகையிலும் தேவையான தரவுகளைப் பெறுவதற்கு ஆய்வு நோக்கமானது அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. இவ்வகையில் இவ்வாய்வானது மேல்வரும் நோக்கங்களிற்காக மேற்கொள்ளப்படுகின்றது.§

1.3.1 பிரதான நோக்கம்

image அமெரிக்காவில் அமையப்பெற்றும் மேனாட்டவர்களின் தலைமையில் இயங்கியும் வருகின்ற காவாய் இந்து ஆதீனம் (Kauai's Hindu Monastery) குறித்து இதுவரை எதுவித ஆய்வுகளும் தமிழில் வெளிவரவில்லை. இந்நிலையில் இந்நிறுவனம் பற்றிய தகவல்களை சமூகத்திற்கு வழங்குவதையே இவ் ஆய்வு பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.§

1.3.2 துணை நோக்கங்கள்

imageகாவாய் இந்து ஆதீனம் (Kauai's Hindu Monastery) பற்றியும் அவர்களால் இந்து சமயம் சார்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற செயற்பாடுகளையும் ஆவணப்படுத்துதல். §

imageஇந்து சமயத்தில் காணப்படும் சிறப்புக்களை அறிந்து அந்நிய நாட்டார் அதனை உள்வாங்கி சிறந்த முறையில் பின்பற்றி வருவதனை இந்து சமூகத்திற்கு விளக்குவதன் மூலமாக சுதேச இந்துக்களின் சமயம் மீதுள்ள அசமந்தப் போக்கினை உணரச் செய்தல். §

imageஇந்து சமய பண்பாடானது மேனாட்டவர்களினால் உள்வாங்கப்பட்டு பின்பு அவர்களால் வெளிப்படுத்தப்படுகின்ற பொழுது இந்துப்பண்பாட்டில் நிகழ்கின்ற மாற்றங்களை கண்டறிந்து சுதேச இந்துப் பண்பாட்டுடன் ஒப்பிட்டு ஆராய்தல்.§

1.4 ஆய்வுப் பிரச்சினை

ஆய்வாளனுக்கு குறித்த விடயம் தொடர்பான ஐயப்பாட்டினைத் தூண்டுகின்ற ஒன்றாகவும் குறித்த ஆய்வின்போது சிறந்த விபரங்களைப் பெறுவதற்கு யார்? என்ன? எப்படி? எங்கே? ஏன்? போன்ற வினாக்களை எழுப்புவதன் மூலம் ஆய்வுப் பிரச்சினைக்கான பரப்பை எல்லைப்படுத்த முடியும். அந்தவகையில் இவ்வாய்விற்குரிய பிரச்சினைகளாக மேல்வருவன முன்வைக்கப்படுகின்றன.§

இன்றைய விஞ்ஞான உலகிலே இந்து சமய சுதேசிகள் பெரும்பாலும் தமது இந்துப் பண்பாட்டினை விட்டு விலகிச் செல்வதற்கான காரணம் என்ன? அந்நிய மக்கள் இந்துப் பண்பாட்டினை நாடி வருவதற்கான காரணம் என்ன? இந்துப் பண்பாட்டிற்குள் அந்நியர்களின் வருகை இந்துப் பண்பாட்டின் வளர்ச்சி நிலைக்கு ஏதுவாக அமைகிறதா? அல்லது வீழ்ச்சி நிலைக்கு ஏதுவாக அமைகிறதா? அந்நியர்களிடம் சென்ற இந்துப் பண்பாடானது எவ்வாறு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது? இந்துப் பண்பாடானது தன் நிலையிருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக எவ்வாறான சவால்களை எதிர் நோக்கி வருகின்றது? அதனால் என்னென்ன மாற்றங்களை இந்துப் பண்பாடு சந்தித்துள்ளது? போன்ற பல்வேறு பிரச்சினைகள் காவாய் இந்து ஆதீனத்தை மையப்படுத்தி இவ்வாய்வில் அடையாளப்படுத்தப்படுகின்றன.§

§

1.5 ஆய்வின் வரையறை

ஆய்வின் வரையறையானது ஆய்வு தொடர்பான மட்டுப்படுத்தல்களை குறிக்கின்றது. அந்த வகையில் இவ் ஆய்வானது மேல்வருமாறு வௌவேறு வழிகளில் வரையறைக்கு உட்படுத்தப்படுகின்றது.§

image இவ்வாய்வானது காவாய் இந்து ஆதீனத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் இவ்வாதீனத்தினையும், இவ்வாதீனத்துடன் தொடர்பு பட்ட விடயங்களையும் மட்டுப்படுத்தியதாகவே காணப்படுகின்றது.§

image குறித்த விடயத்தினை மட்டும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது “இந்து சமய வளர்ச்சியில் அமெரிக்காவிலுள்ள காவாய் இந்து ஆதீனத்தின் வகிபங்கு” என்ற விடயம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றது.§

1.6 ஆய்வு முறையியல்

ஆய்வு மாதிரி ஒன்றிற்கு எல்லா வகையிலும் பொருத்தமுள்ளதாக உபயோகிக்கப்படுவதே ஆய்வு முறையியலாகும். ஆய்வுக்கான வடிவமைப்பு, ஆய்வுக்கான தரவு மூலங்கள் பயன்படுத்தப் பட்டுள்ள தரவுகளின் வகைகள் ஆய்வுக்கான தரவு சேகரிக்கும் முறை, பகுப்பாய்வு முறைகள் மற்றும் பகுப்பாய்வு முறையின் பொருத்தப்பாடு ஆகிய விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. அந்தவகையில் விவரண ஆய்வாக அமையும் இவ்வாய்விலே முதலாம் நிலைத்தரவுகள் இரண்டாம் நிலைத்தரவுகள் மூன்றாம் நிலைத்தரவுகள் எனும் மூன்று மூலங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.§

1.6.1 முதலாம் நிலைத் தரவுகள் (Primary sources)

இவ்வாய்வின் முதலாம் நிலைத் தரவாக நேர்காணல் மூலம் தகவல்கள் பெறப்பட்டன. பல நாடுகளுக்குச் சென்று இந்து சமய சொற்பொழிவுகளை நடாத்தும் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த தற்போதைய அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவரான திருமுருகன் என்பவருடன் நேர்காணல் மூலம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.§

§

1.6.2 இரண்டாம் நிலைத் தரவுகள் (Secondary sources)

இரண்டாம் நிலைத் தரவுகளாக ஆய்வுத் தலைப்பைச் சார்ந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்களில் வெளிவந்த கட்டுரைகளும் ஆவணக் காணொளிகளும் (documentary videos) இணையத்தளங்களும் (official websites and others) பயன்படுத்தப்பட்டுள்ளன.§

1.6.3 மூன்றாம் நிலைத் தரவுகள் (Tertiary sources)

இவ்வாய்விலே மூன்றாம் நிலைத் தரவுகளாக கலைக்கலைஞ்சியங்களும், வரைபடங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.§

1.7 ஆய்வு முன்னோடிகள்

1.7.1 நூல்கள்

All about Kauai Hindu Monastery, 2008, Himalayan Academy, USA -- இந் நூலிலே ஹவாய் இந்து ஆதீனம் எவ்வாறு தோன்றியது? தோற்றுவித்தவர் யார்? இது எங்கு அமைந்துள்ளது? இதன் இந்து சமயம் சார்ந்த செயற்பாடுகள் என்ன? எவ்வாறு இந்த ஆதீனம் வழிநடத்தப்பட்டு வருகின்றது? போன்ற வினாக்களுக்கு சிறந்த பதில்களை உள்ளடக்கியுள்ளது.§

Satguru Bodhinatha Veylanswami, 2009, GURUDEVA’S Spiritual Visions, Himalayan Academy, USA -- இந் நூலானது காவாய் இந்து ஆதீனத்தினை உருவாக்கியவரான சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி (Satguru Sivaya Subramuniyaswami) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறுவதாக அமைகின்றது.§

Satguru Bodhinatha Veylanswami, 2005, Gurudeva’s Toolbox for a Spiritual Life, Himalayan Academy, USA -- இந் நூலிலே சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி (Satguru Sivaya Subramuniyaswami) அவர்களால் முன் வைக்கப்பட்ட நற்சிந்தனைகளும், இந்து சமயம் சார்ந்த செயற்பாடுகளும், அவருடைய அரும்பெரும் பணிகளும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.§

இரா.இராஜசேகரன் 2003 சைவப் பெருவெளியில் காலம், நர்மதா பதிப்பகம் சென்னை 600017 -- இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய சான்றோர்கள் பலரைப் பற்றி இந்நூல் விபரிக்கின்றது. அதில் ஒருவராக சிவாய சுப்பிரமுனிய சுவாமியை “அமெரிக்காவில் சிவம் பரப்பிய அற்புத முனிவர் (1927)” எனும் தலைப்பில் போற்றி பல செய்திகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.§

சுபராஜ்.ந, 2012, இந்து மதமும் மேற்கத்தையவர்களின் ஆய்வுகளும், அறிவகம், கிளிவெட்டி திருமலை -- இந்து சமயம் தொடர்பாக ஆய்வுகளை மேற் கொண்ட மேலை நாட்டைச் சேர்ந்த அறிஞர்களையும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளையும் அவ்வாய்வின் முக்கியத்துவத்தினையும் இந்நூல் சிறப்பாகவும் ஆதார பூர்வமாகவும் விளக்கிக் கூறுகின்றது.§

§

1.7.2 சஞ்சிகைகள்

சற்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி, சற்குரு போதிநாத வேலன் சுவாமி, 1979-2014 ‘Hindusim Today’ -- இச் சஞ்சிகையானது காவாய் இந்து ஆதீனத்தினால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் சஞ்சிகையாகும். இச் சஞ்சிகையில் காவாய் இந்து ஆதீனம் பற்றிய செயற்பாடுகளும் உலகில் பல இடங்களில் நிகழும் இந்து சமயம் சார்ந்த செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.§

சுபராஜ்.ந, 2014, இந்துமத இலக்கியங்கள் தொடர்பான ஆய்விலே ஆசியவியற் கழகத்தின் (The Asiatic Society) வகிபங்கு, பண்பாடு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு - 04 – ஆசியவியற் கழகத்தின் ஊடாக வில்லியம் ஜோன்ஸ் (William Jones), எச்.எச்.வில்சன் (H.Hwilson), சாள்ஸ் வில்கின்ஸ் (Charles Wilkins), கோல்புறுக் (Colebrook), ஜோன் சோர் (Jhon Shore) போன்றோர் எவ்வாறான இந்து சமய இலக்கியம் சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்பதனை சிறப்பாக இந்நூல் விளக்குகின்றது.§

கங்கா, 2011, சுற்றுலாவுக்கு பேர் போன ஹவாய் தீவு, கலைக்கேசரி -- ஹவாய் தீவின் கண்டுபிடிப்பு, புவியியல் அமைவிடம், சுற்றுலாத் தளங்கள் பற்றியும் சிறப்பாக இக் கட்டுரை பேசுவதோடு அங்கு காணப்படுகின்ற இந்து ஆலயம் பற்றிய தகவல்களையும் விளக்கி கூறுகின்றது.§

நந்தினி.மா, 2012, காவிரி ஆற்று வண்டல்..ஓலை அளவு, ஆனந்த விகடன் -- காவாய் இந்து ஆதீன சிவாலயத்தின் கருவறையில் காணப்படும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிவலிங்கத்தினைப் பற்றிய செய்தியைக் கூறுகின்றது.§

1.7.3 ஆவணக் காணொளிகள்

காவாய் இந்து ஆதீனத்தினால் அவர்களது உத்தியோகபூர்வ (official) இணையத்தில் தங்களது ஆதீனத்தின் வரலாறு, செயற்பாடுகள், மேலும் இந்து சமயம் சார்ந்ததுமான நூற்றுக் கணக்கான ஆவணக் காணொளிகளை தரவேற்றம் செய்துள்ளனர். அவைகள் இவ்வாய்விற்கு சிறந்த முன்னோடியாகத் திகழும். available at http://www.himalayanacademy.com/site/search/media_type/video/description/monastery.§

Hindusim Today எனும் சஞ்சிகையினுடைய YouTube பக்கத்திலே Hinduism Today Magazine எனும் தலைப்பில் காவாய் இந்து ஆதீனம் முதன்மைப்படுத்தப்பட்டு உலகில் நிகழும் இந்து சமயம் சார்ந்த விடயங்கள் ஆவணக் காணொளிகளாக உருவாக்கப்பட்டு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. available at http://www.youtube.com/profile?user=HinduismTodayVideos§

§

2012, Hinduism in Ghana, The Hindu Monastery of Africa, Accra, available at http://www.youtube.com/watch?v=2Zq-3A4xnxs&feature=youtube_gdata_player--இவ்வாவணக் காணொளியானது மேற்கு ஆபிரிக்க நாடான கானா (GHANA) நாட்டின் தலைநகரான அக்ராவில் (ACCRA) அமைந்துள்ள இந்து ஆலயத்தினையும், அங்கு நிகழும் நிகழ்வுகளையும், இவ்வாலயத்தினை உருவாக்கியவரான சுவாமி கானானந்த ஸரஸ்வதியினைப் பற்றியும் தெளிவு படுத்துவதாக அமைந்துள்ளது.§

1.7.4 இணையதளங்கள்

https://www.himalayanacademy.com -- இந்த இணையதளமானது அமெரிக்காவின் காவாய் இந்து ஆதீனத்தின் உத்தியோகபூர்வ (official) இணையதளமாகும். இத்தளத்திலே காணப்படும் அனைத்து விடயங்களும் காவாய் இந்து ஆதீனத்தினை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றன.§

http://www.hinduismtoday.com -- காவாய் இந்து ஆதீனத்தின் உறுப்பினர்களால் வெளியிடப்படும் Hindusim Today எனும் சஞ்சிகையினுடைய உத்தியோகபூர்வ (official website) இணையதளமாகும். இவ் இணையதளத்தில் Hindusim Today சஞ்சிகையினை இலத்திரனியல் (PDF) வடிவில் பெற முடிவதோடு உலகளாவிய ரீதியில் இந்து சமயம் தொடர்பான பல தகவல்களும் காணப்படுகின்றன.§

2012.01.27, 108 தாண்டவ மூர்த்திகளைக் கொண்ட வெளிநாட்டின் முதல் சிவாலயம், available at http://www.dinamalar.com/nri/details.asp?id=859&lang=ta -- சன்மார்க்க இறைவன் கோயிலில் முதன்முதலில் 108 தாண்டவ மூர்த்திகளை அமைக்கின்ற செய்தியினையும் அக் கோயிலின் சிறப்புகளையும் விரிவாக இக் கட்டுரை விளக்குகின்றது.§

2014.05.27 03.36pm, தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 13, available at http://www.puthiyatamil.net/t46567-13 -- சற்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தற்சமயம் போதிநாத வேலன் சுவாமிகளின் தலைமையில் உருவாக்கப்பட்டு வரும் சன்மார்க்க இறைவன் கோயிலைப் பற்றிய தற்கால நடப்புத் தகவல்களை தெளிவு படுத்துகின்றது.§

ராம் குமாரசாமி, 2010.0319 07.52pm, ஹவாய் (Hawaii) பயணம், available at http://kollimalai.blogspot.com/2010/03/egypt-trip.html -- இக் கட்டுரையிலே ராம் குமாரசாமி என்பவர் தன் குடும்பத்தோடு ஹவாய் தீவு சென்ற அனுபவங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இதிலே காவாய் ஆதீனம் பற்றியும் பல செய்திகளை புகைப்பட ஆதாரங்களோடு பதிவு செய்துள்ளார்.§

§

சன்மார்க்க இறைவன் கோயில், குவை, ஹவாய் தீவு, அமெரிக்கா, available at (http://kallarperavai.weebly.com/295329942965-298430062975300929652995300729943021-29512984302129803009296530212965301530062991300729943021296529953021-2.html -- சன்மார்க்க இறைவன் கோயிலின் சிறப்பினை விரிவாக விளக்குகின்றது.§

2010.07.01, 2010.07.01, ஆபிரிக்கர் கட்டிய இந்து ஆலயம், available at http://www.bbc.co.uk/tamil/news/story/2010/07/100701_ghanahindutemple.shtml, http://www.bbc.co.uk/tamil/news/story/2010/07/printable/100701_ghanahindutemple.shtml ---- இக் கட்டுரையானது மேற்கு ஆபிரிக்க நாடான கானா (GHANA) நாட்டின் தலைநகரான அக்ராவில் (ACCRA) அமைந்துள்ள இந்து ஆலயம்; மற்றும் அங்கு நிகழும் நிகழ்வுகளையும் விபரிப்பதோடு இவ்வாலயத்தினை உருவாக்கியவரான சுவாமி கானானந்த ஸரஸ்வதியினை பற்றியும் தெளிவு படுத்துகின்றது.§

ரமணன்.வி, 2011.05.02, கானா நாட்டில் ஒரு இந்துக் கோயில் available at http://www.tamilhindu.com/2011/05/hindu-temple-in-ghana/ -- அக்ராவில் (ACCRA) அமைந்துள்ள இந்து ஆலயமும், சுவாமி கானானந்த ஸரஸ்வதியும் இக்கட்டுரையில் முதன்மைப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.§

http://www.ramakrishnananda.com/ -- இந்த இணையத்தளமானது அமெரிக்காவில் உள்ள பக்தி வேதாந்த மிஷனுடைய (The Bhaktivedanta Mission) உத்தியோகபூர்வ (official) இணையத்தளமாகும். இவ் இணையத்தளத்திலே இந்த மிஷனை உருவாக்கியவரான His Holiness Bhaktivedanta Ramakrishnananda Swami Maharaja எனும் யோகியைப் பற்றியும், இவ் மிஷனின் ஊடாக இந்து சமயம் மற்றும் சமூகம் சார்ந்த பணிகளும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.§

http://bhaktivedantaashram.org/-- இந்த இணையத்தளமானது அமெரிக்காவில் உள்ள பக்தி வேதாந்த ஆச்சிரமத்தினுடைய (Bhaktivedanta Ashram) உத்தியோகபூர்வ (official) இணையத்தளமாகும். இவ் இணையத்தளத்திலே இந்த ஆச்சிரமத்தினை ஆ ச்சிரமத்திரனை உருவாக்கியவரான His Holiness Bhaktivedanta Ramakrishnananda Swami Maharaja எனும் யோகிகளினுடைய ஆன்மீகம் சார்ந்த யோகாசனம், வழிபாடு, உள்ளிட்ட பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.§

http://www.ashramgita.com/en/index.html -- இது இத்தாலியில் உள்ள சுவாமி கீதானந்த ஆச்சிரமத்தினுடைய (Svami Gitananda Ashram) உத்தியோகபூர்வ (official) இணையத்தளமாகும். இவ் இணையத்தளத்திலே இந்த ஆச்சிரமத்தினை உருவாக்கியவரான யோகஸ்ரீ சுவாமி யோகானந்த கிரி (Yogasri Svami Yogananda Giri) என்பவரைப் பற்றியும் இவ் ஆச்சிரமத்தினுடைய இந்து சமயம் சார்ந்த செயற்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன. §

§

http://divyaloka.ru -- இது ரஸ்யாவிலே உள்ள திவ்விய லோகா ஆச்சிரமத்தினுடைய (Divya Loka Ashram) உத்தியோகபூர்வ (official) இணையத்தளமாகும். இவ் இணையத்தளத்திலே இவ் ஆச்சிரமம் பற்றிய முழுமையான விபரங்கள் கூறப்பட்டுள்ளன.§

1.8 ஆய்வுப் பகுப்பு

இவ்வாய்வானது ஐந்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறிப்பிட்ட விடயம் ஆராயப்பட்டுவுள்ளது.§

முதலாம் அத்தியாயமானது ஆய்வு முன்மொழிவாக காணப்படுவதனால் அதில் ஆய்வு பற்றிய அடிப்படை விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன. அந்த வகையில் ஆய்வு அறிமுகம், ஆய்வின் நோக்கம், ஆய்வின் எல்லை, ஆய்வு பிரச்சினை, ஆய்வு முறைமை, ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட முன்னோடிகள், ஆய்வுப் பகுப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.§

இரண்டாம் அத்தியாயத்தில் “இந்து சமயமும் மேலைத்தேசத்தவர்களும்” எனும் தலைப்பில் கடந்த நூற்றாண்டுகளிலும் தற்காலத்திலும் இந்து சமய வளர்ச்சியில் பெரிதும் செல்வாக்குச் செலுத்திய மேலைத்தேச அமைப்புகள் மற்றும் அறிஞர்கள் பற்றியும் ஆய்வு வரையறைக்குள் இருந்து ஆராயப்படும் அதேவேளை அவர்கள் அப் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக இருந்த பல காரணிகளும் அடையாளம் காணப்பட்டு விரிவாக விளக்கப்பட்டுள்ளன.§

மூன்றாம் அத்தியாயமானது “அமெரிக்க காவாய் இந்து ஆதீனம்” எனும் தலைப்பின் கீழ் இந்துப் பண்பாட்டை தற்காலத்தில் சிறந்த முறையில் பேணிப்பாதுகாத்து வருகின்றதும், இந்து சமய பெருமைகளை உலகம் முழுவதும் அறியக்கூடிய வகையில் செயற்பாடுகளை மேற் கொண்டு வருவதுமான அமெரிக்காவில் உள்ள காவாய் இந்து ஆதீனம் (Kauai's Hindu Monastery) பற்றி விரிவாக ஆராய்வதாக அமைகின்றது.§

நான்காவது அத்தியாயத்தில் “காவாய் இந்து ஆதீன வளர்ச்சியில் துறவிகளின் வகிபங்கு” எனும் தலைப்பில் காவாய் இந்து ஆதீனத்தின் மிக முக்கியமான இரண்டு தெய்வ அவதாரங்கள் என்று சிறப்பிக்கக்கூடிய சிவாய சுப்ரமுனிய சுவாமி மற்றும் போதிநாத வேலன் சுவாமி ஆகிய இருவரினதும் மற்றும் ஆதீனத்தில் ஆன்ம ஈடேற்றத்திற்காக துறவறத்தினை மேற்கொள்ளும் துறவிகளினதும் செயற்பாடுகள் பற்றியும் அவர்களின் கடமைகள் பற்றியும் இவ்வத்தியாயத்தில் ஆராயப்படுகின்றது.§

இவ் ஆய்வின் ஐந்தாவது அத்தியாயமாக முடிவுரை காணப்படுகின்றது. இதில் ஆய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.§