KAUAI’S HINDU MONASTERY OF AMERICA

image§

இந்து சமயமும் மேலைத்தேசத்தவர்களும்§

2.0 அத்தியாய அறிமுகம்

இந்தியாவில் தோன்றியதும் இலங்கையிலும் சிறப்பான வளர்ச்சியை திகழ்ந்ததுமான இந்து சமயமானது தென்கிழக்காசியாவிலும் பரவிச் சிறப்படைந்துள்ளமையினை வரலாற்று குறிப்புக்கள் எடுத்துணர்த்துகின்றன. இன்றைய நவீன உலகில் அதையும் மீறி உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்துப் பண்பாடானது சிறந்த முறையில் பயில் நிலையில் இருந்து வருகின்றது. அதில் மேலைத்தேசங்களில் இந்து சமயம் சிறப்பாக வளர்ச்சி பெற இரண்டு பிரதான காரணங்களை எம்மால் கூற முடியும் அவையாவன§

image இந்துக்களின் மேலைத்தேசத்திற்கான பயணங்கள்:- இந்து சமயத்தினை சார்ந்தவர்கள் மேலைத்தேசங்களுக்கு சென்று அங்கு தமது சமயம் சார்ந்த விடயங்களை வெளிப்படுத்துதல்§

imageமேலைத்தேசத்தவர்களின் வருகை:- மேலைத்தேசத்தவர்கள் இந்து சமயத்தினால் அல்லது இந்து சமயத்தவர்களினால் கவரப்பட்டு இந்துப் பண்பாட்டினை உள்வாங்கி அதனை வெளிப்படுத்துதல்.§

என்பவைகளாகும். இவற்றில் இந்துக்களின் வெளிநாட்டுப் பயணம் என்று பார்த்தோமானால் குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய மேலைத்தேச நாடுகளுக்கு கடந்த இரு நூற்றாண்டுகளாக இந்து அறிஞர்கள் மற்றும் இயக்கங்களின் செல்வாக்கு மற்றும் இந்துக்களது குடியேற்றங்கள் ஆகியவற்றின் மூலமே இந்தியா இலங்கை உட்பட்ட நாடுகளில் இருந்து இந்துப் பண்பாடானது பெரும்பாலும் மேலை நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்தவகையில் குறிப்பாக விவேகானந்தருடைய சிக்காக்கோ சொற்பொழிவுகள் (1893), அமெரிக்காவில் நிகழ்ந்த சுவாமி இராமதீர்த்தரின் வேதாந்த சொற்பொழிவு (1902), ஹரே கிருஸ்ணா இயக்கம் (International Society For Krishna Consciousness), இராமகிருஸ்ண மிஷன் (Ramakrishna Mission) உட்பட பல அறிஞர்களினதும், அமைப்புக்களினதும் உலகளாவிய ரீதியிலான இந்து சமயம் சார்ந்த செயற்பாடுகள் இந்து சமயமானது மேலைத்தேசங்களில் வளர்ச்சி பெற ஏதுவாக இருந்தது.§

இதனைவிட இந்துக்களின் குடியேற்றங்கள் என்று பார்த்தோமானால் அகதிகளாகவும், கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவுமே மேலை நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்கள் தமது இந்து பாரம்பரியத்தினையும் அங்கு கொண்டு சென்றதோடு பல இந்து ஆலயங்களை அங்கு அமைத்து ஸ்திரத் தன்மையினையும் பேணி வருகின்றமையினை அறிய முடிகின்றது.§

அடுத்ததாக மேலைத்தேசத்தவர்களின் வருகையினாலும் இந்து சமயமானது சிறந்த முறையில் இம் முழு உலகிற்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்துக்களின் மேலைத்தேசத்தினை நோக்கிய பயணத்திற்கு முன்பே மேலைத்தேசத்தவர்களின் இந்து சமய பண்பாடுகளைக் கொண்ட இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கான வருகையானது இடம்பெற்றிருந்தது என்பது ஆதாரத்துடன் கூடிய உண்மையாகும். இவைகளை ஆய்வுத் தலைப்புடன் தொடர்புபடுத்தி ஆராய்வதே இவ்வத்தியாயத்தின் நோக்கமாகும்.§

§

அவ்வாறிருக்க என்னுடைய ஆய்வு தலைப்பான அமெரிக்க காவாய் இந்து ஆதீனத்திற்கும் இந்து சமயமும் மேலைத்தேசத்தவர்களும் என்ற இவ்வத்தியாயத்திற்கும் இடையில் உள்ள தொடர்புகளை பார்க்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறிருக்க மிக முக்கிய காரணமாக எனது ஆய்வுப் பிரதேசமான காவாய் இந்து ஆதீனம் மேலைத்தேச நாடான அமெரிக்காவில் அமைந்துள்ளது என்பதாகும். மேலும் மேலைத்தேசத்தவர்களின் காலனித்துவத்தினாலேயே சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் இலங்கை வருகையானது சாத்தியமடைந்தது என்பதுவும் இங்கு கவனிக்க வேண்டியதே.§

இதனை விட எவ்வாறு மேலைத்தேச அறிஞரான வில்லியம் ஜோன்ஸ் இந்து சமய உண்மைகளை தொடர்ந்து ஆராய்ந்து முழுமையும் அறியப்பட வேண்டும் என்ற காரணத்தினால் ஆசியயியற் கழகத்தினை (The Asiatic Society) ஒர் நிறுவகமாக தோற்றறுவித்து மேலைத்தேச அறிஞர்களைக் கொண்டு அதனை திறன்பட நடாத்தி இன்றுவரை நிலை நிறுத்தியுள்ளாரோ அதனைப்போன்றே அமெரிக்க காவாய் இந்து ஆதீனமானது மேலைத்தேசத்தவரான சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளால் உருவாக்கப்பட்டதோடு மேலைத்தேசங்களைத் துறவிகளாக மாற்றி இன்றுவரை சிறப்பாக இயங்கி வர வழியமைத்துள்ளார்.§

இதனைப்போன்றே மக்ஸ் முல்லரும் எவ்வாறு மேலைத்தேசத்தில் இருந்து கொண்டு உலகம் பூராகவும் வேதம் பற்றிய உண்மைகளையும், உலகம் பூராகவும் இருந்து இந்து சமய விடயங்களை எழுதியவர்களின் நூல்களை தொகுத்து கிழக்கத்திய புனித நூல்கள் (The Sacred Books of the East) என்ற நூலினை உலகிற்கு வழங்கினாரோ அதனைப்போன்றே காவாய் இந்து ஆதீனத்து துறவிகளினால் இந்து சமய உண்மைகளும், பாரம்பரியங்களும், சஞ்சிகை ஊடாகவும், நூல்கள் ஊடாகவும் வெளிப்படுத்தப்பட்டு வரப்படுகின்றன என்பதுவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.§

அடுத்ததாக ஆரம்பத்தில் இவ்வாதீன துறவிகள் ஆங்கில மொழியைச் சார்ந்தவர்களாகக் காணப்பட்டமையினால் இந்து சமயத்தினைப்பற்றி பூரண அறிவினைப் பெறுவதற்காக வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் உட்பட பல இந்து மூலங்களை ஆங்கில மொழி பெயர்ப்பை மையமாக வைத்தே அறிந்திருக்க வேண்டும்.§

இவ்வாறிருக்க “அமெரிக்க காவாய் இந்து ஆதீனம் (Kauai's Hindu Monastery of America)” எனும் எனது ஆய்வுத் தலைப்பின் ஆய்வுப் பிரதேசம் மற்றும் ஆய்வுப் பொருள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்து சமயத்தின் மூலங்களின் மொழி பெயர்ப்பும், அது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு மேலைத்தேசத்தவர்களின் காலனித்துவமானது பெரும் பங்காற்றியுள்ளது. அன்றும், இன்றும் மேலைத்தேசங்களில் இந்து சமயம் தொடர்பான அறிவானது எழுச்சி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இது இருந்தமையினை ஆதாரமாகக் கொண்டு இந்து சமயமும் மேலைத்தேசத்தவர்களின் காலனித்துவமும் எனும் தலைப்பில் இவ் அத்தியாயத்தில் முதன்மை கொடுக்கப்பட்டு ஆராயப்படுகின்றது.§

§

அடுத்ததாக மேலைத்தேசத்தவர்களின் இன்றைய இந்து ஆச்சிரமங்கள் என்ற பகுதியில் மேலைத்தேசங்களில் காணப்படுகின்ற இந்து சமய ஆச்சிரமங்கள் காவாய் இந்து ஆதீனத்துடன் ஒப்பிடுகையில் காலத்தால் பிற்பட்டதாகக் காணப்படுவதோடு அவற்றில் சிலவற்றின் தோற்றத்திற்கு இவ்வாதீனம் அடிப்படையாக இருந்ததனையும் பற்றி ஆராய்வதாக காணப்படும்.§

2.1 இந்து சமயமும் மேலைத்தேசத்தவர்களின் காலனித்துவமும்

பல சமயங்களின் பிறப்பிடமான இந்தியாவில் இந்து சமயமானது மிக நீண்ட வரலாற்றினை கொண்ட ஒரு சமயமாக காணப்படுகின்றது. இதற்கு 1920ஆம் ஆண்டு ஜோன் மார்சல் தலைமையில் கி.மு 2600ஆம் ஆண்டுக்குரியதாகக் கூறப்படும் சிந்து வெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பானது சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்து சமயத்தில் காணப்படுகின்ற கலாசார, நாகரிக, வழிபாட்டு, தத்துவ, அறிவியல் முறைகளைப் பற்றிய ஆராய்ச்சி சார்ந்த விடயங்கள் மேலைத்தேச அறிஞர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் விளைவால் இந்து சமயமானது உலகம் முழுவதும் விஸ்த்தீரணமடைந்தது. இது பற்றி வைத்திய கலாநிதி இ. இராமச்சந்திரன் மேல்வருமாறு குறிப்பிடுகின்றார்.§

“மேற்கத்தையவர்களின் காலனித்துவ ஆட்சியில் விளைந்த பாதக விளைவுகளுக்கு அப்பால் பல சாதக விளைவுகளும் நடந்தேறியிருக்கின்றன. மேற்கத்தையவர்களின் மதப் பரப்பல் நடவடிக்கையின் வெவ்வேறுபட்ட வடிவங்களாக இருப்பினும் சில அம்சங்கள் இந்துக்களின் சமய, கலாசார உலகமயமாக்கலுக்கு அடிப்படையாக இருந்திருக்கின்றன என்ற அடிப்படையில் களிப்படைய முடிகின்றது.”1§

இந்தியாவை காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வந்த மேலைத் தேசத்தவர்கள் அடிமை நாடாக வைத்திருந்ததோடு மக்களையும் அவ்வாறே நடத்தினர். அவர்களின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக கிறிஸ்த்தவ சமயத்தினை பரப்புதல் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணத்தால் இந்திய சமயங்கள் குறிப்பாக இந்து சமயம் பல்வேறு வழிகளில் தாக்கப்பட்டு வீழ்ச்சி நிலைக்கு சென்றதும் ஆதார பூர்வமான உண்மையே. ஆனால் ஒட்டுமொத்தமாக மேலைத்தேசத்தவர்கள் அனைவரையும் காலனிய வாதிகளாக நோக்குவது தவறேயாகும். அவர்களுள் வில்லியம் ஜோன்ஸ் (William Jones), மக்ஸ்முல்லர் (Max Muller), எர்னஸ்ட் பின்பீல்ட் ஹாவல் (Ernest Binfield Havell), விக்டர் கசின் (victor cousin), சேர். அலெக்ஸ்சாந்தர் கன்னிங்காம், ஜேம்ஸ் பெர்குசன் (James Fergusson) உட்பட சிலர் இந்திய சமயங்களை பேணிப்பாதுகாத்தும் வந்துள்ளனர். இதற்கு அவர்களின் இந்திய சமயங்களின் மேல் இருந்த நல்லெண்ணம் சான்றாக விளங்குகிறது.§

§

“இந்திய நாட்டின் கவிதை, இலக்கியங்கள், தத்துவ நூல்கள் ஆகியவற்றை ஆராயும் பொழுது அவைகளிற் பொதிந்துள்ள உண்மைகள் மிகவும் சிறப்புடையனவாகக் காணப்படுகின்றன. ஆவற்றின் உயரிய தத்துவக் கொள்கை நலன்களை நம்முடைய ஐரோப்பிய அறிவு நலனுடன் ஒருங்கு வைத்து ஆராயும் போது மண்டியிட்டு வணங்கிப் பணிய வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.”2§

~ விக்டர் கசின் (victor cousin) §

“ஐரோப்பியர்கள் வெறும் கிரேக்க, உரோம, யூத தத்துவங்களை மட்டும் படித்தால் போதாது. நம்முடைய அக வாழ்க்கை நிறைவானதாகவும், மனநலம் பொதிந்ததாகவும், உலக அளவில் விரிந்ததாகவும், உண்மையிலையே உயரிய மனித இயல்புடையதாகவும் அமைய வேண்டுமாயின் இந்திய தத்துவ நூல்களை படிக்க வேண்டியது மிகவும் மிகவும் இன்றியமையாததாகும். அது நம்முடைய குறைகளைப் போக்கித் திருத்திச் செம்மைப்படுத்த வல்லதாக உள்ளது”3§

~ மக்ஸ்முல்லர் (Max Muller) §

மேலைத்தேசத்தவர்கள் இந்தியாவை தன் வசப்படுத்தும் காலம் வரை இந்திய வரலாறானது முகம்மதியர்களின் படையெடுப்பிலிருந்தே அறியப்பட்டிருந்தது. அதற்கு முன்பு அலக்ஸாண்டர் 326 BCஇல் இந்தியாவிற்கு படையெடுத்து வந்தான் என்ற ஒரு குறிப்பு மட்டுமே இருந்தது. வேறு எவ்விதத்திலும் இந்திய வரலாறானது அறியப்படவும் இல்லை அறிவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.4 இவ்வாறிருக்க இந்தியாவில் பணியாற்றுவதற்காக வந்த மேலைத்தேசத்தினை சேர்ந்த சிலர் தனது சொந்த ஆர்வத்தினால் இந்தியாவினுடைய வரலாறு, மொழியியல், கலைகள், சமயம் உட்பட பண்பாட்டினுடைய பல கூறுகளையும் பல தடைகளையும் கடந்து ஆராய முற்பட்டனர் அதில் வெற்றியும் கண்டனர்.§

இந்துப் பண்பாடு பற்றிய ஆராய்ச்சிகளின் உச்சக்கட்டத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டில் காணலாம். இக்கால கட்டத்தில் மேலைத்தேச அறிஞர்கள் பலர் இந்துப் பண்பாட்டினுடைய கூறுகளைப் பற்றி அறிவதில் மிக்க ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். கிரேக்க இலக்கியங்களின் சிந்தனைகள் ஐரோப்பியாவினுள் புகுந்த போது அங்கு எவ்வாறான மறுமலர்ச்சி ஏற்பட்டதோ அதே போன்றதொரு மாற்றத்தினை பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேல் நாடுகளில் புராதன இந்திய இலக்கியச் சிந்தனைகளின் அறிமுகம் ஏற்படுத்தின. இவ்வாறிருக்க இந்து சமயத்தின் மூலங்களான வேதங்கள், ஆகமங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், பகவத்கீதை, புராணங்கள், ஸ்மிருதிகள், அர்த்தசாஸ்த்திரம், இதிகாசங்கள் உட்பட பல நூல்களையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதோடு, பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப்பட்டும் இந்துப் பண்பாடானது மேலைத் தேசத்தவர்களால் உலகறியச் செய்யப்பட்டது.§

§

இவர்களுள் வில்லியம் ஜோன்ஸ் (William Jones), மக்ஸ்முல்லர் (Max Muller) ஆகியோர் அவர்களின் சிறந்த செயற்பாடுகளின் காரணத்தினால் இந்து சமயத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் பணத்திற்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்லது மத மாற்றச் செயலுக்காகவோ இந்து சமயம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை மாறாக இவர்கள் இந்து சமயத்தினையும் சமஸ்கிருத மொழியையும் நேசித்தே தமது இந்து சமயம் சார்ந்த பணிகளை மேற்கொண்டனர்.§

வில்லியம் ஜோன்ஸினுடைய பணிகளும் அவரால் உருவாக்கப்பட்ட ஆசியியற் கழகத்தின் (The Asiatic Society) ஊடாக ஆரம்ப கால ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சில மேலைத்தேச அறிஞர்கள் பற்றியும் இதனைத் தொடர்ந்து மக்ஸ்முல்லரின் ஆய்வுப்பணிகளுடன் சேர்த்து அவரால் உருவாக்கப்பட்ட The Sacred Books of the East எனும் நூற்றொகுதியில் உள்ளடக்கப்பட்ட இந்து சமயம் சாரந்த நூல்களின் மூலம் தமது பணிகளை மேற்கொண்ட அறிஞர்களைப் பற்றியும் இவ்வத்தியாய நோக்கத்தில் இருந்து ஆராய்வோம்.§

கிறிஸ்தவ மிசனரிகளைச் சேர்ந்த பலர் கி.பி 1757இற்கு முன்பு இந்திய புராதன மொழிகளைப்பற்றிய அறிவினை சிறிய அளவில் கொண்டவர்களாக காணப்பட்டிருக்கின்றனர். அவர்களுள் றொபேர்ட் டி நொபிலி எனும் அறிஞர் குறிப்பிடத்தக்கவர். இவர் 1606ஆம் ஆண்டு இந்தியா சென்று பீற்றர் ரொப் என்கின்ற ஜேர்மனியரிடம் சமஸ்கிருதத்தை ஆறு வருடங்கள் கற்றார். பின்பு சமஸ்கிருத இலக்கண நூலொன்றை உருவாக்க முயன்ற இவர் அவ் வேலையை தொடங்கும் முன்பே 1668ஆம் ஆண்டு ஆக்ராவில் உயிரிழந்துவிட்டார். இதனைப் போன்று 1782ஆம் ஆண்டு யசுர் வேதத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்தது ஆனால் அதன் மூலப்பிரதி போலியானது என்ற கருத்தின் அடிப்படையில் அது நிராகரிக்கப்பட்டது.5 இந் நிலையே வில்லியம் ஜோன்ஸ் (William Jones) இந்து சமய மூலங்களை மொழி பெயர்த்தும், சில ஆய்வுகளையும் மேற்கொண்டும் முதன் முதலிலே தனது பணியினை செவ்வனே செய்தார்.§

§

2.1.1 ஆசியியற் கழகம் (The Asiatic Society)

நீதிபதியாக 1772ஆம் ஆண்டு இந்தியா வந்த வில்லியம் ஜோன்ஸ் லண்டனில் 1660ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்ற ரோயல் கழகத்தில் ( The Royal Society) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.6 இவரின் அவ் இருப்பானது இந்தியாவிலும் அவ்வாறான ஒரு கழகத்தினை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தினை வழங்கியது. அவ்வாறு இருக்கையிலையே பண்டைய இந்தியாவின் சட்ட முறைகள், அரசியல் அமைப்பு, வேத நூல்கள் கணிதம், வடிவியல், சொற்கலை, கவிதை, ஒழுங்குமுறை, கலைகள், உற்பத்திகள், விவசாயம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முதன்மைப்படுத்தி அவைகளை வெளிப்படுத்தும் நோக்குடன் பதிவுக் குறிப்பொன்றைத் தயாரித்தார். அவரால் தயாரிக்கப்பட்ட பதிவுக் குறிப்பு 1784ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சில ஈடுபாடுடைய ஐரேப்பிய புத்தி ஜீவிகளுக்கு அனுப்பப்பட்டு, 1784ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி கல்கத்தா உச்ச நீதி மன்றத்தில் (Suprime Court) யூரிகளினுடைய சபையில் ஒன்று கூடி ஆராய தீர்மானித்தனர்.7§

அதன் பின்னர் தலைமை நீதிபதியான ரொபர்ட் சேம்பர்ஸ் (Sir Robert Chambers) தலைமையில் குறித்தாற் போன்று ஒன்று கூடல் நிகழ்ந்தது. இந்த ஒன்று கூடலின் போது Justice John Hyde, John Carnac, Henry Vansittart, John Shore, Charles Wilkins, Francis Gladwin, Jonathan Duncan உட்பட 30 ஐரோப்பிய அறிஞர்கள் பங்கு பற்றியிருந்தனர். இதன் போது வில்லியம் ஜோன்ஸ் தனது நோக்கத்தினை வெளிப்படுத்திய போது இந்தியாவை §

"Nurse of sciences" (ஆசியாவின் பண்டைய அறிவியலின் தாதி)
"inventress of delightful and useful arts." (பயன் மிக்க நுண்கலைகலைக் கண்டு பிடித்தவள்)
§

என சிறப்பித்து கூறினார். இவ் ஒன்று கூடலின் இறுதியில் வில்லியம் ஜோன்ஸின் நோக்கங்களும், கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் பின் ஆசியியற் கழகம் (The Asiatic Society) என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.8§

அவ்வாறிருக்க இக் கழகத்தினுடைய முதலாவது தலைவராக வொரன் ஹஸ்டிங்ஸ் (Warren Hastings) என்பவரும் உப தலைவராக வில்லியம் ஜோன்சும் தெரிவு செய்யப்பட்டர். ஆனால் வொரன் ஹஸ்டிங்ஸ் (Warren Hastings) தலைவர் பதவியை ஏற்க மறுத்ததன் காரணத்தினால் வில்லியம் ஜோன்ஸே தொடர்ந்து தலைமைப் பொறுப்பினை ஏற்று 1793 ஆம் ஆண்டு வரை வழிநடத்தி வந்தார். இவரது இறப்பிற்குப் பிறகு இக் கழகம் சில காலம் பிரகாசத்தினை இழந்த போதிலும் சில காலங்களுக்கு பின்பு பொறுப்பேற்ற திறமை மிக்க தலைவர்களாலும், செயலாளர்களாலும் மீண்டும் சிறப்பான முறையில் வழிநடத்திச் செல்லப்பட்டு இன்று வரை சிறந்த முறையில் இக் கழகம் இயக்கப்பட்டு வருகின்றது.9 (அட்டவணை : 01) §

§

1829ஆம் ஆண்டு வரை இக் கழகத்தின் உறுப்பினர்களாக ஐரோப்பியர்களே இருந்து வந்தனர். ஆனால் 1829 ஆண்டிற்குப் பின்பு இந்தியர்கள் பலர் இக்கழகத்தினுள் உள்வாங்கப்பட்டனர். இதற்கமைய முதன் முதலாக பிரசன்னகுமார் தாகூர், த்வர்க்கனாத் தாகூர், ராம்சமால்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு, 1885ஆம் ஆண்டு ராஜேந்திரலால் என்ற இந்தியர் முதன் முதலாக தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.10§

மேலும் இக்கழகமானது நூலகம், அரும்பொருட்காட்சியகம், பதிப்பகம் போன்றவற்றினை அமைத்து சிறந்த முறையில் நடாத்தி வந்துள்ளது. அந்தவகையில் நூலகமானது 1866இல் இக்கழகத்தினுடைய பெயரானது பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றத்திற்கு உள்ளாகி வந்துள்ளது. அவ்வாறிருக்க என வெவ்வேறு பெயர்களைக் கொண்டு இயங்கி வந்துள்ளது. எவ்வாறு இருந்த போதிலும் கல்கத்தாவில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட அதே பெயரிலேயே பிற்காலத்தில் உலகம் முழுவதும் உள்ள கிளைகள் அழைக்கப்பட்டு வருகின்றன.11§

image The Asiatic Society (1784-1832) §

image The Asiatic Society of Bengal (1832-1935) §

image The Royal Asiatic Society of Bengal (1936-1951) §

image The Asiatic Society (again since July 1951) §

ஆசியியற் கழகத்தின் ஊடாக பல மேலைத்தேசத்து அறிஞர்களும், இந்திய அறிஞர்களும் இக் கழக உருவாக்க காலத்தில் இருந்து இந்து சமயம் சார்ந்த பல இலக்கியங்களை ஆய்வுகளை மேற்கொண்டும், மொழி பெயர்ப்புக்களை செய்தும் இந்து சமய உண்மைகளை உலகறியச் செய்துள்ளனர். அவ்வாறிருக்க இக்கழகத்தின் ஊடாக வெளியிடப்பட்ட மேலைத்தேசத்து ஆரம்ப கால அறிஞர்களின் ஆக்கங்கள் மட்டுமே இங்கு வெளிப்படுத்தப்படுகின்றன.§

2.1.1.1 வில்லியம் ஜோன்ஸ் (William Jones)

இந்தியப் பண்பாட்டினுடைய கூறுகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய மேலைத்தேச அறிஞர்களுள் வில்லியம் ஜோன்சுக்கு காலத்தினை அடிப்படையாகக் கொண்டு முதல் நிலை அளிக்கப்பட்டு வருகின்றது. இவர் 1746ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி லண்டனில் பிறந்தார். தனது 20 வயதிலேயே தனது தாய் மொழியான ஆங்கிலம் உட்பட பிரெஞ்சு, ஸ்பானிஸ், போர்த்துக்கீசியம், கிரேக்கம், இலத்தீன், அரபிக், பெர்சியம் போன்ற மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகக் காணப்பட்டார். ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் பட்டப்படிப்பினை முடித்த இவர் 1783ஆம் ஆண்டு கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டு இந்தியா வந்தடைந்தார்.12§

§

இந்தியாவிற்கு வந்த வில்லியம் ஜோன்சை இந்துப் பண்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட இந்தியப் பண்பாடானது பெரிதும் கவர்ந்தது. இந்தியப் பண்பாட்டினை அறிய வேண்டுமென்றால் சமஸ்கிருதத்தினை அறிய வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்த வில்லியம் ஜோன்ஸ் பல்வேறு முயற்சிகளின் பின் “பிராம்லோசின்” கலாபூசன என்ற வைத்திய குலத்தினைச் சேர்ந்தவரின் உதவியோடு சமஸ்கிருத மொழியினை கற்றுத் தேர்ந்தார்.13 ஏற்கனவே அவர் அறிந்திருந்த பழம்பெரும் மொழிகளுடன் ஒப்பீட்டு ரீதியான ஆய்வினை மேற்கொள்வதற்கும், சமஸ்கிருத மொழியில் அமைந்த பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கும், சமஸ்கிருத மொழியின் அருஞ்சிறப்புக்களை மேலைத்தேச அறிஞர்களுக்கு அறிமுகஞ் செய்வதற்கும், ஆசியியற் கழகத்தினை (The Asiatic Society) தோற்றுவிப்பதற்கும் அவரை இந்தியாவிற்கு கொண்டு வந்த காலனித்துவமே அடிப்படையாக இருந்தது என்று கூறினால் அதனை யாராலும் மறுக்க இயலாது.§

1789ஆம் ஆண்டு காளிதாசரினுடைய அவிக்ஞான சாகுந்தலம் என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவருடைய இம் மொழி பெயர்ப்பை மூலமாகக் கொண்டு ஜோர்ஜ் போஸ்டர் என்பவர் ஜேர்மன் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது. இதனூடாக வெளிநாடுகளில் வாழ்ந்த ஆங்கில மற்றும் ஜேர்மன் மொழிகளைக் கற்றறிந்தவர் மத்தியில் இந்நூல் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு இந்தியாவில் சமஸ்கிருதம் தவிர்ந்த ஏனைய மொழியைச் சேர்ந்த ஆங்கிலப் புலமையாளர்களும் வில்லியம் ஜோன்சின் இம் மொழி பெயர்ப்பால் பெரிதும் நன்மையடைந்தனர்.§

1789ஆம் ஆண்டு ஜெய தேவரினால் குப்தர்களினுடைய ஆட்சிக் காலத்தில் எழுதப் பெற்ற கீத கோவிந்தம் எனும் நுலானது மொழி பெயர்க்கப்பட்டு பதிப்பித்ததோடு 1792ஆம் ஆண்டில் காளிதாசரினுடைய ருது சம்ஹாரத்தினை மொழிபெயர்த்து வெளியிட்டார். மேலும் மனு சம்ஹிதையினை நன்கு ஐயமின்றி கற்று மொழி பெயர்ப்பு செய்தார். ஆனால் இவர் இறந்த பின்பே W.E.ஹெப்கின்ஸ் என்பவரால் Dthe Ordinanceis in manu”எனும் பெயரில் வெளியிடப்பட்டது.§

§

வேதங்களை பொறுத்தவரையில் இவரது பணிகள் குறைவாகவே காணப்படுகின்றது. பத்து தொகுதிகளாக வெளிவந்த இவரது ஆக்கங்களில் மொத்தமாக நான்கு பாகங்கள் மட்டுமே வேதங்களைப் பற்றியதாக அமைகின்றது. அதில் காயத்திரி மந்திரத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு பெரிதும் வரவேற்கத் தக்கது. அதனைப் போன்று உபநிடதங்களைப் பொறுத்தவரையில் ஈஷ உபநிடதத்தின் பதினெட்டு செய்யுட்களையும், மைத்ராயிணி உபநிடதத்தின் ஒரு பகுதியினையும் மொழி பெயர்த்து பதிப்பித்துள்ளார்.14§

“சமஸ்கிருதம் கிரேக்க மொழியைக் காட்டிலும் வளர்ச்சியடைந்தது, இலத்தீன் மொழியைக்காட்டிலும் மிகவும் பரந்தது” எனும் கருத்தினை முன் வைத்து சமஸ்கிருத மொழியின் சிறப்பினை வெளிக்கொணர்ந்த வில்லியம் ஜோன்ஸ் மொழிகள் தொடர்பான ஒப்பியல் ஆய்வில் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றார். ஒரு கடவுள் கொள்கையை சிறு வயதில் இருந்து நம்பி வந்த ஜோன்ஸ் இந்து தெய்வங்களைப் பற்றியும், தேவதைகளைப்பற்றியும் உள்ள பல பாடல்களை இவர் மொழி பெயர்த்துள்ளார். குறிப்பாக பூசன், சூரியன் போன்ற தேவர்களைப் பற்றியும், நீரில் ஒளிந்திருக்கும் நாராயணன் பற்றியும் உள்ள பல பாடல்கள் இவரால் மொழி பெயர்க்கப்பட்டன. இதனைத் தவிர தனியாகவும், வில்சன் என்பவருடனும் இணைந்தும் பல ஆய்வுக் கட்டுரைகளை ஆசியியற் கழகத்தில் சமர்ப்பித்துள்ளார்.15§

2.1.1.2 சார்ள்ஸ் வில்கின்ஸ் (Charles Wilkins)

இந்து சமயத்தவர்களின் புனித நூலாகக் கருதப்படும் பகவத்கீதையினை 1785ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்ததோடு 1787இல் கீதோபதேசத்தினையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மேலும் இந்து சமய வரலாற்று காவியமான மஹாபாரதத்தினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும் இவராவார். இந்தியாவில் பல்வேறு இடங்களில் காணப்பட்ட சமஸ்கிருத கல்வெட்டுக்களை கண்டறிந்து அதனை படியெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து பதிப்பித்ததுடன் சமஸ்கிருத மொழியில் இலக்கண ஆய்வுகள் பலவற்றையும் மேற்கொண்டுள்ளார்.16§

2.1.1.3 எச்.எச்.வில்சன் (H.H wilson)

1811 - 1815 வரையான காலப்பகுதியில் ஆசியியற் கழகத்தின் செயலாளராக இருந்து அளப்பெரிய பல பணிகளை இந்து சமயத்திற்காக மேற்கொண்டுள்ளார். அத்தோடு பல இந்து சமய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பும் செய்துள்ளார். அவற்றில் காளிதாசரினால் எழுதப் பெற்ற மேகதூதத்தினை 1813ஆம் ஆண்டும், இந்து சமய தெய்வங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் பதினெண் புராணங்களையும், கங்கனரினால் எழுதப் பெற்ற ராஜதரங்கினி என்ற நூலையும் (1825) ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புச் செய்தார். மேலும் இந்து நாடக அரங்கு தொடர்பாக மூன்று பெரிய அங்கங்களை 1827ஆம் ஆண்டு எழுதியமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.§

§

2.1.1.4 கோல்புறுக் (Colebrook)

இவர் 1806 - 1815 வரையான காலப்பகுதியில் ஆசியியற் கழகத்தின் தலைவராக இருந்து இந்து சமயத்திற்காக பல பணிகளை மேற்கொண்டுள்ளார். அத்தோடு ஜகந்நாத் தரகபன்ஜனன் என்பவர் எழுதிய விவடவங்கர்னாவ எனும் ஆக்கத்தினை Digest of Hindu law on contract and successions எனும் பெயரில் 1798ஆம் ஆண்டும், அமரகோசத்தினுடைய முக்கிய பதிப்பொன்றை 1808ஆம் ஆண்டும் வெளியீடு செய்துள்ளார்.17§

2.1.1.5 ஜோன் சோ (John Shore)

யோக வசிட்டம் தொடர்பாக ஆங்கிலத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள இவர் இந்துப் பண்பாடு தொடர்பாக ஆசியியற் கழகத்தின் ஊடாக ஆறு ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.18§

எனவே இந்தியப் பண்பாட்டினை உலகிற்கு வெளிக்கொணர முற்பட்ட வில்லியம் ஜோன்ஸ் தனது தனிப்பட்ட முயற்சியினால் ஆர்வம் மிக்க சில அறிஞர்களை ஒன்று திரட்டி ஆசியியற் கழகத்தினை தோற்றுவித்தார். பின்னர் அக்கழகத்திலேயே தன் வாழ்நாட்களை முழுமையாக தியாகம் செய்து பல பணிகளை மேற் கொண்டு இன்று இந்து சமய அறிஞர்களில் ஒருவராக போற்றக் கூடிய அளவிற்குச் சிறப்பான நிலையில் இவர் வைத்து பார்க்கப்பட வேண்டியவராகக் காணப்படுகின்றார்.§

2.1.2 கிழக்கத்திய புனித நூல்கள் (The Sacred Books of the East)

கீழைத்தேச சமயங்கள் பற்றிய தீவிரமான தேடல்களின் காரணமாக கிழக்கத்திய புனித நூல்கள் அதாவது The Sacred Books of the East எனும் நூற்தொகுதி மக்ஸ்முல்லரினால் உருவாக்கப்பட்டது. இவர் “இந்துக்களின் வேத நூல்கள் பிரதிபலித்துக்காட்டும் கலாசாரப் பண்பாட்டு அம்சங்கள் ஐரோப்பிய பண்பாடுகளின் முன்னோடியாக உள்ளன” எனும் தன் கருத்தினை தெளிவு படுத்தும் வகையில் இந் நூலை உருவாக்க முனைந்துள்ளார்.§

கிழக்கத்திய புனித நூல்கள் (The Sacred Books of the East) எனும் நூற்தொகுதியானது 1879ஆம் ஆண்டு தொடக்கம் 1910ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் வெளிவந்த கீழைத்தேசவியல் தொடர்பான ஐம்பது நூல்களை உள்ளடக்கிய ஒரு மிகப் பெரும் தொகுதியாகும். முக்ஸ்முல்லரினால் உருவாக்கப்பட்ட இந் நூற்தொகுதியினை ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகம் வெளியீடு செய்ததுடன் இந் நூற்றொகுதி முழுவதற்குமான முறையான பதவிப் பெயரிடலை UNESCO எனும் உலக நிறுவனம் மேற்கொண்டமையும் சுட்டிக்காட்டத்தக்கதாக அமைகின்றது.19§

§

இந் நூற்றொகுதியினுள் இந்துசமயம், பௌத்தசமயம், ஜைனசமயம், சீனசமயங்கள், பார்சிசமயம், இஸ்லாமிய சமயம் ஆகிய சமயங்கள் கூறும் முக்கிய புனிதமான கருத்துக்கள் உள்ளடங்குகின்றன. இதில் 75% க்கு மேல் இந்திய சமயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க இந்நூற்றொகுதியில் உள்ள 50 நூல்களில் 21 நூல்கள் இந்து சமயம் சார்ந்ததாக காணப்படுகின்றன. இவற்றில் மூன்று தொகுதிகளில் (1ஆம், 15ஆம், 32ஆம் தொகுதிகள்) பதிப்பாசிரியரான மக்ஸ்முல்லரின் நூல்கள் காணப்படுவதோடு ஏனைய 18 தொகுதிகளில் கஷிநாத் ட்ரிம்பக் டெலங் (Kashinath Trimbak Telang), ஜோர்ஜ் திபாட் (George Thibaut), மோரிஸ் புளூம்பீல்ட் (Maurice Bloomfield), ஹேர்மன் ஓல்டன்பேர்க் (Hermann Oldenberg), ஜூலியஸ் எஜலிங் (Julius Eggeling), ஜோர்ஜ் பெலர் (Georg Buhler), ஜூலியஸ் ஜொலி (Julius Jolly), போன்ற ஏழு ஆசிரியர்களின் நூல்கள் அமையப்பெற்று காணப்படுவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். (அட்டவணை - 02) ஜேர்மன்§

2.1.2.1 மக்ஸ்முல்லர் (Max Muller)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்து சமயம் பற்றிய ஆராய்ச்சிகளின் வளர்ச்சி உச்சக்கட்டத்தில் காணப்பட்டது. அவ்வாறிருக்க இந்திய இலக்கியங்களை ஆய்வு செய்து மேல் நாட்டவர்களுக்கு அறிமுகம் செய்வதிலும், அவற்றைப் பதிப்பித்து வெளியிடுவதிலும் 1823ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஜேர்மன் தேசத்தில் பிறந்து இந்திய தேசத்தினை ஆராய்ந்த மக்ஸ்முல்லருக்கு நிகராக அக்காலக்கட்டத்தில் வேறு யாரையும் சொல்ல முடியாது. இவரது பணியானது இந்து சமயத்திற்கு மிகப் பெரும் கொடையாகவே அமைந்து காணப்பட்டிருக்கின்றது. இவர் வேத புராண மற்றும் ஒப்பியல் ஆய்வுகளை திறம்பட மேற்கொண்டதோடு ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளை உள்ளதை உள்ளவாறு கூறியதன் விளைவால் பல்வேறு எதிர்ப்புகளை எதிர் நோக்க வேண்டியும் ஏற்பட்டது. எவ்வாறிருப்பினும் மக்ஸ்முல்லரின் இந்து சமயம் சார்ந்த ஆய்வுகளின் முடிவுகள் பெரும்பாலும் இந்து சமயத்திற்கு சாதகமாகவே அமைந்திருந்தது. அந்தவகையில் இவரால் உருவாக்கப்பட்ட கிழக்கத்திய புனித நூல்களைப் (The Sacred Books of the East) பற்றி பார்ப்பதற்கு முன்பதாக இவருடைய இந்துசமயம் சார்ந்த எனைய ஆய்வுகளை சுருக்கமாக நோக்குவது அவசியமாகும்.§

வேத காலத்து நாகரிகமே ஐரோப்பிய செவ்விய பண்பாடுகளுக்கு முன்னோடியானது என்ற சிந்தனையானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வலுவடைந்திருந்தது. இதனை பின்னணியாகக் கொண்டே மக்ஸ்முல்லரது வேதம் பற்றிய ஆய்வு முடிவுகள் தீவிரமாகவும், எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவனவாகவும் அமைந்திருந்தன. இவ்வாறிருக்க ஜேர்மனிய தேசத்தைச் சேர்ந்த மக்ஸ்முல்லரை இங்கிலாந்து அரசாங்கத்திற்கு பாரன் கிறிஸ்டியன் கார்ல் ஜோஸியஸ் வான் புன்ஸென் (Baron Christian Karl Josius von Bunsen) என்பவர் அறிமுகம் செய்தார். 20 இதனைத் தொடர்ந்து 1847ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் கிழக்கிந்திய வர்த்தக கம்பனியானது ரிக் வேதத்தினை மொழி பெயர்க்கும் பணியினை மக்ஸ்முல்லருக்கு வழங்கியது.21§

§

கிழக்கிந்திய கம்பனிக்கு இந்த ரிக் வேத மொழி பெயர்ப்பில் உள்ள ஈடுபாடானது கிறிஸ்தவ சமயத்தினை பரப்புவதற்காகவும், சிறந்த வருமானத்திற்காகவும், இந்திய மக்களின் நன்மதிப்பினை பெறுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு சதிச் செயலாகவே பெரும்பாலும் காணப்பட்டது. ஆனால் மக்ஸ்முல்லரின் இந்த மொழி பெயர்ப்பில் உள்ள ஈடுபாடானது இத்தகைய நோக்கங்களை பிரதானமாக கொண்டிருக்கவில்லை. இதனை பல ஆதாரங்களின் (கடிதங்கள், குறிப்புக்கள்) மூலமாக அறியலாம். குறிப்பாக மலபாரி என்பவருக்கு எழுதிய கடிதத்தில்§

“வேதம் தொன்மையான ஆவணம், மிகப் பழங்காலத்துச் சூது வாது அற்ற மனித இனத்தின் சிந்தனைகளே வேதம்”22§

என்று கூறியதிலிருந்தும், செவாலியே புன்ஸென் என்பவருக்கு எழுதிய கடிதத்தில்§

“ஒரு சமயப்பரப்பாளனாக இந்தியாவிற்கு செல்ல நான் விரும்பவில்லை. அது ஊர்ச் சமயபோதகரின் தயவை வேண்டியிருக்க வேண்டியதாகிவிடும். ஓர் ஆட்சிமுறை அதிகாரியாக ஆவதிலும் அக்கறையில்லை. இது அரசாங்கத்தை அண்டியிருக்க வேண்டியதாகிவிடும்”23§

என்று கூறியதிலிருந்தும் மக்ஸ்முல்லர் மிகவும் ஆர்வத்துடனும், சிரத்தையுடன் ரிக் வேதத்தினை மொழிபெயர்த்திருப்பது தெரிய வருகின்றது.§

ரிக் வேதம் முழுவதையும் முழுமையாக மொழி பெயர்க்கும் நோக்கத்தோடு ஈடுபட்ட இவர் இங்கிலாந்திலுள்ள வேதம் தொடர்பான ஏட்டுச் சுவடிகளையும், குறிப்புக்களையும் ஆதாரமாகக் கொண்டதோடு ரிக் வேதத்திற்கு சாயனரால் எழுதப்பட்ட உரையை மையமாகக் கொண்டே இம் மொழி பெயர்ப்பினை மேற்கொண்டார்.24 1028 பாசுரங்களையும், 10580 செய்யுள்களையும், 153826 வார்த்தைகளையும் கொண்ட ரிக் வேதத்தினை மொழி பெயர்க்க உண்மையான ஈடுபாட்டுடனும், விடாமுயற்சியுடனும் 1849ஆம் ஆண்டு ஆரம்பித்த இவர் 25 வருட கால உழைப்பின் பின் 1874ஆம் ஆண்டு முழுமையாக மொழி பெயர்த்து பதிப்பித்து வெளியிட்டார். இது இவரது மிகப் பெரும் சாதனையாகவே கொள்ளப்படுகின்றது. இவர் தனக்கு கிடைத்த இந்த வாய்பினை §

“…… அதிஸ்டவசத்தால் இந்த இறைமையாளர்களின் மிக ஆணித்தரமான விளக்கவுரையோடு ரிக் வேதத்தை முதன்முதலாகவும், முழுமையாகவும் பதிப்பிற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.” எனக் கூறுகின்றார்.25§

§

மக்ஸ்முல்லர் வேத காலம் பற்றி கூறும் போது இயற்கையில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விற்கும் காரண காரிய தொடர்பை கற்பிக்கின்ற தன்மை வேதகாலத்தில் காணப்பட்டது. மனித ஆற்றலுக்கும், இயற்கையின் இயங்கு நிலைக்கு அப்பாற்பட்டதும் இவற்றை இயக்கி நிற்பதுமான மூலப் பொருள் உள்ளது என்ற நம்பிக்கையே வேதங்களில் தெய்வம் எனச் சித்திரிக்கப்பட்டு உபநிடதங்களில் பிரம்மம் எனும் தத்துவநிலைக்கு முதிர்ச்சியடைந்தது எனக் கூறுகின்றார். மேலும் வேதகால இறைத் தத்துவ கோட்பாட்டினை பலவாறு பகுத்துக் கூறுகின்றார்.26§

imageஅனைத்திறைமைக் கோட்பாடு :- ஆரம்ப காலத்தில் வேத கால மனிதன் இயற்கை சக்திகளை (மழை, இடி, தீ, காற்று, நீர்) நேரடியாகவே வணங்கினான் இதனையே அனைத்திறைமைக் கோட்பாடு எனும் பொருள்தரும் பதத்தில் மக்ஸ்முல்லர் குறிப்பிடுகின்றார்.§

imageபல கடவுட்கோட்பாடு (பொலித்தீயிசம்) :- காலப்போக்கில் அச்சக்திகளுடன் தொடர்புடையதாக தெய்வங்களை உருவகித்து வழிபட்டனர் இதனையே பல கடவுள் கோட்பாடு எனும் பொருள்தரும் பதத்தில் மக்ஸ்முல்லர் குறிப்பிடுகின்றார். §

imageஒரு தெய்வ கோட்பாடு (மொனோதீசம்) :- “ஏகம் சத் விப்ரா பஹீதா வதந்தி” என்ற வாசகத்திற்கு அமைவான கோட்பாடு அதாவது உள் பொருள் ஒன்றே அதனையே அறிஞர்கள் பலவாறு கூறுவர் என்ற தமிழில் பொருள் தரும் இவ்வாசகம் ஒரு தெய்வ கோட்பாட்டினை கூறி நிற்பதாக மக்ஸ்முல்லர் குறிப்பிடுகின்றார். §

imageஹெனோதீயிஸம் :- ஒவ்வொரு கடவுள் ஒவ்வொரு நேரத்தில் உயர்நிலையில் வைக்கப்பட்டு ஒரு கடவுளையடுத்து இன்னொரு கடவுளை வழிபடுதலை ஹெனோதீயிஸம் எனும் பதத்தில் மக்ஸ்முல்லர் குறிப்பிடுகின்றார்.§

இவ்வாறு வேதம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட மக்ஸ்முல்லர் இந்து புராணங்களைப் பற்றியும் விளக்கங்களை எழுதியுள்ளார். இயற்கைச் சக்திகளது யதார்த்த பூர்வமான உருவங்களை புராணக்கதைகள் என அவர் வலியுறுத்தினார். நுட்பமான கருத்துக்களை விளக்குமிடத்து தேவர்கள் தோன்றினார்கள் எனவும், கற்பனை பாத்திரங்களாக அவர்கள் மாற்றமடைந்தனர் என்று அவர் குறிப்பிட்டு விளக்குகின்றார்.§

அடுத்ததாக இவருடைய ஒப்பியல் சார்ந்த ஆய்வானது பல விமர்சனத்திற்கு உள்ளான ஆய்வாக காணப்படுகின்றது. ஆரியப்பண்பாடுகளுக்கும், யூத, கிறிஸ்தவ சமயங்களுக்கும் இடையிலான ஒன்றுபட்ட தன்மையினை வெளிப்படுத்த முனைந்த இவர் புராதன இந்தியர்களும் இந்து ஐரோப்பியர்களும் ஒரு மொழிக் குடும்பத்தின் வழிவந்தவர்கள் எனும் இனபேதம் கடந்த கருத்தினை முன்வைத்துள்ளார். 27 இருப்பினும் இவரின் இவ்வாய்வானது பூரணமடையவில்லை இதற்கான பிரதானமான காரணமாக இவர் இக் கருத்தினூடாக கிறிஸ்தவ எதிர்ப்பை சம்பாதித்ததினையே குறிப்பிட முடியும். §

§

கிழக்கத்திய புனித நூல்கள் (The Sacred Books of the East) எனும் நூலின் ஆசிரியரான மக்ஸ்முல்லர் அந் நூலின் ஐம்பது தொகுப்புக்களிலே 1ஆம், 15ஆம், 32ஆம் தொகுதிகளில் தனது நூல்களை உள்ளடக்கியதோடு முப்பதாவது தொகுதியினை ஹேர்மன் ஓல்டன்பேர்க் (Hermann Oldenberg) என்பவரின் ஆக்கத்துடன் இணைந்து தனது நூலினையும் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.§

மக்ஸ்முல்லரின் 1ஆம் மற்றும் 15ஆம் தொகுதிகள் இந்து தத்துவங்களை சிறப்பாக வெளிப்படுத்தும் உபநிடதங்களைப் பற்றியதாக அமைகின்றது. “உபநிடதங்கள், பகுதி 2 இல் 1 (The Upanishads, Part 1 of 2) ”எனும் பெயரில் அமையப் பெற்ற 1 ஆம் தொகுதியானது சாந்தோக்கிய உபநிடதம், தலவகார (கேன) உபநிடதம், ஐதரேய உபநிடதம், கௌசீதகி உபநிடதம், வாஜசானேயி (ஈச) உபநிடதம் போன்ற உபநிடதங்களைப் பற்றியும் அதில் பொதிந்து காணப்படும் தத்துவார்த்த விடயங்கள் பற்றியும் சிறப்பாக பேசுகின்றது.28 இதனைத்தவிர உபநிடத வகைகள், உபநிடத மகா வாக்கியங்களுக்கான விளக்கங்கள், உபநிடதங்களின் உப யோகங்கள் போன்றன பற்றி வளக்கப்படுவதோடு அவை பற்றிய விமர்சன ரீதியிலான கருத்துக்களும் இத் தொகுதியில் கூறப்பட்டுள்ளன.§

அடுத்ததாக மக்ஸ்முல்லரின் 15 ஆம் தொகுதியானது “உபநிடதங்கள், பகுதி 2 இல் 2 (The Upanishads, Part 2 of 2) ” எனும் பெயரில் அமையப்பெற்று கட உபநிடதம், முண்டக உபநிடதம், தைத்திரீய உபநிடதம், பிருகதாரண்ய உபநிடதம், சுவேதாஸ்வர உபநிடதம், பிரசன்ன உபநிடதம், மைத்ராயினி உபநிடதம் போன்ற உபநிடதங்களை விளக்குவதாக இத் தொகுதி காணப்படுகின்றது.§

1891ஆம் ஆண்டு மக்ஸ்முல்லரினால் எழுதிப்பதிப்பிக்கப்பட்ட இந் நூலினுடைய 32வது தொகுதியானது “வேத கீர்த்தனைகள் பகுதி 2 இல் 1 (Vedic Hymns, vol. 1 of 2) ” எனும் பெயரில் அமையப் பெற்றுள்ளது. இதில் வேத கால தெய்வங்களாகிய இந்திரன், உருத்திரன், வாயு ஆகியோர் பற்றிய மந்திரங்கள் விளக்கப்பட்டுள்ளதோடு 550 கீர்த்தனைகளில் இத் தொகுதி விளக்கப்பட்டுள்ளது. இதனைப்போன்று முப்பதாவது தொகுதியில் ஓல்டன்பேர்க் (Hermann Oldenberg) என்பவரின் ஆக்கத்துடன் இணைத்து “யஜன பரிபாச சூத்திரம்” எனும் தலைப்பில் தன் ஆக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.29§

§

2.1.2.2 ஜோர்ஜ் பெலர் (George Buhler)

July 19, 1837ஆம் ஆண்டு பிறந்து April 8, 1898 வரையான காலப்பகுதியில் வாழ்ந்தவரான ஜோர்ஜ் பெலரின் (George Buhler) மூன்று நூல்கள் கிழக்கத்திய புனித நூல்கள் (The Sacred Books of the East) எனும் தொகுப்பு நூலிலே 2ஆம், 14ஆம், 25ஆம் தொகுதிகளில் மக்ஸ்முல்லரினால் இணைக்கப்பட்டுள்ளன. இவை மூன்றுமே இந்து சட்டங்கள் (low) பற்றியதாகவே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது..§

அந்தவகையில் 1879ஆம் ஆண்டு இவரால் The Sacred Laws of the Aryas, vol. 1 of 2 எனும் தலைப்பில் எழுதப்பெற்ற நூலானது கிழக்கத்திய புனித நூல்கள் (The Sacred Books of the East) நூலில் 2ஆம் தொகுதியில் மக்ஸ்முல்லரினால் வைக்கப்பெற்றுள்ளது. இந்நூலானது ஆரிய சட்டம் தொடர்பான ஆபஸ்தம்ப, கௌதம, ஸ்மிருதிகளில் கூறப்பட்ட சட்ட நுணுக்கங்களை விளக்குவதாக அமைகின்றது.30 இதில் ஆபஸ்தம்ப ஸ்மிருதி 29 காண்டங்களிலும், கௌதம ஸ்மிருதி 15 பகுதிகளிலும் விளக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.§

அந்தவகையில் 1882ஆம் ஆண்டு இவரால் The Sacred Laws of the Aryas, vol. 2 of 2 எனும் தலைப்பில் எழுதப்பெற்ற நூலானது The Sacred Laws of the Aryas, vol. 1 of 2 எனும் இவரது முன்னைய நூலின் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது. 14ஆம் தொகுதியில் மக்ஸ்முல்லரினால் இந்நூல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வசிட்ட ஸ்மிருதி 30 சிறு பகுதிகளிலும், பௌதாயன ஸ்மிருதி 8 அத்தியாயங்கள் மற்றும் 4 சிறு பகுதிகளிலும் விளக்கப்பட்டுள்ளன. இதனைப்போன்று The Laws of Manu எனும் ஜோர்ஜ் பெலரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலானது 25ஆம் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.§

2.1.2.3 ஜோர்ஜ் திபாட் (George Thibaut)

ஜேர்மனியிலே 1848ஆம் ஆண்டு பிறந்து இங்கிலாந்தில் தனது கல்வி செயற்பாட்டினை முன்னெடுத்துச் சென்ற ஜோர்ஜ் திபாட் (George Thibaut) 1875ஆம் ஆண்டு வாரனாசி அரச சமஸ்கிருத கல்லூரியில் (Government Sanskrit College, Varanasi) பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார் இவரால் எழுதப்பெற்ற மூன்று நூல்கள் கிழக்கத்திய புனித நூல்களில் (The Sacred Books of the East) 34ஆம், 38ஆம், 48ஆம் தொகுதிகளில் இடம்பிடித்துள்ளன.§

இந்த மூன்று தொகுதிகளில் இடம் பெற்றுள்ள மூன்று நூல்களும் வேதாந்த சூத்திரம் பற்றியதாகும். The Vedanta-Sutras, vol. 1 of 3 (1890), The Vedanta-Sutras, vol. 2 of 3 (1896), The Vedanta-Sutras, vol. 3 of 3 (1904) எனும் இம் மூன்று நூல்களும் முறையே 34ஆம், 38ஆம், 48ஆம் தொகுதிகளில் இடம்பிடித்துள்ளன. அந்தவகையில் 34ஆம் தொகுதியில் வேதாந்த சூத்திரத்தின் முதலாம், இரண்டாம் அத்தியாயங்கள் விளக்கப்பட, 38ஆம் அத்தியாயத்தில் இரண்டாம் அத்தியாயத்தின் மீதியும், மூன்றாம் நான்காம் அத்தியாயங்களும் விளக்கப்பட்டுள்ளன. 48ஆம் தொகுதியானது இந் நான்கு அத்தியாயங்களையும் கொண்டு வேதாந்த சூத்திரம் விளக்கப்பட்டுள்ளது.31§

§

2.1.2.4 ஜூலியஸ் எஜலிங் (Julius Eggeling)

1842ஆம் ஆண்டு பிறந்து 1918ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வாழ்ந்தவரான இவரின் ஐந்து நூல்கள் கிழக்கத்திய புனித நூல்கள் (The Sacred Books of the East) எனும் தொகுப்பு நூலிலே 12ஆம், 26ஆம், 41ஆம் 43ஆம், 44ஆம் தொகுதிகளில் மக்ஸ்முல்லரினால் இணைக்கப்பட்டுள்ளன. இவை முறையே 1882, 1885, 1894, 1897, 1900 ஆகிய ஆண்டுகளிலே வெளிவந்தவைகளாகும். இது The Satapatha Brahmana according to the text of the Mâdhyandina school எனும் பெயரில் ஐந்து தொகுதிகளிலும் ஐந்து பகுதிகளாக சதபத பிராமணத்தினை காண்டங்கள், அத்தியாயங்கள், பிரமாணங்கள் என தொடர்ச்சியான ஒரு தொடர்பிலே விளக்குகின்றன.32§

2.1.2.5 ஹேர்மன் ஓல்டன்பெர்க் (Hermann Oldenberg)

October 31, 1854ஆம் ஆண்டு பிறந்து March 18, 1920ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வாழ்ந்தவரான ஹேர்மன் ஓல்டன்பேர்க் (Hermann Oldenberg) மூன்று நூல்கள் கிழக்கத்திய புனித நூல்கள் (The Sacred Books of the East) எனும் தொகுப்பு நூலிலே 29ஆம், 30ஆம், 46ஆம் தொகுதிகளில் மக்ஸ்முல்லரினால் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.§

29ஆம், 30ஆம் தொகுதிகளில் காணப்படும் The Grihya-sutras; rules of Vedic domestic ceremonies. vol. 1 of 2 (1886), The Grihya-sutras; rules of Vedic domestic ceremonies. vol. 2 of 2 (1892) எனும் இரண்டு நூல்களும் கிரியை சூத்திரம் பற்றி விளக்குகின்றன. இவற்றுள் 29வது தொகுதியானது சங்காயன கிரியை சூத்திரம், பரஸ்கர கிரியை சூத்திரம் பற்றி கூறும் அதேவேளை 30வது தொகுதியானது ஹொலாவின் கிரியை சூத்திரம், ஹிரண்யகேசரின் கிரியை சூத்திரம், ஆபஸ்தம்பரின் கிரியை சூத்திரம் போன்றவற்றினைப்பற்றி விளக்குகின்றது. இதனைப்போன்று 1897ஆம் ஆண்டு Vedic Hymns, vol. 2 of 2 எனும் நூலானது 46வது தொகுதியாக வெளிவந்தது. இது இருக்கு வேதத்தில் காணப்படும் மந்திரங்களைப்பற்றி விபரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.§

2.1.2.6 மோரிஸ் புளூம்பீல்ட் (Maurice Bloomfield)

அமெரிக்க தேசத்தினைச் சேர்ந்த அறிஞரான இவர் February 23, 1855 ஆம் ஆண்டு பிறந்தவராவார். இவரினுயை நூலான Hymns of the Atharvaveda, Together With Extracts From the Ritual Books and the Commentaries எனும் நூலானது 42 தொகுதியில் இடம் பெற்று 1897ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. §

§

இத் தொகுதியில் அதர்வவேதப் பாடல்கள் முக்கியத்துவப்படுத்தப்பட்டு விளக்கப்படுகின்றன. உதாரணமாக நோய்களைத் தீர்க்கும் பேஷயாணி மந்திரம், நீண்ட ஆயுளையும் ஆரோக்கிய வாழ்வையும் தரும் ஆயுஷயாணி மந்திரம், சாபத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் அபிகர்மாணி மற்றும் கிரித்யபிரதிகரனாணி மந்திரம், பெண்களுடன் தொடர்புடைய ஸ்திரிகர்மாணி மந்திரம், அரசுடன் தொடர்புடைய ராஜகரமாணி மந்திரம் என பல்வேறு வகையான அதர்வ வேத மந்திரங்களைப்பற்றி இத் தொகுதியானது விபரித்துக் கூறுகின்றது.§

2.1.2.7 கஷிநாத் ட்ரிம்பக் டெலங் (Kashinath Trimbak Telang)

இந்திய தேசத்தினைச் சேர்ந்த பம்பாய் உயர் நீதிபதியான இவர் August 20, 1850 ஆம் ஆண்டு பிறந்தவராவார். இவரினுடைய நூலான The Bhagavadgita With the Sanatsugâtiya and the Anugitâ எனும் நூலானது 08 ஆம் தொகுதியில் இடம் பெற்று 1882ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது பகவத் கீதையினைப் பற்றி விபரிக்கும் அதே வேளை அனுகீதையினையும் கூறி நிற்கிறது. பகவத் கீதை 18 பிரிவுகளிலும், அனுகீதை 26 பிரிவுகளிலும் விளக்கப்பட்டுள்ளன.§

2.1.2.8 ஜூலியஸ் ஜொலி (Julius Jolly)

28 December 1849ஆம் ஆண்டு பிறந்து 24 April 1932ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வாழ்ந்தவரான இவர் ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்தவராவார்33. இவரது இரண்டு நூல்கள் கிழக்கத்திய புனித நூல்களிலே (The Sacred Books of the East) 07ஆம், 33ஆம் தொகுதிகளில் இணைக்கப்பட்டு முறையே 1880, 1889 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன.§

07ஆம் தொகுதியில் இடம்பெறும் The Institutes of Visnu எனும் இவரது நூலானது சட்டம் பற்றி விரிவாக விளக்குகின்றது. நால்வகை வர்ணத்தார், அரசரின் கடைமைகள், குற்றம் மற்றும் சிவில் சட்டங்கள், கடனுக்குரிய சட்டங்கள், சாட்சிகள் என்பன பற்றி விளக்கப்படும் அதேவேளை நீதிப்பிரச்சினைகள், உரிமைகள், இறப்புச்சம்பவங்கள், பலி கொடுத்தல், குடும்பத்தினரின் கடைமைகள், நரகம், பிராயச்சித்தம், பக்தியால் ஏற்படும் பயன்கள் என பல்வேறு விடயங்களை இத் தொகுதியில் இந் நூல் ஆராய்கின்றது.§

இதனைப்போன்று 33ஆம் தொகுதியில் காணப்படும் இவரது மற்றைய நூலும் இந்து சட்டம் பற்றிய தகவல்களை விளக்குவதாக காணப்படுகின்றது. The Minor Law-Books: Brihaspati எனும் பெயரில் அமையப்பெற்ற இந்த நூலில் நாரத ஸ்மிருதி பற்றி விளக்கப்பட்டுள்ள அதேவேளை சட்ட ரீதியான செயல்முறைகள், குற்றச்சாட்டுக்கள், நீதிமன்றங்கள் போன்றவற்றினைப்பற்றிய அறிமுகத்தினையும் வழங்குகின்றது.34 மேலும் கடன் பற்றிய சட்டங்கள், முறையான மற்றும் முறையற்ற தொழில்கள், சொத்துக்கள், வட்டிக்கு பணம் கொடுத்தல், இழப்பை எதிர்த்த உத்தரவாதம், அடமானம், தகுதி குறைவான சாட்சி, பிழையான சாட்சி, சரியான மற்றும் பிழையான ஆதாரங்கள் என்பன பற்றியும் சிறப்பாக இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. §

§

இவ்வாறு சமஸ்கிருத மொழியில் அமைந்து காணப்பட்ட இந்து சமயத்தின் மூலங்களை உலக மொழியான ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ததோடு அதனை ஆராய்ச்சிக்கும் உட்படுத்தி இந்து சமய அருமை பெருமைகளை மேற்கூறியவாறு மேலைத்தேசத்து அறிஞர்கள் உலகிற்கு அம்பலப்படுத்தியமையினாலேயே இன்று இந்து சமயத்தின் பரம்பலை உலகம் முழுவதும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக உலக பொது மொழியான ஆங்கிலத்தில் இந்து மூலங்கள் மொழிபெயர்க்கப்பட்டமையானது பெரும்பாலான மக்களின் இந்து சமய ஈர்ப்பிற்கு அடிப்படையாக அமைந்ததாகவே காணப்படுகின்றது.§

2.2 மேலைத்தேசத்தவர்களின் இன்றைய இந்து ஆச்சிரமங்கள்

இந்து சமய உலகமயமாதலில் வெளிநாட்டவர்களுக்கு மிகப் பெரும் பங்கு இருப்பதனை மேற்கூறிய பகுதியில் தெளிவாக ஆராய்ந்தோம். அவ்வாறிருக்க உலக நாடுகளில் இந்து சமயம் தற்சமயம் மிகச்சிறப்பாக காணப்பட்டு வருகின்றது அதில் சுதேச இந்துக்கள் தவிர்ந்த (இந்தியா, இலங்கை உட்பட கீழைத்தேச நாடுகளில் இருந்து பல காரணங்களின் நிமித்தம் வெளி நாடுகளுக்குச் சென்று இந்து சமய செயற்படுகளில் ஈடுபடுதலை தவிர்த்து) வெளிநாட்டவர்களினால் வெளிநாடுகளில் இந்து சமயமானது தனி நபர்களினாலும், குழுக்களினாலும், சுதேச இந்து அமைப்புக்களுடன் இணைந்தும், சிறந்த முறையில் தற்சமயம் கடைப்பிடிக்கப்பட்டும், பேணப்பட்டும் வரப்படுகின்றது.§

ஒரு நாட்டினுடைய எதிர்காலத்தினை பலப்படுத்தும் பல்கலைக்கழகங்களிலும் இந்து சமயமானது கற்றல் செயற்பட்டின் ஊடாக உலகத்திற்கு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது குறிப்பாக உலகில் காணப்படும் பல உயர் கற்கை நிறுவனங்களில் இந்து சமயம் சிறப்பாக போதிக்கப்பட்டும் உள்வாங்கப்பட்டும் வருகின்றது. எடுத்துக்காட்டாக பிரித்தானியாவில் உள்ள oxford பல்கலைக்கழகம் (University Of Oxford), அமெரிக்காவில் அமைந்துள்ள இந்து பல்கலைக்கழகம் (Hindu University Of America), கனடாவில் உள்ள concordia பல்கலைக்கழகம் (Concordia University), கலிபோர்ணியாப் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்து கற்கைகள் நிலையம், நீயு கரோலினா மாகாணத்தில் உள்ள இந்துக் கற்கைகள் நிலையம், கலிபோர்ணியாவில் உள்ள மகரிஷி முகாமைத்துவப் பல்கலைக்கழகம், அவுஸ்ரேலியாவில் உள்ள வேதகால வானியல் கல்லூரி, தென்னாபிரிக்காவில் உள்ள சமாதான கற்கைகள், ஆன்மீகம் மற்றும் கலாசார பீடம் போன்றவற்றை சிறப்பாக கூறலாம்.35§

§

இவ்வாறிருக்க மேலைத்தேச நாடுகளிலும் இந்து சமயமானது மேற்கூறியவாறு பல வழிகளில் சிறந்த முறையில் காணப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அவ்வாறிருக்க இப்பகுதியில் எனது ஆய்வுத்தலைப்பினை அடிப்படையாகக் கொண்டும் விரிவஞ்சியும் மேலைத் தேசத்தவர்களினால் உருவாக்கப்பட்டு தற்சமயம் சிறப்பாக இயக்கப்பட்டு வரும் நான்கு ஆச்சிரமங்களை ஆய்வு ரீதியில் பார்க்கவுள்ளேன்.§

இந்து சமய மூலங்களான அதாவது வேதங்கள், உபநிடதங்கள், இதிகாச புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் போன்றவற்றில் பொதுவாக ஆச்சிரமம் என்பது உலக இன்ப துன்பங்களில் இருந்து விடுபட்டு இறை இன்பத்தினை நாடுபவர்கள் (யோகிகள், துறவிகள்) வாழும் இடம் என்ற பொருளிலேயே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்து சமய பாரம்பரியங்களை சிறந்த முறையில் பேணுவதோடு இறை உண்மையானது அறியப்பட வேண்டிய ஒன்று அதனாலேயே இவ்வுடல் கிடைக்கப்பெற்றுள்ளது என்ற உண்மையை உணர்ந்து இந்து வழி நின்று உண்மையை அறிய முற்படும் ஆச்சிரமங்களாகவே இந்த நான்கு ஆச்சிரமங்களும் காணப்படுகின்றன. இவை தான் அறிந்த இந்து சமய உண்மைகளை மற்றவர்களுக்கும் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.§

2.2.1 சுவாமி கீதானந்த ஆச்சிரமம் (Svami Gitananda Ashram)

ஐரோப்பிய நாடான இத்தாலியில் அமையப்பெற்ற இவ்வாச்சிரமமானது 1984ஆம் ஆண்டு யோகானந்த கிரி என்பவரால் (பார்க்க படம்:01) புஜ பரமஹம்ச மஹாராஜ் யோகசிரோமணி புராணாச்சாரிய சுவாமி கீதானந்த கிரி (Puja Paramahamsa Maharaj Yogashiromani Purnacarya dr. Svami Gitananda Giri) அவர்களின் (பார்க்க படம்:02) ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டு உலகம் பூராகவும் இந்து யோகாவின் ஊடாக இந்து உண்மைகளை பரப்பி வருகின்றது.§

தற்சமயம் சுவாமி யோகானந்த சுவாமி யோகப் பயிற்சியினை உலகளாவிய ரீதியில் வழங்கி வருகின்றார் இவரது யோகா சம்மந்தமான அறிவானது இந்திய சித்தர் பரம்பரை வழியாக வந்ததாக கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் அப்பரம்பரை மரபானது மேல்வருமாறு அமையப்பெற்றுள்ளது.§

§

image§

யோகா பயிற்சியினை மையமாகக் கொண்டிருந்தாலும் சைவ சித்தாந்தம், சாக்த தந்திரவியல், சங்கராச்சாரியர் போன்ற பாரம்பரிய கோட்பாடுகள் பற்றியும் இவ்வாச்சிரமத்தில் கற்பிக்கப்படுகின்றன. (பார்க்க படம்:03) அதாவது தென்னிந்தியாவில் சிறந்த முறையில் வளர்ச்சி கண்ட சைவ சித்தாந்த நெறியினை முதன்மைப்படுத்தும் இவ்வாச்சிரமம் சைவ சித்தாந்தத்தில் சக்திக்கு கொடுக்கப்பட்ட இடத்தினை அடிப்படையாகக் கொண்டு சாக்த நெறியை இவர்கள் முதன்மைப் படுத்திய அதேவேளை சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் முத்தியானது சங்கரரின் அத்வைத முத்தியோடு நெருங்கிய தொடர்புடையமையால் சங்கராச்சாரியரையும் இணைத்திருக்கக் கூடும் என்பது புலனாகிறது.§

2.2.2 திவ்விய லோகா ஆச்சிரமம் (Divya Loka Ashram of Russia)

ரஸ்யாவில் பல காலமாக இயங்கி வரும் இவ்வாச்சிரமமானது தனி ஒரு நபரால் உருவாக்கப்பட்டதன்று இது யோகா பயிற்றுவிப்பாளரும், வேத தத்துவவியலாளருமான சுவாமி விஷ்ணுவேதானந்த குருஜீ மஹாராஜா அவர்களின் கருத்துக்களை மையமாக வைத்து வேதம் கூறும் வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதன் ஊடாகவும் யோகா பயிற்சியினை மேற்கொண்டு வருவதன் ஊடாகவும் இந் நாட்டில் வாழ்ந்த ஒரு பகுதியினர் இந்து சமய ஆச்சிரம தர்மத்தினை நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்துள்ளனர்.36§

முதன் முதலாக இவ்வாச்சிரமத்திற்கென 2001ஆம் ஆண்டு கட்டடத் தொகுதியொன்று கட்டப்பட்டு அங்கு பல மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்து யோகா மற்றும் வேதத்தில் கூறப்பட்ட வாழ்வியல் என்பன பாதுகாக்கப்பட்டதோடு விஸ்தீரணமும் செய்யப்பட்டது. இதன் விளைவால் உயர் சமூக கலாசாரத்தில் இருந்த பலர் சாந்தி, சமாதானம், சந்தோசம் போன்றவற்றை தரக்கூடிய இவ்வமைப்பால் ஈர்க்கப்பட்டு உள்வாங்கப்பட்டனர்.§

§

பின்பு படிப்படியான வளர்ச்சிப்பாதையில் வந்து கொண்டிருந்த இவ்வமைப்பானது ஒரு கட்டத்தில் வேதாந்தத்தில் ஈர்க்கப்பட்டதோடு கட்டடவியல், பொறியியல் துறை, கலைகள் என அனைத்துமே இந்து சமய ரீதியானதாக வளர்ச்சிகண்டு வந்து கொண்டிருக்கின்றது. இதன் ஒரு கட்டமாக 2007ஆம் ஆண்டு முதலாவது இந்துக் கோயில் அமைத்ததோடு தொடர்ந்து நடமாடும் சேவைகள், திவ்ய லோகா அமைப்புக்கென தனி பேருந்து சேவை என்பன வளர்ச்சிக்கட்டத்தில் ஏற்பட்டன.§

இவ்வாறான படிப்படியான வளர்ச்சிப்பாதையில் வந்த இவ்வமைப்பு தற்சமயம் முழு உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு ரஸ்யா நாட்டில் இந்து ஆச்சிரமமாக இயங்கி வருகின்றது (பார்க்க படம்:04). அதிகளவான மக்கள் இவ்வாச்சிரமத்திற்கு வருகை தந்து யோக பயிற்சிகளில் ஈடுபடும் அதேவேளை அன்றாடம் வாழ்க்கையில் வேதனைகளையும், கஸ்டங்களையும் சந்திக்கும் பல மக்கள் இங்கு அமைதியை பெறுவதற்காக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.37 பல நாடுகளில் இருந்து ரஸ்ய நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகள் இவ்வாச்சிரமத்தின் இயற்கை அழகையும் புனிதத் தன்மையினையும் காண நாள்தோறும் வந்து குவிகின்றனர்.§

யோக பயிற்சியினையும், வேத பாரம்பரியத்தினையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஆரம்பித்த இவ்வமைப்பானது தற்சமயம் இவைகளை சிறந்த முறையில் பாதுகாத்து வருவதோடு அதனையும் கடந்து மிஷனாகவும், பல துறவிகள் வாழும் ஆச்சிரமமாகவும் செயற்பட்டு வருவதனை மேற்கூறிய விடயங்களில் இருந்து சிறப்பாக அறிந்து கொள்ளலாம்.§

2.2.3 பக்தி வேதாந்த ஆச்சிரமம் (The Bhaktivedanta Ashram)

2003ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தி வேதாந்த இராமகிருஸ்ணானந்த சுவாமி மகாராஜா (பார்க்க படம்:05) என்பவரால் பக்தி வேதாந்த மிஷன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு வைணவ பாரம்பரியத்தினை முதன்மைப்படுத்தி இலாப நோக்கம் இல்லாமல் இயங்கிவருகின்ற ஒரு மிஷனாக இந்து சமய உண்மைகளை புத்தகங்கள், CDகள், DVDகள், இணையதளங்கள், கற்கை நெறிகள், கருத்தரங்குகள், தியானப் பயிற்சிகள் (பார்க்க படம்:06) பல்வேறுபட்ட வழிகளிலும் மாணவர்களை மையமாகக் கொண்டு மக்களுக்கு பரப்பி வந்த நிலையில் 2007ஆம் ஆண்டு பக்தி வேதாந்த இராமகிருஸ்ணானந்த சுவாமி மகாராஜா அவர்களால் வைணவ பாரம்பரிய ஆச்சிரமம் ஒன்றும் அமைக்கப்பட்டு சிறந்த முறையில் இயக்கப்பட்டு வருகின்றது.38§

இவ்வாச்சிரமம் அமெரிக்காவில் (USA) நியுயோர்க் (New York) மாநிலத்தில் அமைந்துள்ள கட்ஸ்கில் (Catskill) மலையில் அமைந்துள்ளது. இதன் அமைவிடமும், இங்கு நிலவும் சூழ்நிலையும் இந்து சமயத்தில் ஆச்சிரமமானது எவ்வாறான இடத்தில் எப்படியான சூழ்நிலையில் அமைய வேண்டும் என்று கூறுகின்றதோ அதற்கேற்றவாறு அமைந்தாற் போல் காணப்படுகின்றது.39§

§

இவ்வாச்சிரமம் உருவாக்கப்பட்டதிலிருந்து சில காலங்கள் கட்ஸ்கில் (Catskill) மலையின் கிழக்குப் பகுதில் ஒரு சிறிய இடத்திலேயே இயங்கி வந்தது பின்பு 47 ஏக்கர் பரப்புள்ள பகுதியினை கொள்ளளவு செய்து தற்போது சிறப்பாக இயங்கி வருகின்றது. இயற்கையால் சூழப்பட்ட இவ்வாச்சிரமத்தில் இந்து சமய குருகுலக்கல்வியும், தியான பயிற்சிகளும், யோகா பயிற்சிகளும் சிறந்த முறையில் குரு தேவரான பக்தி வேதாந்த இராமகிருஸ்ணானந்த சுவாமி மகாராஜாவினால் ஆச்சிரம மாணவர்களுக்கும் வருகைதரு மாணவர்களுக்கும் சிந்தை தெளிய வைக்கப்படுகின்றது.§

2.2.4 ஆக்ரா இந்து ஆச்சிரமம் (The Hindu Monastery of Accra)

இவ்வாச்சிரமமானது மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் கானா எனும் நாட்டில் அதன் தலைநகர் ஆக்ராவில் அமைந்துள்ளது. இதன் உருவாக்கம் பற்றி பார்த்தோமானால் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் 1937ல் பிறந்த கெவிஸி ஈஸெல் (Guide Kwesi Essel) உண்மையை அறிய மேற்கொண்ட நீண்ட பயணத்தில் 1962ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள சிவானந்த ஆச்சிரமத்துடன் தொடர்புகொண்டு இந்துவழி பிராத்தனைக்காக சங்கம் ஒன்றை ஆப்பிரிக்காவில் ஏற்படுத்தினார்.40 பின்பு மீண்டும் 1970ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து சிவானந்த ஆச்சிரமத்தில் இரண்டு வருடங்களாக இருந்து ஆச்சிரமம் பற்றியும், அதன் பின்னணி பற்றியும் அறிந்து கொண்டதோடு ஆச்சிரமத்தினை உருவாக்கி அதனை எவ்வாறு பரிபாலிப்பது என்பது பற்றியும் நன்கு அறிந்து கொண்டு தனது நாடு திரும்பி பல தடைகளையும் தாண்டி 1975ஆம் ஆண்டு சுவாமி கானானந்த சரஸ்வதி (பார்க்க படம்:07) என நாம தீட்சையினையும் பெற்றதோடு ஆக்ரா இந்து ஆச்சிரமம் (The Hindu Monastery of Accra) எனும் பெயரில் இவ்வாச்சிரமத்தினை நிறுவினார்.41§

இவருடைய இந்த ஆச்சிரமத்தில் உறுப்பினர்களாக இணையும் பல சமயத்தினரும் இவரது வழிகாட்டலினால் இந்து சமய பாரம்பரியங்களை சிறப்பாக கடைப்பிடித்து வருகின்றனர். “யாரையும் இந்து சமயத்திற்கு மாற்றமுடியாது. ஏனெனில், ஏனைய சமயங்ளைப் போல் அது வெறும் சமயமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. ஒருவார பயிற்சிக்குப் பின்னர் இந்துவாக வாழ விரும்புவர்களை ஏற்று தொடர்ந்து இந்துவாக வாழ அவர்களுக்கு உதவி செய்கின்றோம்” என்று உரைக்கின்றார் சுவாமி கானானந்த சரஸ்வதி அவர்கள்.42§

§

இவ்வாச்சிரமத்தில் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது (பார்க்க படம்:08). இவ்வாலயத்தின் கோபுர உச்சியில் ஓம் என்ற சின்னமானது அமையப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவ்வாலயத்தில் சிவன் முதன்மைப்படுத்தப்பட்டாலும் விஷ்ணு, பிள்ளையார், முருகன் போன்ற இந்துக் கடவுளர்களும் வழிபடப்பட்டு வருகின்றனர். இவ்வாலயத்திலே கீர்த்தனைகள் மற்றும் பஜனைகள், ஆராதனைகள், ஹோமம் வளர்க்கும் செயற்பாடுகள், வேத மந்திர உச்சாடனங்கள், என பல விடயங்கள் இந்து பாரம்பரிய முறைப்படி நிகழ்கின்ற அதேவேளை அங்கு நிகழும் பல நிகழ்வுகள் அந்நாட்டு மொழியிலையே நிகழ்த்தப்படுவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். (பார்க்க ஆவணக்காணொளி: 01) §

எனவே இவ்வாறான விடயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கின்ற பொழுது இந்து சமயத்தில் மேலைத்தேசத்தவர்களுக்கு காணப்பட்ட ஈர்ப்பானது அவர்களின் இந்து சமயம் என்ற ஒரு பண்பாடு இந்தியாவில் காணப்படுகின்றது என்ற அறிவு எப்போது ஏற்பட்டதோ அப்பொழுதிருந்தே இந்து சமயத்தால் அவர்கள் ஈர்க்கப்பட்டு விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். அன்றிலிருந்து இன்றுவரை அவர்களின் நாட்டம் இந்து சமயத்தினை நோக்கி அதிகரித்து வருகின்றதே தவிர குறைவதாக தெரியவில்லை. இவ்வாறிருக்க மேலே பார்த்த நான்கு ஆச்சிரமங்களும் எவ்வாறு இந்து பாரம்பரியத்தினை சிறப்பாக வளர்த்து வருகின்றதோ அதனைப் போன்று பல மடங்கு சிறப்பான இந்து சமய செயற்றிட்டங்களை மேற் கொள்ளும் ஆதீனமாக அமெரிக்காவில் உள்ள காவாய் இந்து ஆதீனம் காணப்படுகின்றது என்றால் அது மிகையாகாது.§