KAUAI’S HINDU MONASTERY OF AMERICA

§

image§

அமெரிக்க காவாய் இந்து ஆதீனம்§

3.0 அத்தியாய அறிமுகம்

இந்தியாவில் “ஆதீனம்” எனும் சொல்லானது தலைமைத்துவமாக இருந்து இந்து சமயத்தினை வளர்க்கின்ற ஒரு அமைப்பாக திகழ்ந்து வருகிறது. அந்தவகையில் குறிப்பாக இந்து ஆலயங்கள் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டும் வருவதோடு பல உண்மைச் சீடர்களையும் உருவாக்கி வருகின்றது. இவ்வாதீனத்தினுடைய பாரம்பரியத்தினை தற்சமயம் இந்தியாவில் காணப்படுவதைப் போன்று இரண்டாம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதியில் கூறிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிநாடுகளில் அதிகமாகக் காணப்படுவதனை சிறப்பாக அறிய முடிகின்றது. அவ்வாறிருக்க அமெரிக்காவில் அமையப்பெற்று சுமார் மூன்று தசாப்பத்திற்கு மேலாக சிறப்பாக இயங்கி வரும் காவாய் இந்து ஆதீனமானது இந்து சமய வரலாற்றிலே ஒரு உன்னதமான இடத்தினை பிடித்துள்ளது என்றால் அது மிகையாகாது.§

எனவே இவ்வாதீனத்தினுடைய அமைவிடம், தோற்றம், அதன் வளர்ச்சி, ஆதீனம் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் விதம், இன்றைய விஞ்ஞான உலகில் அதன் செயற்பாடுகள், என்று பல தரப்பட்ட விடயங்களை ஆராய்வதாகவே இவ் அத்தியாயம் அமைகின்றது.§

3.1 ஆதீன அமைவிடம்

நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்களை கொண்டு காணப்படும் அமெரிக்காவில் இந்து சமயத்திற்கான இடமானது ஒரு தனித்துவம் வாய்ந்த நிலையில் காணப்படுகின்றது.43 இதனை உறுதிப்படுத்த அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா தலைமையில் நிகழ்ந்த இந்து பாரம்பரிய பண்டிகையான தீபாவளிப் பண்டிகையின் நிகழ்வானது மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.44 (பார்க்க ஆவணக்காணொளி: 02) இதனைப்போன்று அமெரிக்க அமைச்சரவை ஒன்று கூடலில் தேசிய கீத நிகழ்விற்கு முன்னர் சற்குரு போதிநாத வேலன் சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்து சமய செற்பொழிவும் இதனை மேலும் பறைசாற்றி நிற்கின்றது.45 (பார்க்க ஆவணக்காணொளி: 03) §

இவ்வாறு இந்து சமயம் அமெரிக்காவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சமயமாக பார்க்கப்படுவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. அவற்றில் மிக முக்கிய காரணமாக இந்தியாவில் இருந்து இந்துப்பண்பாட்டின் தூதுவராகச் சுவாமி விவேகானந்தர் சர்வமத அவைக்கு 1893ஆம் ஆண்டு சென்றமை திகழ்கின்றது. இதற்கு அடுத்த படியாக இவரின் இப் பயணத்தினைத் தொடர்ந்து 1930 ஆம் ஆண்டிலே சிக்காக்கோவில் நிறுவப்பட்ட விவேகானந்த வேதாந்த சபைக்கு முக்கியபங்குண்டு. அதாவது இச்சபையின் செயற்பாட்டின் நிமிர்த்தம் இந்தியாவில் இருந்து துறவிகள், ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்வாறு சென்றமையால் இந்து சமயமானது பெரும்பாலும் அங்கு வியாபிக்க அடித்தளமிட்டது என்றால் அதனை யாராலும் மறுக்க இயலாது.§

§

இதனைப்போன்று 1902 ஆம் ஆண்டு சுவாமி இராமதீர்த்தரின் அமெரிக்கா நோக்கிய பயணம், 1949ஆம் ஆண்டு அமெரிக்கரான சற்குரு சிவாய சுப்பிரமுணனிய சுவாமிகளின் இலங்கை விஜயம், 1965ஆம் ஆண்டு சுவாமி பிரபுபாதரினால் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹரேகிருஸ்ணா இயக்கம், இராம கிருஸ்ண மிஷனின் உலகளாவிய செயற்பாடுகளும், மோரிஸ் புளூம்பீல்ட் (Maurice Bloomfield) உட்பட்ட அமெரிக்க அறிஞர்களின் இந்து சமயம் சார்ந்த ஆராய்ச்சி ரீதியான விடயங்களும் அமெரிக்காவில் இந்து சமயமானது சிறந்த முறையில் வளர்க்கப்பட காரணங்களாக இருந்தது. அந்தவகையில் அமெரிக்காவில் இந்துசமய பரிணாம வளர்ச்சியில் காவாய் இந்து ஆதீனத்திற்கும் ஒரு தனி இடம் இருப்பதனை காணக்கூடியதாக உள்ளது.§

அந்தவகையில் வட பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள அமெரிக்க நாட்டுக்குரியதான ஹவாய் தீவு அல்லது பெரிய தீவு என்று சிறப்பிக்கப்படும் தீவு காணப்படுகின்றது. இந்தத் தீவை முதன் முதலில் கண்டு பிடித்த பொலினேசியன் கடற் பயண மாலுமியான ஹவாய் இலோவா என்பவரின் ஞாபகார்த்தமாக இப்பெயர் வைக்கப்பட்டது. இதுவே 4028 சதுர மைல்களைக் (10,432கி.மீ) கொண்டு அமெரிக்காவில் காணப்படும் மிகப் பெரிய தீவாக விளங்குகின்றது. இது ஒரு தனித்தீவாக காணப்பட்ட போதிலும் அரசியல் ரீதியாக பல சிறு தீவு கூட்டத்தினை கொண்டு காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறிருக்க ஹவாய் தீவு கூட்டத்தில் உள்ள ஒரு சிறு தீவாகவே இந்த காவாய் (Kauai) தீவு காணப்படுகின்றது. அத்தீவில் கிழக்குப்பகுதியில் கடற்கரையில் இருந்து சில மைல் தொலைவில் இந்த காவாய் இந்து ஆதீனம் காணப்படுகின்றது.46 (பார்க்க வரைபடம்:01) §

3.2 ஆதீனத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் சைவப்பாரம்பரித்தினையும், உண்மை ஞானத்தினையும் ஈழநாட்டின் யோக சுவாமிகளிடம் இருந்து சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் 1949ஆம் ஆண்டு உள்வாங்கி அவரின் ஆசீர்வாதத்துடன் 1970ஆம் ஆண்டு உத்தியோக பூர்வமாக அமெரிக்காவில் காவாய் தீவில் 45 ஏக்கர் நிலப்பகுதியில் நிறுவப்பட்டது. தற்சமயம் ஆதீனம் காணப்படும் இடத்தில் அவரால் கடவுள் கோயிலின் உருவாக்கம் 1973ஆம் ஆண்டும், சுயம்பு லிங்கத்தின் கண்டுபிடிப்பு 1975ஆம் ஆண்டும் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.47§

நான்கு துறவிகளுடன் குருதேவரினால் உருவாக்கப்பட்ட இவ்வாதீனமானது தற்சமயம் ஆறு நாடுகளைச் சேர்ந்த 22 துறவிகளால் இன்று நிறுவகிக்கப்பட்டு வரப்படும் இவ்வாதீனமானது சற்குரு போதிநாத வேலன் சுவாமிகளின் தலைமையில் இயக்கப்பட்டு உலகளாவிய ரீதியில் இந்து சமய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிறது. இச் செயற்பாடானது இந்து சமயத்திற்கும், ஹவாய் தீவிற்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்து காணப்படுகிறது. இவ்வாதீனத்தில் கடவுள் கோயில், இறைவன் கோயில் என்ற பெயரில் இரண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவன் கோயில்களும் காணப்படுகின்றன. இதனை விட புனிததோட்டம், நூலகம், காட்சிக்கூடம், பசுப்பண்ணை, என பல ஆதீன செயற்பாடுகளுக்கு உதவுகின்ற அம்சங்களும் காணப்படுகின்றன.48 (பார்க்க ஆவணக்காணொளி: 04) §

§

உலகளாவிய செயற்பாடுகளை இவ்வாதீனத்தின் பகுதி அமைப்புக்களாக வெளியீடுகளுக்கான நிறுவகம் (Himalayan Academy), இந்து அற நிதியம் ( Hindu Heritage Endowment), சைவ சித்தாந்த திருச்சபை (Saiva Siddhanta Church) ஆகியவைகளின் ஊடாக இவ்வாதீனத்தினர் மேற்கொண்டும் வருகின்றனர்.49§

3.2.1 ஆன்மீக பரம்பரை (Spiritual Lineage)

உண்மை ஞானத்தினைத் தேடும் இவ்வுலக வாசிகளுக்கு உண்மையறிவை போதித்தது ஈடேற்றம் வழங்குவதற்காக பழங்காலத்தில் பல்வேறு யோகிகள் தோன்றி வழிப்படுத்திச் சென்றிருந்தாலும் அவர்களின் மறைவிற்குப் பின் அச்செயற்பாடானது அவருடனேயே முடிவடையும் ஒரு துர்ப்பாக்கிய நிலையினை இந்து சமூகம் எதிர்நோக்கியது. அவ்வாறிருக்க இவ்வாறான செயற்பாடுகளை இடைவிடாது தொடர்ந்து கொண்டு செல்வதற்கு இந்தக் குரு சீட பரம்பரையானது இன்றியமையாததாக அமைந்து காணப்படுகின்றது. தான் பெற்ற உண்மை ஞானத்தினை தன் சீடர்களினூடாக வளர்த்துச் சென்று உண்மையறிவை உலகிற்கு வழங்குவதில் இக்குரு சீட பரம்பரையினருக்கு பெரும் பங்கு காணப்படுகின்றது.50§

இந்து சமய மூலங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாதீனத்தினை உருவாக்கியவரான சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் நந்திநாத சம்பிரதாய கைலாச பரம்பரை எனும் குரு பரம்பரையானது மிகவும் பழைமை வாய்ந்த ஒரு பரம்பரையாகக் காணப்படுகின்றது. நந்தி நாதரினுடைய எட்டு மாணாக்களின் ஊடாக வளர்த்து வரப்பட்ட இப்பரம்பரையானது 2200 ஆண்டுகள் பழைமை வாய்ந்நதாகவும் காணப்படுகின்றது. குரு சீட பரம்பரையில் தேர்ந்தெடுத்த சீடனுக்கு குருவானவர் சற்குரு எனும் நாமத்தினை வழங்கி இப்பரம்பரையின் தொடர்சியை வளர்த்துச் செல்ல ஆசீர்வதிப்பார். அவ்வாறிருக்க கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த ஆதாரங்களின் படி கீழ் கண்ட குரு பரம்பரை வரிசையினை அறியக்கூடியதாக உள்ளது.51§

§

image§

இவ்வாறிருக்க ஈழத்திரு நாட்டில் வாழ்ந்து உண்மையறிவை வழங்கி வந்த யோக சுவாமிகளை 1949ஆம் ஆண்டு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் சந்தித்து உண்மை ஞானத்தினையும் ‘சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள்’ என்ற நாம தீட்சையினையும் பெற்றார்.52 தன் குரு சிவயோக சுவாமியிடமிருந்து விடை பெறும் சமயத்தில் குருவினால் சுப்பிரமுனிய சுவாமிகளின் முதுகில் கையால் அடித்து “இந்த சத்தமானது உலகம் பூராகவும் கேட்க வேண்டும்” என்று கூறப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டு அனுப்பப்பட்டார். குரு கூறிய வாக்கிற்கு அமைய அமெரிக்காவில் ஆதீனம் ஒன்றினை அமைத்து தான் குருவிடம் பெற்ற ஞானத்தினை சீடர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் வழங்கியதோடு இந்த குரு பரம்பரையானது அமெரிக்காவில் வளர்ச்சிப்பாதையில் செல்லவும் வழிவகுத்தார்.§

இந்தநிலையில் இந்து சமய மூலங்களின் உதவியுடனும், வரலாற்றாதாரங்களினாலும் நந்திநாத சம்பிரதாய கைலாச பரம்பரையின் 162வது சற்குருவாக குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை குருதேவரால் உருவாக்கப்பட்ட இவ்வாதீனத்தினையும், அது சார்ந்த விடயங்கள் அனைத்தினையும் தற்சமயம் நடாத்தி வரும் அவரின் சீடரான சற்குரு போதிநாத வேலன் சுவாமிகள் 163வது சற்குருவாகவும் இப்பரம்பரையில் செயற்பட்டு வருகின்றமையும் இங்கு கவனிக்கத்தக்கதேயாகும்.§

3.2.2 கடவுள் இந்து ஆலயம் (Kadavul Hindu Temple)

சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளால் காவாய் இந்து ஆதீனம் 1977ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதற்கு முன்னரே 1973ஆம் ஆண்டு இவரால் இங்கு அமைக்கப்பட்ட முதல் சிவாலயமாக இந்த கடவுள் இந்து ஆலயம் (பார்க்க படம்: 09) காணப்படுகின்றது. இவ்வாலயத்தின் முலமூர்த்தியாக சிவனுடைய நடராஜர் வடிவம் காணப்படும் அதே வேளை அவ்வடிவத்திற்கு முன்னால் சிவலிங்கம் ஒன்றும் காணப்படுகிறது. (பார்க்க படம்: 10) அத்தோடு இவ்வாலயம் மிகவும் புனிதமானதாக அன்றிலிருந்து விளங்கிவரும் அதே வேளை இலங்கையில் அமையப்பெற்று காணப்படும் சிவாலயங்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.53§

§

கடவுள் இந்து ஆலயத்திற்கு முன்பு 16 தொன் நிறையுடைய நந்தியினுடைய உருவச்சிலையானது காணப்படுகின்றது. இது கருநிற ஒற்றைக் கல்லினால் தென்னிந்தியாவில் மகாபலிபுரத்தில் குடைந்து செதுக்கப்பட்டு காவாய் தீவிற்கு கொண்டு வரப்பட்டு பிரதிஷ்ட்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இச்சிலைக்கு முன்பிருந்தே நடராஜரை பக்தர்கள் வணங்குவார்கள்.§

இவ்வாலயம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து சூரிய உதயத்திற்கு முன்பு ஆதீன துறவிகள் இவ்வாலயத்தில் ஒன்று கூடுவர். பின்பு காலை 9.00-12.00 மணிவரை பூஜை நிகழும் இதன்போது அபிசேகம், அலங்காரம், ஆராதனை, அர்ச்சனை, நைவேத்தியம், சமஸ்கிருத மந்திரங்களின் உச்சாடனங்கள், தேவாரம் பாடுதல் என பல்வேறு இந்து சமய வழிபாட்டம்சங்களை இங்குள்ள துறவிகள் நடாத்துவார்கள். இப் பூஜையின் போது அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் பலரும், யாத்திரிகர்களாக சென்ற இந்துக்களும் கலந்து கொள்வர். இங்கு குறித்த மூன்று மணி நேரம் மாத்திரமே இவ்வாலய கதவானது பொதுவான பக்தர்களின் வணக்கத்திற்காக திறந்திருக்கும் ஆனாலும் தீட்சை பெற்ற சிஷ்யர்களுக்கும், முன்னமே தொடர்பு கொண்டு வருகையை உறுதிப்படுத்திய யாத்திரிகர்களுக்கும் காலை 06.00am தொடக்கம் மாலை 06.00pm வரை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது என்பதுவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.54§

மேலும் பல பக்தர்களை இவ்வாதீன துறவிகளாக மாற்றிய இக் கோயிலின் பிரதான சுவரிலே சிவனுடைய அரிதான 108 தாண்டவ நடன வடிவங்கள் வெண்கலத்தினால் செய்யப்பட்டு தங்க முலாமும் பூசப்பட்டு ஒவ்வொன்றும் 16 அங்குலத்தில் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க படம்: 11) இவ்வாலயத்தினுடைய வலது பக்க நுழைவாயிலானது குருதேவரான சுப்பிரமுனிய சுவாமிகளின் மஹா சமாதியின் முதலாவது ஆண்டு நினைவு தினமன்று அமைத்ததோடு அன்று முதல் அங்கு சிவலிங்க வடிவில் அமைந்து மேற்பகுதியில் இரண்டு பாதங்களைக் கொண்டு காணப்படும் குருதேவரின் பாத உருவத்தினையும், குருதேவரின் உருவத்தினையும் சிலையாகவும், நிழற்படமாகவும் இங்கு வைத்து வணங்கி வருகின்றனர். (பார்க்க ஆவணக்காணொளி: 05) §

மேலும் இவ்வாலயத்தின் இருபுறமும் கணபதி மற்றும் முருகனின் திருவுருவங்களுடன் கூடிய சிறு ஆலயங்கள் காணப்படுகின்றன. அவற்றில் கணபதியின் உருவமானது ஆறடி உயரத்தில் கறுப்பு நிற கிறனைட்டினால் அமையப்பெற்றுள்ள அதே வேளை மறுபுறமுள்ள முருகனுடைய சிலையானது மயில் மேல் அமர்ந்து பறந்து செல்லும் காட்சியாக அமையப்பெற்றுள்ளது. இவ்விரு துணையாலயங்களிலும் நாளாந்த பூஜையுடன் சேர்த்து அவரவருக்குரிய விசேட நாட்களில் (கந்தசஸ்டி, விநாயகர் சதுர்த்தி…) விசேடமாக வழிபாடுகள் இவ்வாதீன துறவிகளால் மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.55 (பார்க்க ஆவணக்காணொளி: 06) §

§

இதனை விட கோயிலுக்கு அருகாமையில் உள்ள கோயில் தடாகத்தில் சம்மந்தரின் நடனக்கோலமும் வெண்கலத்தினால் சிலையாக வடிக்கப்பட்டுள்ளதோடு (பார்க்க படம்:12) சிவனின் அர்த்த நாரீஸ்வர மூர்த்தமும், சில்வரினாலான திரிசூலமும், இவ்வாலயத்துடன் இணைத்து வழிபடப்படுகின்றது.§

3.2.3 இறைவன் கோயில் (Iraivan Temple)

700 பவுன்ட் (pound) நிறையையுடைய ஸ்படிக சுயம்புலிங்கமானது (sphatika svayambhu lingam) சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளால் 1975ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு காலம் காலமாக இவ்வாதீன துறவிகளால் வழிபடப்படுகின்றது. இதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் பொருளாகவும் உலகறியச் செய்யும் நோக்குடன் சுயம்பு லிங்கத்தினை (பார்க்க படம்: 13) பிரதிஸ்டை செய்வதற்காக மிகவும் பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டு வருகின்ற ஆலயமே இந்த இறைவன் கோயிலாகும். (பார்க்க படம்: 14) §

முற்றிலும் கருங்கற்களினாலான இந்த ஆலய கட்டடத் திருப்பணிகளானது இந்தியாவில் பேங்களூரில் உள்ள ஸ்ரீ கைலாச ஆச்சிரமத்தில் 1990ஆம் ஆண்டு மார்கழி மாதம் குருதேவரால் முதலாவது கல் செதுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பேங்களூரில் 11 ஏக்கர் நிலப்பரப்பில் சிற்ப வேலைகள் கணபதி ஸ்தபதியின் தலைமையில் நடைபெற்று வந்தது. இங்கு 70 சிற்பிகள் சிற்ப வேலைகளில் ஈடுபட்டு வந்ததன் விளைவாக 1995ம் ஆண்டு சித்திரை மாதம் குருதேவரால் காவாய் இந்து ஆதீனத்தில் உள்ள இறைவன் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டி திருப்பணியை துவக்கி வைத்தார். இதன் போது நிகழ்ந்த அஸ்திவாரக் கிரியைகளானது தமிழ்நாட்டைச் சேர்ந்த சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றன.56§

தற்சமயம் கற்களையும், சிற்பிகளையும் காவாய் இந்து ஆதீனத்திற்கு கொண்டு வந்து திருப்பணி வேலைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து கருங்கற்களையும், சிற்பிகளையும் கொண்டு வந்து முற்றிலும் கைகளினால் செதுக்கி ஆகம முறைப்படி வெளிநாட்டில் கட்டப்படும் முதலாவது இந்து ஆலயமாக இது விளங்குகின்றது. இந்திய ஆலய அமைப்பினை கொண்ட இவ்வாலயம் வில்வம், உருத்திராட்சம், கொன்றை, வேம்பு, சந்தன மரம் என இந்து பாரம்பரியத்தில் புனிதமாக மரங்களுக்கு மத்தியில் அமையப்பெற்றுள்ள இவ்வாலயத்தின் பின் காட்சியாக (background) எரிமலையினை கொண்டும் காணப்படுகின்றது. (பார்க்க ஆவணக்காணொளி: 07) §

§

நூறு தொடக்கம் இருநூறு வரையான பக்தர்கள் ஒரே நேரத்தில் வழிபாட்டில் ஈடுபடக் கூடிய அளவிற்கு மிகவும் பெரிய ஆலயமாக அமைக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இவ்வாலயத்தினுடைய முழு நீளமானது image எனக் காணப்படுவதோடு பக்தர்கள் நின்று வழிபாடுகளை மேற்கொள்ளும் மஹா மண்டபமானது image நீளத்தினையும், கற்பகிரகமானது image நீளத்தினையும் கொண்டு காணப்படுகின்றது. மேலும் இவ்வாலயத்தின் கோபுரத்தின் image உயரத்தினையும் விட விமானத்தின் (16’.9”) உயரமானது அதிகமாகக் காணப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது. (பார்க்க வரைபடம் 02) §

பல மில்லியன் செலவில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக மிளிர்ச்சி பெற்று விளங்கக் கூடிய வகையில் கட்டப்பட்டு வரும் இவ்வாலயத்தில் இந்துப்பண்பாட்டு அம்சங்களும், அனுமான், தட்சிணாமூர்த்தி, விநாயகர் உட்பட பல கடவுளர்களின் உருவங்களும், நந்தி உட்பட பல இந்துக் குறியீடுகளும், இந்து வழிபாட்டு சின்னங்களும், தமிழ் மொழியில் அமைந்த மந்திரங்களும் ஆலயத்தினுடைய வெளிச் சுவர்கள், ஆலயத்தின் உட்சுவர்கள், ஆலயத்தின் கோபுரம், ஆலயத்தின் விமானம், ஆலயத் தூண்கள் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள நிலப்பகுதிகளிலும் சிறப்பாக சிலைகளாகவும், புடைப்புச் சிற்பங்களாகவும் செதுக்கப்பட்டு இவ்வாலயத்திற்கு வருகின்ற பக்தர்களை கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலும் காணப்படுகின்றது. (பார்க்க படம்: 15) ஆலயத்தின் மேற்பகுதியில் உயர்ந்து காணப்படும் பகுதிகள் அதாவது விமானம், கோபுரம் உட்பட்ட உயர்ந்த பகுதிகள் தங்க நிறத்தில் பிரகாசிப்பதனால் அது ஒரு வித்தியாசமான அழகினை இவ்வாலயத்திற்கு வழங்குகின்றது.57§

இவ்வாலயத்திற்கு சென்றால் சொர்க்கத்திற்கு வந்துவிட்டோமோ என்று தோன்றும் அளவிற்கு இங்குள்ள சிற்பங்கள் உயிர்ப்புள்ளவை போல காட்சியளிக்கின்றன. மேலும் இவ்வாலயத்தின் புனிதத் தன்மையும், இயற்கையான அமைதி மிக்க இடமாகவும் காணப்படுவதனால் இங்கு செல்லும் பக்தர்களுக்கு மன அமைதியை வழங்கி இறை அனுபவத்தினை பெறக்கூடிய சிந்தனையை தோற்றுவித்து ஆன்மீக நாட்டம் உடையவர்களாக மாறும் தன்மையினை வழங்குகிறது.§

3.2.4 ஆலயத்தினுடைய புனித தோட்டம் (Sacred Temple Gardens)

ஆதீனங்களில் தோட்டங்கள் காணப்படுவது என்பது இந்து சமய பாரம்பரியத்தில் காலங்காலமாக நிகழ்ந்து வரும் அம்சமாகும். எடுத்துக்காட்டாக இராமாயணத்தில் விஸ்வாமித்திர முனிவரின் ஆதீனத்திலே நறுமணமுடைய பூந்தோட்டங்களும், பழங்களை தரக்கூடிய பழ மரங்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளமையை குறிப்பிடலாம். அவ்வாறிருக்க இவ்வாதீனத்திலும் கடவுள் இந்து ஆலயத்தினை மையப்படுத்தி புனித தோட்டமானது அமைக்கப்பட்டுள்ளது.§

§

இவ்வாதீனத்திற்கு அண்மையில் எரிமலை காணப்படுவதனாலும், கடலில் இருந்து நான்கு மைல் தொலைவில் இவ்விடம் இருந்தமையினாலும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆதீனத்திற்குரிய நிலமானது பாலை நிலமாக மரங்களற்ற நிலையில் காணப்பட்டது. 1975ஆம் ஆண்டு சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளால் இவ்வாதீனத்தவர்களுக்கும், யாத்திரிகர்களுக்கும் இறைவனின் அருளானது அழகான சோலைகளாலும், பூந்தோட்டங்களினாலும் அமையப்பெற்ற இடத்தில் கிடைக்கப் பெற வேண்டும் என்று தூரநோக்குடன் தொடங்கப்பட்டதே இப் புனித தோட்டமாகும்.58 அவரது அன்றைய நோக்கமானது அவரின் பின்வந்த ஆதீன துறவிகளின் பாரிய செயற்பாடுகளினால் இன்று சொர்க்கம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு பசுமையும், அழகும், தூய்மையும், அமைதியும் நிறைந்த இடமாகக் காட்சி தருகின்றது. (பார்க்க ஆவணக்காணொளி: 08) §

தற்சமயம் இப்புனித தோட்டத்தில் இருந்தே இவ்வாதீனத்தில் நிகழும் அனைத்து வகையான சமயம் சார்ந்த சடங்குகளுக்கும், விழாக்களுக்கும் தேவையான மலர்கள் பெறப்படுகின்றன. அத்தோடு பழங்கள், மருத்துவ குணமுடைய மூலிகைகள், தளபாடங்களுக்குரிய மரங்கள், பசுக்களுக்கான உணவாக அமையும் புற்கள், காய்கறிகள், கீரைகள், கிழங்குகள் என பல்வேறு தேவைகளுக்கான வளமாக அத் தோட்டம் அமைகின்றது. இவை ஆதீனத்தினுடைய தேவையினையும் தாண்டி பொதுச் சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.§

முதலில் இங்கு காணப்படும் புனித தோட்டமானது தியானத்திற்கான உகந்த இடமாக எவ்வாறு அமைகின்றது என்று பார்ப்போம், நாளாந்தம் மலருகின்ற பல்வேறு மலர்களில் இருந்து வருகின்ற நறுமணமானது எப்பொழுதும் வீசிக்கொண்டே இருக்கும் இது மனதிற்கு அமைதியை வழங்கும். அதோடு நூற்றுக்கணக்கான மரங்கள் அடர்ந்து வளர்ந்து தியானத்தினை மேற்கொள்ளக்கூடிய வகையில் நிழலையும், இருப்பிடத்தினையும் கொண்டு காணப்படுவதோடு நன்கு வளர்ந்த (80அடியும் அதற்கு மேலும்) மூங்கில்கள் இங்கு காணப்படுகின்றன. இவைகளின் அருகிலும் தியானத்தினை மேற்கொள்ளக் கூடியவாறான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனை விட இப்புனித தோட்டத்தில் இயற்கையாகவே நீரின் நடுவே பல கற்பாறைகள் காணப்படுகின்றன. அவை தியானத்தினை மேற்கொள்வதற்கு மிகவும் உகந்த இடமாக அங்குள்ள துறவிகள் கொண்டுள்ளனர்.59§

இவ்வாதீன தோட்டத்திலே வாசனைகளை வீசுகின்ற மரங்களான பலுமேரியா, கொன்றை, செம்பரத்தி, ஓகிட் போன்றன காணப்படுவதோடு வளர்ப்பு புற்கள் நிறைந்த வயல்கள், கொக்கோ மரங்கள், படர் செடிகள், ஆசணிப்பலா மரம், சேம்பினக் கிழங்கு, நறுமணமுள்ள கொடிகள், அறுஞ்சுவையான பழங்களைத் தருகின்ற மரங்கள், மிகவும் அரிதாகக் காணப்படும் உள் நாட்டு மரங்கள், பாசி, பன்னம், பாரிய அறுவடைக்குரிய மரங்கள் உட்பட பல இயற்கையான சேதன தாவரங்கள் அனேகமாகக் காணப்படுவதோடு இயற்கையாக அமைந்து இத்தோட்டத்தினுள் பல கோணங்களில் ஓடும் வைலுவா எனும் நதியும் அதனால் ஆங்காங்கு அமையப்பெற்ற சிறு குட்டைகளும், நீர்வீழ்ச்சிகளும், சதுப்பு நிலங்களும், இவ்வாதீன தோட்டத்திற்கு பெரும் அழகினையும், உயிர்ப்பினையும் வழங்குவதாக அமைந்துள்ளது.§

§

இந்தியா, இலங்கை உட்பட்ட நாடுகளில் இந்து சமயத்தவர்களால் மூலிகைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்ற வேம்பு, அமலா, கறிவேப்பிலை, உருத்திராட்சம், வெற்றிலை, பாக்கு உட்பட பல மூலிகைக் குணமுள்ள மரங்கள் இங்கு காணப்படுவதோடு கலாசாரத்திற்குரியவனவான பனைமரம், சந்தனமரம், தூரியம், மாமரம், பலாமரம், வாழைமரம் போன்றனவும் இத்தோட்டத்தில் காணப்படுகின்றன.60§

இதனை விட அமெரிக்க நாட்டிற்குரிய 300ற்கு மேற்பட்ட பூ வகைகளையும், செல்வத்தினைத் தரக்கூடிய அதாவது அறுவடைக்குரிய பல மரங்களும், நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மரங்களும், வாசனைத்திரவியங்களும் (இஞ்சி, ஏலம், கராம்பு, கறுவா) இங்கு காணப்படுகின்றன. இவ்வாறு பல வகையான அம்சங்களைக் கொண்டு காணப்படும் இத்தோட்டத்தில் பல நீர்ப்பறைவைகளும் (வாத்து, நீர்க்காகம்), நீர்த்ததாவரங்களும் (அல்லி, தாமரை) அமையப் பெற்று இவ்வாதீனத்தில் காணப்படும் இப் புனித தோட்டமானது இங்கு காணப்படும் துறவிகளினதும், யாத்திரிகர்களினதும் ஆன்ம ஈடேற்றத்துக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகின்றது.61§

3.2.5 மினி மேலா காட்சிக்கூடமும் நூலகமும்

ஆதீனத்தின் உருவாக்க காலம் தொடக்கம் இன்று வரை இவ்வாதீனத்தினரால் சேகரிக்கப்பட்ட இந்து கலாசாரத்தினை பிரதிபலிக்கின்ற பல பண்பாட்டு பொருட்களும், அரிய பல நூல்களும், ஆதீன துறவிகளால் செய்யப்பட்ட பல பொருட்களும் இங்கு பாதுகாப்பாக பேணப்பட்டு வரப்படுவதோடு, அவற்றைக் காட்சிப்படுத்தியும் உள்ளனர். (பார்க்க படம்: 16) கடவுள் ஆலயத்திற்கு செல்லும் வழியில் அமையப்பெற்றுள்ள காட்சிக்கூடத்தினையும், நூலகத்தினையும் உள்ளடக்கிய கட்டடமானது ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணியிலிருந்து அன்றைய பகல்வேளை முழுவதும் திறக்கப்பட்டிருக்கும்.62§

இங்கு குருதேவரால் எழுதப்பெற்ற நூல்கள், குருதேவரைப்பற்றிய நூல்கள், இந்து சமயம் பற்றிய இவ்வாதீனத்தினரால் வெளியிடப்பட்ட நூல்கள், மரக்கறி சமையல் செய்முறை பற்றியும் அவைகளினால் ஏற்படும் நன்மைகள் பற்றியதுமான நூல்கள், சிறுவர்களுக்குரிய பட விளக்கங்களுடன் கூடிய நூல்கள், இந்து ஆயுர்வேத மருத்துவ நூல்கள், அடக்கு முறையில்லாமல் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்பது பற்றி கூறும் நூல்கள், இந்து சமயம் பற்றிய அரிய நூல்கள் அதாவது பாதுகாக்கப்பட வேண்டிய நுல்கள் என பல்வேறு நூல்களை இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர். இவற்றில் சிலவற்றினை யாத்திர்கர்களுக்கும், பக்தர்களுக்கும் விற்பனைக்காக வைத்துள்ள அதேவேளை சில புத்தகங்கள் அங்கு வைத்து வாசிப்பிற்காக மாத்திரம் வழங்கப்பட்டும் வருகின்றது.63§

§

அத்தோடு இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பல இந்து சமய பண்பாட்டினை பிரதிபலிக்கின்ற பல பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் வெண்கலத்தினாலான இறை உருவங்களும், அலங்காரப் பொருட்களும், பாவனைப் பொருட்களும் உள்ளடங்குகின்றன. இதனைவிட பலவகைப்பட்ட கிறனைட்களும், விலைமதிக்க முடியாத பல வகையான கல் வகைகளும், பளிங்குக் கற்களும் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவ்வாதீனத்தில் காணப்படும் வளங்களைக் கொண்டு பல பொருட்கள் செய்யப்பட்டு இங்கு விற்பனைக்காகவும், அழகிற்காகவும் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆதீனத்தில் காடுகளாக வளர்ந்து காணப்படும் உருத்திராட்ச மரங்களில் இருந்து பெறப்படுகின்ற சைவர்களால் புனிதமாக சிவனுக்குரியதாக கொள்ளப்படுகின்ற உருத்திராட்ச விதைகளை பயன்படுத்தி மாலைகள் உட்பட பல பொருட்களை தயாரித்து இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.§

இதனை விட வாழ்த்து அட்டைகள் (இந்து பண்டிகைகள், விழாக்கள்), நறுமணமிக்க வாசனைப் பொருட்கள் (ஊதுபத்தி), இந்து சமய வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள், ஆபரணங்கள், இந்து சமயம் சார்ந்த காணொளிகளும் (Videos) மற்றும் ஒலிகளும் (Audios) உள்ளடக்கிய DVDகளும், CDகளும் பல இங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு தமது உலகளாவிய செயற்பாடுகளை http://www.minimela.com எனும் இணையதளத்தின் ஊடாகவும் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு இவ்வாதீனமானது இந்து சமய சிந்தனைகளை இக்காட்சிக் கூடத்தினூடாகவும், நூலகத்தினூடாகவும் தனது நோக்கத்தினை அடைய பிரயத்தனம் கொண்டு செயற்பட்டு வருகின்றது என்றே கூற வேண்டும்.§

3.2.6 ஆதீனத்தின் பகுதியமைப்புக்கள்

இந்து சமயத்தில் ஆச்சிரமமானது வெறுமனே இறை ஞானத்தினை பெறுவதற்காக துறவிகள் வசிக்கும் இடம் என்று கூற இயலாது. இந்து சமய வரலாற்றிலே ஆச்சிரமமானது கல்வி கற்பிக்கப்படும் குரு குலமாகவும், புனித நூல்களின் உற்பத்தியிடமாகவும் (உதாரணமாக வியாசரின் மகாபாரத படைப்பு), ஏழைகளின் பசியினை தீர்த்த இடமாகவும், அநாதரவாக விடப்பட்ட உயிர்களின் வசிப்பிடமாகவும், பாதுகாப்பற்ற ஜீவன்களின் காவலரனாகவும் விளங்கி வந்துள்ளமையினை இந்துக்களாகிய நாங்கள் நிராகரிக்க முடியாது. ஏனெனில் இதற்கு எமது இந்து சமய மூலங்கள் ஆதாரங்களினை வைத்திருக்கின்றது. அவ்வாறிருக்க இந்த உண்மையினை குருதேவரும் உணரத்தவறவில்லை. காலத்தின் தேவையினை கருத்தில் கொண்டு தனது ஆதீனத்துடன் இணைத்து ஆதீன உறுப்பினர்களை ஆதாரமாகக் கொண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துணை அமைப்புக்களை நிறுவினார்.§

§

அந்தவகையில் இவ்வாதீனத்தின் பகுதி அமைப்புக்களாக வெளியீடுகளுக்கான நிறுவகம் (Himalayan Academy), பொது சேவை இந்து அற நிதியம் (Hindu Heritage Endowment), சைவ சித்தாந்த திருச்சபை (Saiva Siddhanta Church) என்று மூன்று அமைப்புக்களும் நிறுவப்பட்டமையினால் ஆதீன செயற்பாடானது உலகளாவிய ரீதியில் விஸ்த்தீரணம் அடைந்தது.§

3.2.6.1 வெளியீடுகளுக்கான நிறுவகம் (Himalayan Academy)

வெளியீடுகளுக்கான நிறுவகமானது (Himalayan Academy) 1965ஆம் ஆண்டு குருதேவரினால் உருவாக்கப்பட்டது. இது ஆதீன உருவாக்கத்திற்கு முன்பே உருவாக்கப்பட்டு விட்டது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும் ஆதீனத்தினை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகவே இது காணப்படுகின்றது. ஆதீனம் உத்தியோகபூர்வமாக 1977 ஆரம்பிக்கப்பட்டாலும் ஆதீன செயற்பாடுகளானது அதற்கு முன்பிருந்தே ஆரம்பித்து விட்டது என்று கூற வேண்டும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டே இந் நிறுவகத்தின் தோற்றமும், கடவுள் இந்து ஆலயத்தின் உருவாக்கமும் (1973) ஆகும்.64§

வெளியீடுகளுக்கான நிறுவகம் ஆரம்பித்த காலம் முதலே பல்வேறு வெளியீடுகளை மேற்கொண்டு வருகின்றது. அவ்வாறிருக்க இவ் நிறுவகத்தின் ஊடாக வெளிவரும் Hinduism Today எனும் சஞ்சிகையானது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகக் காணப்படும் அதேவேளை குருதேவரினாலும் அவரிற்கு பின்வந்த போதிநாத வேலன் சுவாமிகள் உட்பட பல துறவிகளால் எழுதப்பெற்ற நூல்களும், ஆதீன வெளியீடுகள் அனைத்தும் இந்த வெளியீடுகளுக்கான நிறுவகத்தின் (Himalayan Academy) மூலமே வெளிவந்தது. இன்றும் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றது. மேலும் கருத்தரங்குகளை நடாத்தல், பயிலரங்குகளை ஒழுங்கு செய்தல், ஆதீன காணொளிகளை தயாரித்தல், தொடர்பாடலினை பேணுதல், ஆதீன மற்றும் அதுசார்ந்த உத்தியோக பூர்வ இணையதளங்களை நிர்வகித்தல், இந்து கலை கலாசாரம் சார்ந்த விடயங்களை வெளிப்படுத்தல், (பார்க்க ஆவணக்காணொளி: 09) உலகில் பல்லிடங்களில் காணப்படும் ஆதீனத்துடன் தொடர்புடைய உறுப்பினர்களின் தொடர்புகளை பேணுதல் என பல செயற்பாடுகளை இந் நிறுவகத்தின் மூலமாக ஆதீன துறவிகள் மேற்கொண்டு வருகின்றனர்.§

கடவுள் ஆலயத்திலிருந்து 50யார் தொலைவில் காணப்படும் இவ்வமைப்பினுடைய கட்டடமானது பெரியளவில் இல்லாமல் சாதாரணமாக இருந்தாலும் கட்டடத்தினுள்ளே காணப்படும் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களும், துறவிகளின் தொழில்நுட்பம் சார்ந்த ஒழுங்குபடுத்தப்பட்ட செயற்பாடுகளும் (எழுத்து,இயக்கம், வடிவமைப்பு, காட்சிப்படுத்தல்), பிரமிக்கத் தக்கதாக காணப்படுகின்றது. ஆதீனத்தின் நவீனமயப்படுத்தப்பட்ட அனைத்து விடயங்களும் இங்கேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதுவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.§

§

3.2.6.1.1 சஞ்சிகையின் வெளியீடு

1979ஆம் ஆண்டு சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்டு Hinduism Today எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்நிறுவனத்தினுடைய சஞ்சிகையானது இன்று சற்குரு போதிநாத வேலன் சுவாமிகளால் மேற்பார்வை செய்யப்படுவதோடு வெளியிடப்பட்டும் வருகின்றது. இந்து தர்மம் என்பது எப்படிப்பட்டது? இந்துவானவன் எவ்வாறு வாழ வேண்டும்? இந்துசமயமானது இன்று எவ்வாறு மிளிர்கின்றது? இந்து தத்துவங்கள் எதனை கூற முற்படுகின்றது? என பல்வேறுபட்ட வினாக்களுக்கு இன்றைய நவீன உலகத்திற்கு ஏற்றவாறு இந்து மூலங்களை மேற்கோள் காட்டியும், இந்து சமய புராணக்கதைகளில் காணப்படும் விடயங்கள் பற்றிய தெளிவற்ற தன்மையினால் ஏற்படும் தவறான பார்வையினை உடைத்தெறிந்து இந்து பாரம்பரியத்தின் உண்மைகளையும், அதில் காணப்படும் அறிவியல் தன்மைகளையும் இவ்வுலகிற்கு அறியப்படுத்தி வருகின்றது.65 (பார்க்க ஆவணக்காணொளி: 10) §

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவருகின்ற இந்த சஞ்சிகையானது அழகியல் சார்ந்ததாகவும், வர்ணங்களினால் மெருகூட்டப்பட்டதாகவும் அமையப்பெற்று டிஜிடல் வடிவில் வெளியிடப்படுகின்றது. இதில் ஆதீனத்திலும் வெளியிலும் ஆதீன துறவிகளால் நிகழ்த்தப்படுகின்ற சொற்பொழிவுகள், நிகழ்வுகள், சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் மற்றும் போதிநாத வேலன் சுவாமிகளின் அறிவுரைகள், சைவ சித்தாந்த கருத்துக்கள், யோகா பற்றிய விடயங்களோடு உலகம் பூராகவும் இந்து சமயம் பற்றி வெளிவரும் சஞ்சிகைகள், புத்தகங்கள் போன்றவற்றில் காணப்படும் சிறப்பான விடயங்கள் பலவற்றினையும் உள்ளடக்கியதாகவும் இது காணப்படுகின்றது.66§

சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் (Social Network), மின்னஞ்சல் மூலமாகவும் (E-mail) உலகில் காணப்படுகின்ற மிகவும் திறமை மிக்க ஊடகவியலாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஏனைய துறைசார் கலைஞர்கள் ஆகியோர்களுடன் சிறந்த முறையில் தொடர்புகளையும் ஊதியங்களையும் சிறந்த முறையில் பேணி அவர்களின் உதவிகளின் ஊடாக இச் சஞ்சிகையானது உலகம் பூராகவும் வெளியிடப்பட்டு 100000த்திற்கு மேற்பட்ட வாசகர்களின் வரவேற்பிற்குரியதாகக் காணப்படுவதுவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.67§

§

3.2.6.1.2 நூல்களின் வெளியீடு

வெளியீடுகளுக்கான நிறுவகத்தின் (Himalayan Academy) மிகச்சிறந்த செயற்பாடுகளில் மிகவும் முக்கியமான செயற்பாடாக இந்த நூல்களின் வெளியீடு காணப்படுகின்றது. ஆரம்பகாலங்களில் இவ்வமைப்பானது நூல்களை பதிப்பித்து வெளியிடும் ஒரு வெளியீட்டகமாகவே காணப்பட்டது. அதன் பின்னரே அந்நிலை மாற்றமடைந்து பல துறைகளிலும் விஸ்தீரணமடைந்தது. அவ்வாறிருக்க மொழிபெயர்ப்பு நூல்கள் உட்பட பல நூல்களை இவ்வமைப்பானது பதிப்பித்து வெளியீடு செய்துள்ளது. தற்சமயமும் அப்பணியானது திறம்பட நடந்து கொண்டும் இருக்கின்றது. எனவே இவ்வமைப்பினால் பதிப்பித்து வெளியீடு செய்யப்பட்ட சில நூல்களைப்பற்றி இங்கு பார்ப்போம்.§

இவ்வமைப்பினால் ஆங்கில மொழியிலேயே பெரும்பாலான நூல்கள் எழுதப் பெற்றுள்ளன. அவ்வாறிருக்க சைவ சித்தாந்தத்தினைப் பற்றியும் கைலாச பரம்பரையினைப் பற்றியும் சிறப்பாகவும் ஆன்மீக ரீதியிலும் அமையப்பெற்ற “The Master Course” என்ற மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய நூலானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கொள்ளப்படுகின்றது.68 (பார்க்க படம்: 17) §

இந்து சமயத்திலே பல்வேறுபட்ட பிரிவுகளும் தத்துவக்கொள்கைகளும் காணப்படுகின்றமையினால் ஒரே விடயத்தில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. அவ்வாறிருக்க இந்து சமயத்தில் குறிப்பாக சைவசமயத்தில் எழப்பெறுகின்ற வினாக்களுக்கு விடையளிக்கக் கூடியவாறு “Dancing with Siva” எனும் நூலானது அமையப்பெற்றுள்ளது.69§

“Living with Siva” எனும் நூலானது குருதேவாவினால் எழுதப்பெற்றது. இந் நூலிலே உண்மையான ஆன்மீக வாழ்வினை எப்படி வாழலாம்? அதனைப் போன்று ஆழ்மனதில் உள்ள பதிவுகளை எவ்வாறு பகிர்ந்தளிக்கலாம்? போன்ற வினாக்களுக்கு சிறப்பாக விடையினை அளிப்பதாகக் காணப்படுகின்றது. அத்தோடு குடும்பம், பணம், உறவுகள், தொழில்நுட்பம், உணவு, வழிபாடு, யோகா, கர்மா உள்ளிட்ட பல விடயங்களை உலகியல் வாழ்விலும் இறையியல் வாழ்விலும் தொடர்புபடுத்தி தனது கருத்தினை சிறப்பாக குருதேவர் வெளிப்படுத்தியுள்ளார்.§

“Merging with Siva” எனும் நுலானது இறைவனை எவ்வாறெல்லாம் உணரலாம், எவ்வித கலக்கமும் இல்லாத ஒளி, மனதினுடைய நிலை, கனவுகள் மற்றும் எண்ணங்களின் வெளிப்பாடு, எண்ணங்களின் தோற்றம், இறப்பு, குரு மாணாக்கர்களுக்கிடையிலான உறவுமுறை போன்றவற்றினை விபரிக்கும் ஒரு மனோதத்துவம் சம்மந்தமான நூலாக இது காணப்படுகின்றது.70§

§

“Loving Ganesha” எனும் நூலானது தடைகளை நீக்கக் கூடிய விநாயகரின் சிறப்புக்களை எடுத்தியம்புகிறது. இதில் அதிகமாக கணபதி வழிபாட்டினை இந்தியாவில் மகாராஸ்டிரத்தில் காண முடிகின்றது இதனை அடிப்படையாகக் கொண்டும், இந்தியா முழுவதும் காணப்படுகின்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கணேச வழிபாடு பற்றியும் விரிவாக இந்நூல் விளக்குகின்றது. இதனைப் போன்று “Weaver’s Wisdom” எனும் நூலானது திருக்குறளை உள்ளடக்கிய ஒரு பொக்கிசமாகக் காணப்படுகின்றது71§

“Lemurian Scrolls” எனும் நூலானது இந்து ஆச்சிரம வாழ்க்கையினைப் பற்றி விபரிக்கின்றது. இந்நூலில் மனித இனத்தின் தோற்றப்பாடு மற்றும் ஆச்சிரம வாழ்க்கையின் உள்ளார்ந்த உண்மை விடயங்கள் என்பவற்றினை கூறும் ஒரு அரிதான நூலாகக் காணப்படுகின்றது. இதனைப்போன்று “Yoga's Forgotten Foundation” எனும் நூலானது அட்டாங்க யோகத்திலே இயமம், நியமம் என்ற முதலிரு படிநிலைகளின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. இவ்விரு நூல்களும் ஆச்சிரமத்தின் முன்னெடுப்பிற்கு அன்று முதல் இன்றுவரை துணை புரிந்துகொண்டிருக்கின்றது.§

வெளியீடுகளுக்கான நிறுவகத்தினால் (Himalayan Academy) அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்ட நூலான “What Is Hinduism?” எனும் நூலானது Hinduism Today சஞ்சிகையில் வெளிவந்த அனேக புகைப்படங்களுடன் கவர்ச்சியாக 416 பக்கங்களை கொண்டு காணப்படுகின்றது. இந்நூல் குடும்பத்தில் எவ்வாறான நம்பிக்கைகள் காணப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதோடு பல்வேறுபட்ட இந்து சமய வாழ்வியலோடு தொடர்புடைய பல ஐயங்களுக்கு தெளிவாகவும் இந்நூல் காணப்படுகின்றது என்றால் அது மிகையாகாது.§

இவ்வாறு பல நூல்கள் Himalayan Academyயினால் வெளியிடப்பட்டுள்ளன. இவைகள் அவற்றில் ஒருபகுதியாகவே காணப்படுகின்றது இதனைத்தவிர all about Kauai hindu monastery, growing up hindu, gurudevas spiritual visions, gurudevas toolbox, hindu basics, Karma and Reincarnation, monks cookbook, saivite hindu religion, self and samadhi, ten tales about self control, the guru chronicles, the history of hindu india, twelve shum meditations என பல நூல்களை இந்நிலையம் வெளியீடு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகும்.72§

3.2.6.1.3 கற்பித்தல் செயற்பாடுகள்

தான் பெற்ற மெய்ஞானத்தின் உண்மையை அறிய முயற்சிக்கும் உயிர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்நிலையத்தினூடாக மேற்கொள்ளப்படும் ஒரு ஆன்மீகம் சார்ந்த சேவையாக காவாய் இந்து ஆதீன துறவிகள் இப்புனித கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். இந்து கலாசார விடயங்களும், குருதேவரால் முன்மொழியப்பட்ட சைவ சித்தாந்தம் உள்ளிட்ட தத்துவார்த்த விடயங்களும், நுண்பொருளியல் விடயங்களும், யோகா மற்றும் அட்டாங்க யோகங்களும் இங்கு முதன்மையாக கற்பிக்கப்படுகின்றன. இவ்வாறான கற்பித்தல் செயற்பாடுகளானது இரண்டு விதமாக மேற்கொள்ளப்படுவதனை அவாதானிக்க முடிகின்றது.§

§

image§

அவ்வாறிருக்க தனிப்பட்ட கற்றல் செயற்பாடானது குருதேவரான சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளால் தன் குருவான யோக சுவாமிகளினது சிந்தனைகளையும், இந்து மூலங்களின் துணையுடனும் உருவாக்கப்பட்ட மூன்று தொகுதிகளாக அமைந்த புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இம் மூன்று தொகுதிகளையும் உள்ளடக்கிய புத்தகத்தில் 365 பாடங்கள் காணப்படுவதனால் ஒரு வருடத்தில் உள்ள 365 நாட்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதனை டிஜிடல் வடிவில் மின்னஞ்சல் மூலமாக பெற்று சுயமாகவும் கற்க முடியும்.73 இருந்த போதிலும் முறையாக கற்பதற்கே பலர் இவ்வாதீனத்தினை நோக்கி வருகை தருவதனை காணலாம்.§

இதனைப் போன்று உண்மை அறிவானது எமக்கு வெளியில் இல்லை அது எம்முள்ளேயே இருக்கின்றது. அதனை அறிவதே எமது இறுதி இலட்சியமாகக் காணப்படுகின்றது. என்ற உண்மையை உணர்வு பூர்வமாக உணர விரும்பும் உலகில் பல்வேறு நாடுகளில் காணப்படுகின்ற இந்து சமய ஆர்வலர்களை ஒன்று திரட்டி தெரிவுசெய்யப்பட்ட இடத்தில் குறித்த நாட்களில் ஆதீன துறவிகளினால் நடாத்தப்படும் இந்து சமயம் பற்றிய கற்றல் மற்றும் பயிற்சி செயற்பாடுகளை மேற்கொள்வதே இந்த பயணக் கற்பித்தல் செயற்பாடாகும்.74 (பார்க்க படம்: 18) §

இக்கற்பித்தல் செயற்பாட்டின் ஊடாக தியானப்பயிற்சிகள், அறிவுறுத்தலுடன் கூடிய பிரசங்கங்கள், ஆதீன கோயில் பிரவேசம், புனித தலங்களை நோக்கிய பயணம், யோகா பற்றிய நுணுக்கங்கள் என பல விடயங்கள் இப் பயண கற்பித்தலின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில் Himalayan Academyயினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப் பெற்ற பயணக்கற்றல் செயற்பாட்டினை இங்கு நோக்க வேண்டியது மிகவும் அவசியமாக அமைகின்றது.§

2014ஆம் ஆண்டு ஜுன், ஜுலை மாதங்களில் மொரிசியஸ் தீவில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற ஆழ்மனதினுடைய தேடல் சம்மந்தமான பயணக் கற்றல் செயற்பாட்டின் போது பத்து நாடுகளைச் சேர்ந்த 52 பேர் பங்குபற்றியதோடு அவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக காவாய் இந்து ஆதீனத்தினைச் சேர்ந்த சற்குரு போதிநாத வேலன் சுவாமிகள் உட்பட ஏழு துறவிகள் பங்கு பற்றினர். (பார்க்க படம்:19) அனேகமான வகுப்புக்கள் போதிநாத வேலன் சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்டதோடு ஏனைய துறவிகளின் பங்கும் சிறப்பாக இச் செயற்பாட்டில் இருந்திருந்தது என்பதுவும் இங்கு கூறப்பட வேண்டிய ஒன்றேயாகும்.75§

§

3.2.6.1.4 தொழிநுட்ப ஆவணங்கள்

ஆதீனத்தில் நிகழுகின்ற ஒவ்வொரு நிகழ்வினையும் இன்றைய நவீன உலகத்திற்கு தெறியப்படுத்துவதற்காகவும், நாளைய தலைமுறையினருக்கு இங்கு நிகழ்ந்த செயற்பாடுகளை தெரியப்படுத்துவதற்காகவும் ஆச்சிமத்தின் துறவிகளால் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய தொழிநுட்பம் சார்ந்த செயற்பாடாக இந்த ஆவணப்படுத்தல் செயற்பாடானது காணப்படுகின்றது. இவ்வாவணப்படுத்தல் செயற்பாடானது ஆவணக்காணொளிகள், ஆவணவொலிகள், ஆவணப்புகைப்படங்கள் என பிரதானமாக மூன்று வகைகளில் மேற்கொள்ளப்படுவதனை நாம் இங்கு காணலாம்.§

image§

அந்தவகையில் இவ்வாதீனத்தில் நிகழுகின்ற நிகழ்வுகள், சொற்பொழிவுகள், ஆலய வழிபாட்டு சம்பிரதாயங்கள், அமைவிடம் பற்றிய விபரங்கள், ஆதீனத்தின் கட்டட மற்றும் நிலப்பரப்பு பற்றிய விடயங்கள் என இவ்வாதீனத்தின் பல செயற்பாடுகளை ஒலியுடன் காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடே இந்த ஆவணக் காணொளிகளாக காணப்படுகின்றன. இவ்வாவணக்காணொளிகளானது பல வகையான கமராக்களின் மூலமாக காட்சிப்படுத்தப்பட்டாலும் ரிமோட் மூலம் இயங்கக் கூடிய வகையில் அமையப்பெற்ற பறக்கும் கமராவினால் பெரும்பாலும் காட்சிப்படுத்தப்டுவதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும். (பார்க்க படம்: 20) §

இதனைப்போன்று ஆவணவொலிகள் என்பது இவ்வாதீனத்தில் நிகழுகின்ற சொற்பொழிவுகள், மந்திர உச்சாடனங்கள், துதிப்பாடல்கள் என ஓசை சார்ந்த விடயங்களை ஒலிகளாக மட்டும் ஆவணப்படுத்துவதே ஆகும். இதனை விட உயர் தொழிநுட்பத்தில் புகைப்படங்களை எடுத்து அதன் மூலமாக ஆவணப்படுத்தப் பட்டவைகள் ஆவணப்புகைப்படங்களாகக் கருதப்படுகின்றன. இவ்வாறு ஆதீனத்தில் நிகழுகின்ற நிகழ்வுகளின் மேற்கூறியவாறான மூன்று பிரதான தொழிநுட்ப ஆவணங்களையும் இவ்வாதீனத்திற்குரிய உத்தியோக பூர்வ இணையதளத்தில் தரவேற்றம் செய்து உலகம் முழுவதும் இவ்வாதீன செயற்பாடுகளை வெளிக்கொணர்ந்து வருகின்றனர்.§

§

3.2.6.1.5 இணையதளச் செயற்பாடுகள்

ஆதீனத்திற்குரியதான அனைத்து இணையதளங்களையும் அதாவது துணையமைப் புக்களினுடைய அனைத்து இணையதளங்களையும் உதாரணமாக https://www.himalayanacademy.com, http://www.hinduismtoday.com போன்றவற்றினை முழுமையாக நிர்வகிக்கும் செயற்பாட்டினை இந்த துணையமைப்பே மேற்கொண்டு வருகின்றது. அவ்வாறிருக்க இவ்வாதீனத்தில் நிகழுகின்ற நாளாந்த செயற்பாடுகளையும், இவ்வாதீனத்தினுடைய வெளியீடுகளையும், தொழினுட்ப ஆவணங்களையும், கற்கை செயற்பாடுகள் பற்றிய விடயங்களையும், உலகளாவிய ரீதியில் நிகழுகின்ற இந்து சமயம் சார்ந்த விடயங்களையும் இன்னும் பலதரப்பட்ட விடயங்களையும் தமது ஆதீனத்திற்குரிய இணையதளங்களில் சேர்ப்பித்து அதனை திறன்பட நடாத்தியும் வருகின்றது.§

3.2.6.2 பொது சேவை அற நிதியம் (Hindu Heritage Endowment)

இந்து சமய பாரம்பரியத்தில் இவ்வுலக வாழ்க்கையினை துறந்து ஆச்சிரம வாழ்க்கையினை மேற்கொண்ட தன்னலமற்ற துறவிகள் தமது ஆச்சிரமங்களில் கல்விச் சேவைகளையும், மருத்துவ சேவைகளையும் சிறப்பாக செய்து வந்தமையினால் இவர்களுக்கு தட்சணைகளாக கிடைத்த செல்வத்தினையும், ஆச்சிரமத்தில் தோட்டங்களை செய்து அதனால் கிடைக்கப்பெற்ற பொருட்களையும் ஏழை வறியவர்களுக்கு வழங்கி உள்ளம் மகிழ்ந்தனர். இதனைப் போன்று இந்த காவாய் இந்து ஆச்சிரமத்தில் பொதுச் சேவையினை மேற் கொள்வதற்காக 1995ஆம் ஆண்டு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளால் உருவாக்கப்பட்டு காவாய் இந்து ஆதீன துறவிகளால் சிறந்த முறையில் நடாத்தப்பட்டு வரும் அமைப்பே இந்த பொதுச் சேவை நம்பிக்கை நிலையமாகும்.§

உலகம் பூராகவும் இருந்து நிதி சேகரித்து வரும் இவ்வாதீன பகுதி அமைப்பான பொது சேவை அற நிதியம் (Hindu Heritage Endowment) தனிப்பட்ட ஒருவரோ அல்லது குழுவாகவோ நன்கொடைகளை வழங்க முடியும். வழங்கும் நன்கொடையானது பணமாக அல்லது பொருளாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதோடு குழுவாக நன்கொடை வழங்க விரும்பினால் இரு முறைகளில் இவ்வமைப்பிற்கு வழங்க முடியும். ஒன்று நேரடியாக இவ்வமைப்பினை நாடி அல்லது தொடர்புகொண்டு தமது உதவியினை வழங்க முடியும். அப்படி இல்லையெனில் இந்நிலையத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி அந்நிலையத்தின் கிளையாக தாங்கள் ஒரு அமைப்பினை நிறுவி அதனை நிர்வகித்து அதன் மூலமும் நன்கொடைகளை வழங்க முடியும். 76§

§

இவ்வமைப்பினுடைய தற்கால தலைவராக சற்குரு போதிநாத வேலன் சுவாமிகள் சிறந்தமுறையில் இந்நிலைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றார். இவ்வமைப்பினூடாக இவ்வாதீன துறவிகள் மேற்கூறியவாறு பெற்ற நன்கொடைகளை வைத்துக் கொண்டு பல சேவைகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக அநாதை இல்லங்கள், சிறுவர் இல்லங்கள், யூத் கல்வி செயற்பாடுகள், சமய வெளியீடுகள், ஆதீனங்களில் வசிக்கும் தாய்மார்கள், யாத்திரிகர்கள், பூசகர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் மையங்கள், ஆலயங்கள், ஆலய கொண்டாட்டங்கள், முதியோரில்லம், தத்துவவியல் ஆராய்ச்சி மையங்கள், இந்துக் கலைகள் மற்றும் ஆயுர்வேதம், யோகா சம்மந்தமாக நிகழும் நிகழ்வுகள், ஆலய அன்னதானம் என பல பரந்துபட்ட நற் காரியங்களுக்கு உதவி வருகின்ற அமைப்புகளுக்கு இவ்வற நிதியம் பண உதவிகளை வழங்கி அதன் மூலமாக சமூக சேவையினை இவ்வாதீனம் மேற்கொண்டு வருகின்றது.77§

நன்கொடைகளை வழங்குபவர்கள் இவ்வமைப்பினால் என்றும் அழியாவண்ணம் ஆவனப்படுத்தப்படுவதோடு இங்கு நன்கொடையினை வழங்குபவர்களுக்கான நன்றியினை தெரிவிப்பதற்காக வருடம் ஒருமுறை நிகழும் இரவு உணவுடன் கூடிய சந்திப்பிற்காக அழைப்பு விடுக்கப்பட்டு அவ்வழைப்பில் வரவு செலவு பற்றிய விடயங்களை கலந்துரையாடி நன்கொடை வழங்குனர்களின் நன்மதிப்பினையும் அவர்களுக்கான ஊக்கத்தினையும் வழங்கி வருவதோடு இக்கிளை அமைப்பானது http://www.hheonline.org எனும் இணைய தளத்தின் மூலமும் செயற்பட்டு வருகின்றது.78 அத்தோடு இவ்வாதீன துறவிகளில் சிலர் பாடசாலைகள், அநாதை ஆச்சிரமங்கள், வைத்திய சாலைகள் போன்ற பல பொதுச்சேவை மையங்களை இயக்கி வருவதும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகக் காணப்படுகின்றது. இவ்வாறாக இவர்களின் சேவை மனப்பாங்கானது இந்துக்களாகிய எங்களால் வரவேற்கப்பட வேண்டியதாகக் காணப்படுகின்றது.§

3.2.6.3 சைவ சித்தாந்த திருச்சபை (Saiva Siddhanta Church)

இவ்வாதீனத்தில் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட சைவ சித்தாந்த திருச்சபை (Saiva Siddhanta Church) உலகளாவிய ரீதியில் சந்நியாசிகளுக்கும், மாணவர்களுக்கும் சனாதன மார்க்கத்தினை பின்பற்றவும், யோகம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும் பெரிதும் தூண்டு கோலாக அமைந்து காணப்பட்டது.§

இவரால் உருவாக்கப்பட்ட பல அமைப்புக்கள் இன்று வெற்றிகரமாக உலகில் பல இடங்களில் இயங்கி வருகின்றன. அதில் குறிப்பாக மொறீசியஸ் நாட்டில் ஏழு ஏக்கர் நிலப்பகுதியில் இவரால் உருவாக்கப்பட்ட பொதுமக்களுக்கான ஆன்மீகப் பூங்காவுடன் கூடிய அமைப்பானது இன்று சிறந்த முறையில் இயங்கி வருகின்றது. இதனைப் போன்று ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் அளவெட்டி எனும் இடத்தில் ஆச்சிரமம் ஒன்றும் இயங்கி வந்தமை பற்றியும் அறிய முடிகின்றது. அத்தோடு சர்வதேச ரீதியில் பிரசித்தி பெற்ற 50க்கு மேற்பட்ட இந்து ஆலயங்களினை பார்வையிட்டுள்ள இவர் தனது மிஷனரிகள் மூலமாக உலகில் பல இடங்களில் சைவ சமயம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வகுப்புக்கள் என்பவற்றினை குடும்ப உறுப்பினர்களுக்கும், சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் முதியோர்களுக்கும் ஆசிரியர்கள் மூலமாக வழங்கியும் வந்துள்ளார்.§

§

இவ்வாறாக இந்து சமய பாரம்பரியங்களை ஆராய்ந்து அதில் உள்ள கருத்துக்களை சிறப்பாக இவ்வாதீனத்தின் மூலம் இந்த முழு உலகிற்கும் அறியப்படுத்தி வருவதனை காணக்கூடியதாக உள்ளது.§