KAUAI’S HINDU MONASTERY OF AMERICA

§

image§

காவாய் இந்து ஆதீன வளர்ச்சியில் துறவிகளின் வகிபங்கு§

4.0 அத்தியாய அறிமுகம்

காவாய் இந்து ஆதீனம் ஆறு நாடுகளைச் சேர்ந்த 23 துறவிகளினுடைய ஆன்மீக ஆச்சிரமமாகவும், இறையியல் கற்கைகள் நிலையமாகவும் திகழ்கின்றது.79 (பார்க்க படம்: 21) இங்கு நாள்தோறும் தியானம், யோகாசனம், ஆலய கிரியைகள் மற்றும் பூசைகள் போன்றன சிறப்பான முறையில் துறவிகளினால் ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு இங்கு இருக்கின்ற அனைத்து துறவிகளும் ஒன்றிணைந்து தமது முறைப்படுத்தப்பட்ட தியானத்தினை நாள்தோறும் ஒரு மணிநேரம் (மு.ப 6.00 மணி தொடக்கம் மு.ப 7.00 மணி வரை) தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் இச்செயற்பாடானது எதிர்கால ஆன்மீகப் பிரியர்களுக்கும், உலக இந்து மக்களுக்கும் இந்து சமய அடிப்படைகளை சிறந்த முறையில் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.§

இவ்வாதீனத்தின் துறவிகள்; 1973ஆம் ஆண்டிலிருந்து ஒரு நாளில் மூன்று மணித்தியாலங்களை (மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 12.00 மணி வரை) இங்கு காணப்படுகின்ற கடவுள் இந்து ஆலயத்தின் புனித வழிபாட்டிற்கென ஒதுக்கி தமது பாரம்பரிய வழிபாடுகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு இவ்வாதீனத் துறவிகளினால் எட்டு தடவைகள் இங்கு காணப்படும் இந்து கடவுளர்களுக்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது.§

image§

இவர்களின் இவ்வாறான செயற்பாடே இறை ஞானத்தினை பெறுவதற்கான சிறந்த புனித வழிபாடாகக் கொள்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இதனைத்தவிர இவ்வாதீனத்தின் ஸ்தாபகரான சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் பற்றியும், சமஸ்கிருத மந்திரங்கள் மற்றும் தெய்வீக கீர்த்தனைகள் பற்றியும், இந்து விழாக்கள், சடங்குகள், கிரியைகள் பற்றியும், தமது குரு பரம்பரை பற்றியும் தான் கற்ற விடயங்களை வகுப்புக்கள், கருத்தரங்குகள், பயிற்சிகளின் போது இந்து சமய ஆர்வலர்களுக்கு கூறுவதன் மூலமாக இவ்வுலகிற்கு வெளிப்படுத்துகின்றனர்.§

§

தன் தேவையை தானே பூர்த்தி செய்து கொள்ளுதல் எனும் நிபந்தனைக்கு அமைய இயங்கும் இந்த துறவிகளின் பகுதி நேர வேலைகளாக ஆதீனத்தின் சமையல் வேலைகள், தோட்ட வேலைகள், ஆலய தொண்டுகள் உட்பட அனைத்து ஆதீன வேலைகளையும் கணபதி குலம், லம்போதர குலம், பிள்ளையார் குலம், ஏகதந்த குலம், சித்தி தந்த குலம் என ஐந்து பிரிவுகளாக பிரிந்து மேற்கொள்கின்றார்கள்.80§

அதிகாலையில் நித்திரை விட்டெழுந்து காலை கடன்களை முடித்து காலை வேளை முழுவதும் தியானம், யோகா, இறை வழிபாடு ஆகியவற்றில் ஈடுபட்டு, மரக்கறி உணவை உட்கொள்ளும் இவர்கள் பகல் உணவாக சோறும் கறியும் உண்பர் பின்னர் 1மணிக்கு ஆதீன வேலைகளையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளையும் மேற்கொண்டு பின்னர் மாலை நேரத்தில் சிறிய நடைபயிற்சியினை மேற்கொள்வர். இரவு உணவாக இலேசான உணவுகளை உட்கொண்டு விடடு பின்பு சிறு நேரம் அனைவரும் கலந்துரையாடி விட்டு 9மணிக்கு நித்திரை கொள்வர்.§

இவ்வாதீன துறவிகள் அட்டாங்க யோகத்தினை முதன்மைப்படுத்தி தமது ஆச்சிரம வாழ்வினை மேற்கொண்டு வருவதனால் திருமூலர் கூறிய§

இயம நியமமே எண்ணிலா ஆசனம் நயமுறு பிராணாயாமம் பிரத்தியா காரம் சயமிகு தாரணை தியானம் சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே.§

(தி.10 பா.542) §

எனும் பாடலிற்கு அமைய அதன் படி நிலைகளான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு அம்சங்களையும் சிறப்பாக இவ்வாதீனத்தில் காணக்கூடியதாகவுள்ளது. சற்குரு என்று இவ்வாதீனத்தில் அறியப்படும் சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி, சற்குரு போதிநாத வேலன் சுவாமி ஆகிய இருவரும் இவ்வட்டாங்க படிநிலையில் முறையே சமாதி நிலை, தியான நிலை எனும் நிலையில் வைத்து நோக்க முடியும். இதுபோன்றே ஏனைய துறவிகளும் அவரவர் பெற்ற ஞானத்திற்கு அமைய பல நிலைகளில் காணப்படுவதனை அறிய முடிகின்றது.§

யோக சுவாமிகளினுடைய சிந்தனைகளை பெரிதும் போற்றி வந்த சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் தனது குருவின் கட்டளையான “எமது சொந்தக்கதையை விடுத்து இந்து சமய குறிப்பாக சைவ சமய விடயங்களான தத்துவம், பாரம்பரியம், மதநம்பிக்கைகள் உட்பட அனைத்து இந்து சமயம் சார்ந்த விடயங்களையே இவ்வுலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்”81 எனும் கூற்றினை இறைவாக்காக கருதி தன் தனிப்பட்ட விடயங்கள் உட்பட ஆதீன துறவிகளின் தனிப்பட்ட விடயங்களும் பெரும்பாலும் வெளிப்படுத்தப்பட வில்லை இருந்த போதிலும் ஆதீனத்தில் துறவியர்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும், அவரவருக்குரிய கடமைகளையும் கொண்டு அவர்களின் இவ்வாதீன இயக்கத்திற்கான பணிகளை ஆராய்வோம்.§

§

இவர்களது இந்து ஆச்சிரம வாழ்வினை கண்ட பல இளம் வாலிபர்களும், திருமணமாகாதவர்களும் இவ்வாழ்வினை விரும்பி இவ்வாதீனத்தில் இணைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறிருக்க இவ்வாதீன துறவிகள் சற்குரு, பரமாச்சாரியர்கள், ஆச்சாரியர்கள், சந்நியாசிகள், சாதகர்கள் என பல படிநிலை காரணப் பெயர்களை கொண்டு காணப்படுகின்றனர். அந்தவகையில் இவ்வாதீன துறவிகள் பற்றி அடுத்து ஆராய்வோம்.§

4.1 சற்குருக்கள்

இவ்வாதீனத்தில் சற்குரு எனும் அடைமொழியானது இதுவரையில் சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி, சற்குரு போதிநாத வேலன் சுவாமி ஆகிய இருவருக்குமே வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே ஆன்ம ஞானத்தில் உயர்ந்த நிலையில் வைத்து பார்க்கப்படுகின்றனர். “சற்குரு” எனும் பெயரானது யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த யோக சுவாமிகளின் கௌரவப் பெயர்களில் ஒன்றாகும். இவ்வாதீனத்தினைப் பொறுத்தமட்டில் சற்குரு எனும் பெயர் நந்திநாத சம்பிரதாய கைலாச பரம்பரையினருக்கு வழங்கப்படும் பெயராக அமைகின்றது. இதற்கமைய இவர்கள் இருவரும் இப்பரம்பரையில் முறையே 162, 163வது ஜெகதட்சாரியராக இப்பரம்பரையினை வளர்த்துச் செல்கின்றார்கள்.82 காவியுடையுடன் தலையில் உருத்திராட்ச மாலையினை அணிந்திருக்கும் இவர்களில் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் 2001ஆம் ஆண்டு சமாதி நிலையை அடைந்து இன்று இறை நிலையில் வைத்து வழிபடப்பட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.83§

4.1.1 சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி

இந்து உலகத்திற்கு அளப்பரிய சிவதொண்டு செய்வதற்கு 1927ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி வடஅமெரிக்காவில் கலிபோர்னியாவில் பிறந்த ஒரு அவதார புருஷராக குருதேவர் சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் (பார்க்க படம்: 22) காணப்படுகின்றார். அவர் இளம் பராயத்திலேயே தமது பெற்றாரை இழந்து விட்டார். இவரின் பூர்வ புண்ணியவசமாக இருபது வயதிலேயே இவருக்கு ஆன்மீக உதயம் ஏற்பட்டு துறவு நிலைக்கு ஆளாகி விட்டார்.84§

உலக பந்தங்களைத் துறந்து பரமசிவ தத்துவங்களின் மகத்துவத்தை உணர்வதற் காகத் தவத்திலும் தியானத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரது தூய்மையான யோகப்பயிற்சியினால் அவருக்கு முழுமையான ஞான அறிவு கிட்டியது. குருவருளைப் பெற்று பின்பு திருவருளை அடையும் பெருநோக்குடன் ஞான புருஷரான குருதேவா தமது இருபத்திரண்டாவது வயதில், கொழும்புத்துறையில் மிக எளிமையான முறையில் அன்பர்களுக்கு அருட்கடாட்சம் அருளிவந்த ஞானகுரு சிவயோக சுவாமிகளின் அருட்கண் பார்வையுடன், இளந்துறவியாகிய திருநாள் 1949ஆம் ஆண்டு வைகாசிப் பூரணை தினமாகிய ஒரு நிறைந்த நாள் ஆகும். அன்றைய தினம் சிவயோகசுவாமிகள் இளந்துறவியாகிய குருதேவருக்குப் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்து சுப்பிரமுனிய சுவாமிகள் எனும் நாமதீட்சை அளித்தார். தீர்க்கதரிசியான சிவயோகசுவாமிகள் சைவ சித்தாந்த தத்துவங்களையும் சைவக் கோயில்கள் கட்டி எழுப்பும் திருப்பணிகளையும் முறையே உலகெங்கும் பரப்பியும், செயற்படவும் மிகப் பரந்த நோக்குடன் குருதேவரை இனங்கண்டு அந்தப் புனிதமான மிகப்பொறுப்புள்ள சிவ தொண்டினைச் செய்யும்படி கட்டளையிட்டு குருதேவருக்கு அருள் செய்தார்.84§

§

குருதேவரும் தமது குருவின் விருப்பப்படி அமெரிக்காவிற்குத் திரும்பி தனது ஞானகுரு உபதேசித்தின்படி சிவப்பணியாக நிறைந்த மனதுடன் நெறி தவறாமல் “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்” என்ற முழு நம்பிக்கையுடன் கர்ம வீரராகச் செயற்பட ஆரம்பித்தார்.86 உலகம் முழுவதும் வியந்து பாராட்டத்தக்க சிவதொண்டுகள் பல ஆக்கபூர்வமாக செய்தார்.§

இந்து சமயத்துடன் எவ்விதத்திலும் பிறப்பு ரீதியாக தொடர்பு படாத இவர் உண்மை பற்றிய தேடலில் இந்து சமயத்தினை கண்டறிந்து அதன் வழி இந்தப்பூமியில் ஒரு முழுமையான வாழ்வினையும், பாரம்பரியத்தினையும் ஏற்படுத்திய இவருடைய ஞான அறிவின் காரணமாக உலகளவில் அங்கிகரிக்கப்பட்ட இந்து சமய தலைவர்களில் ஒருவாரகக் காணப்படுவதோடு இவரின் புனித வாழ்க்கையினை ஏனையவர்கள் உதாரணமாகக் கொள்கின்றனர்.§

162வது ஜெகதட்சாரியராக நந்திநாத சம்பிரதாய கைலாச பரம்பரையில் உதித்த இவர் அமெரிக்காவில் உள்ள காவாய் கார்டுன் தீவில் ( Hawai’s Garden Island) 376 ஏக்கர் நிலப்பரப்பில் முதன் முதலில் வெள்ளை நிற கிரைனட் கற்களால் சிவன் கோயில் ஒன்றை அமைத்து இந்த காவாய் இந்து ஆதீனத்தினை உருவாக்கினார். அடங்கிய எரிமலையினையும், பசுமையான தாவரங்களும் நிறைந்த ஒரு ஆற்றங்கரையிலே அமைக்கப்பட்ட இவ்வாதீனத்தில் இவருடன் சேர்ந்து சுவாமி போதி நாத வேலன் சுவாமி உட்பட சில துறவிகள் தமது நோக்கத்தினை நிறைவேற்றும் பொருட்டு சூரியன் உதயமாவதற்கு முன்னரே தியானங்களில் ஈடுபட்டு வந்தனர்.87§

குருதேவர் என்று இவ்வாதீனத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட இவர் தமது ஆதீனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டு காணப்பட்ட உறுப்பினர்களின் ஊடாக ஐந்து கண்டங்களிலே இந்து சமயம் சார்ந்த இவரது பணிகள் இடம் பெற்றுள்ளது. குருதேவர் இந்து சமயத்தினுடைய மூன்று தூண்களாக இவ்வாதீனத்தில் சற்குருவின் வாக்கு, இந்து ஆலயம், வேதங்கள் ஆகியவற்றினை சிறப்பாக பேணிப்பாதுகாத்து வந்தார்.88 இப்பணியினை தற்சமயம் அவர்களது சீடர்கள் தொடர்ந்து சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றார்கள் இவரால் இவ்வாதீனத்தில் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட சைவ சித்தாந்த திருச்சபையானது (Saiva Siddhanta Church) உலகளாவிய ரீதியில் சந்நியாசிகளுக்கும், மாணவர்களுக்கும் சனாதன மார்க்கத்தினை பின்பற்றவும், யோகம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும் பெரிதும் தூண்டு கோலாக அமைந்து காணப்பட்டது.§

§

வெளியீடுகளுக்கான நிறுவகமானது (Himalayan Academy) 1965ஆம் ஆண்டு குருதேவரினால் உருவாக்கப்பட்டது. இதனூடாக பல்வேறு வெளியீடுகளை இவர் ஆரம்பித்து வெளியிட்டுள்ளார் அவற்றில் Hinduism today எனப்படும் செல்வாக்கும், விருதுகளையும் பெற்ற சர்வதேச காலாண்டு இதழானது 1979ஆம் ஆண்டு குருதேவரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது தனது ஆதீன துறவிகளினுடைய ஞான அறிவை வெளிப்படுத்துவதற்காகவும், இந்து சமய மரபுகளை வலுப்படுத்துவதற்காகவும், சனாதன தர்மத்தின் சிறப்புக்களை வெளிக்கொணரவும் ஒரு பொது சேவையாக இவரால் மேற்கொள்ளப்பட்டது. இவர் இந்து சமயம் பற்றிய பல நூல்களுக்கு ஆசிரியராக இருந்து இவ் நிறுவகத்தின் மூலம் வெளியீடும் செய்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை யோகாசனம் பற்றியவையாக அமைந்துள்ளன. பல பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் தனது முது கலைமாணிப் பட்டத்தினை இந்து சமயம் தொடர்பான கற்கையின் மூலமாக பெற்றுள்ளதோடு ஆயிரக்கணக்கான இளைஞர்களிடத்தில் சைவ சமயம் பற்றியும் அவற்றை பாதுகாத்தல் வேண்டும் என்றும் கூறி பல போதனைகளையும் செய்துள்ளார்.89§

1986இல் புதுடில்லியில் உள்ள உலகமத பாராளுமன்றத்தில் (New Delhi's World Religious Parliament) “நவீனத்துவத்தின் ஐந்து நாள் (five modern-day)” என்ற தலைப்பில் இந்து சமய பெருமைகளை வெளிப்படுத்தவும், மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்குமாக நிகழ்ந்த சர்வதேச முயற்சியில் ஜெகடாச்சாரியார்களும் (Jagadacharyas), ஆசிரியர்களும் கலந்து கொண்ட சபையில் குருதேவரும் கலந்து உரைகளை நிகழ்த்தினார். 1993ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக மதங்களின் மாநாடானது சிக்காக்கோவில் இடம்பெற்றது. இதன்போது குருதேவர் சுவாமி சித்தானந்தா சரஸ்வதி, கேரள அம்மாச்சி, மாதா அமிர்தானந்தம்மாயி ஆகியோருடன் இணைந்து இந்து சமய உரைகளை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.90§

மேலும் இவரால் வெளியிடப்பட்ட வெளியீடுகளுக்கு தர்மச்சக்கர (Dharmachakra) என்று சிறப்புப் பெயர் (1995இல்) வழங்கப்பட்டதோடு இவர் சர்வதேச கருத்து களத்தினரான ஆன்மீக மற்றும் பாராளுமன்ற தலைவர்களால் (Global Forum of Spiritual and Parliamentary Leaders) தனிப்பட்ட மனித வாழ்விற்குரிய இந்து சமயம் சார்ந்த பிரதிநிதியாக சுப்பிரமுனிய சுவாமிகள் தெரிவு செய்யப்பட்டு செயற்பட்டு வந்தமையினால் 1988இல் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட்டிலும் (Oxford), 1990இல் மொஸ்கோவிலும் மற்றும் 1992இல் ரியோ டி ஜெனிரோவிலும் (Rio de Janiero) நூற்றுக்கணக்கான மத, அரசியல் மற்றும் அறிவியல் தலைவர்கள் பல நாடுகளிலிருந்தும் முதற் தடவையாக எதிர்கால மனித வாழ்வினை விவாதிப்பதற்காக இவ்விடங்களில் குருதேவருடன் இணைந்தார்கள்.91§

§

குருதேவரினால் இந்து பாரம்பரியத்திற்கான ஒரு பொது சேவை அற நிதியம் ஒன்றை நிறுவுவதற்கு உலகம் பூராகவும் நிதி சேகரிக்கப்பட்டு 1995ஆம் ஆண்டு Hindu Heritage Endowment என்ற பெயரில் நிறுவப்பட்டது. 1996ஆம் ஆண்டு Hinduism today எனும் தமது சஞ்சிகையினூடாகவும், மேலும் India today, times பத்திரிகைகளின் மூலமாகவும் உலகம் முழுவதும் இந்து சமய கருத்துக்களை சிறப்பாக வெளிப்படுத்தியதனால் 1997ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியினால் வினவப்பட்ட இந்து சமயம் சார்ந்த கருத்துக்களுக்கும், இந்து சமயத்தில் முதன் முதலில் தோன்றிய குளோனிங் முறைகளைப்பற்றிய விடயங்களுக்கும் சிறந்த முறையில் பதிலளித்ததோடு பல்வேறு இடங்களில் சொற்பெழிவுகளையும் மேற்கொண்டு இந்து சமய உண்மைகளை உலகறியச் செய்தார்.92 (பார்க்க ஆவணக்காணொளி: 11) §

1997ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சற்குரு சுப்பிரமுனிய சுவாமிகளின் இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு யாத்திரைகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். 1998ஆம் ஆண்டு கேரளாவின் விஸ்வா இந்து பரிசத் (Vishva Hindu Parishad of Kerala) என்பவர்களினால் இந்து சமயத்திற்கு குரல்கொடுத்த இந்த நூற்றாண்டுக்குரியவர் எனும் பட்டம் கொடுக்கப்பட்டது.93 இவ்வாறு குருதேவர் பல்வேறு வகையில் இந்து சமயத்தினரால் போற்றப்பட்டு சைவ உலகின் ஒளிச்சுடராக விளங்கிய குருதேவர் 13ஆம் திகதி நவம்பர் மாதம் 2001ஆம் ஆண்டில் கனடா நேரப்படி காலை 5:54 மணியளவில் மகா சமாதியாகி சிவனின் பொற்பாதங்களை அடைந்து சிவசோதியுடன் கலந்து கொண்டார்.94§

4.1.2 சற்குரு போதிநாத வேலன் சுவாமி

சற்குரு சிவாய சுப்பிரமுனிய சவாமிகள் அவர்களால் 37 வருடங்களாக பயிற்சியளிக்கப்பட்டு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டவரே சற்குரு போதிநாத வேலன் சுவாமிகளாவார். (பார்க்க படம்: 23) இவர் தனது குருதேவரின் 2001ஆம் ஆண்டு நிகழ்ந்த மகா சமாதிக்குப் பின் இவ்வாதீனத்தினை தனது குருதேவரின் இடத்தில் இருந்து திறம்பட நடத்தி வருபவராகக் காணப்படும் அதேவேளை 163வது நந்திநாத சம்பிரதாய கைலாச பரம்பரையின் ஜெகதட்சாரியராகவும் திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.§

§

இவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளால் உருவாக்கப்பட்டு நடாத்தி வந்த Saiva Siddhanta Church, Himalayan Academy, Hindu Heritage Endowment ஆகிய மூன்று அமைப்பிற்கும் தற்சமயம் தலைவராக இருந்து அவைகளின் செயற்பாடுகளை முன்பை விட மிகவும் சிறப்பாக வளர்ச்சிப்பாதையில் வளர்த்துக் கொண்டு வருகின்றார். அதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் Himalayan Academyயினால் வெளியிடப்படும் Hinduism today எனும் சஞ்சிகையானது இவரால் சிறப்பாக மெருகூட்டப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றது.§

இச்சஞ்சிகையின் ஊடாக இவர் தனது குரு தேவரின் சிந்தனைகளையும், இந்து சமய உண்மைகளையும், மனித நேயத்தினையும், தமது ஆதீன செயற்பாடுகளையும், உலகளாவிய ரீதியில் இவ்வாதீனத்தினால் மேற்கொள்ளப்படும் இந்து சமய செயற்றிட்டங்கள் பற்றியும், உலகில் பல இடங்களில் நிகழுகின்ற இந்து சமயம் சார்ந்த விடயங்களையும் தமது ஆதீன துறவிகளின் உதவியுடன் தொகுத்து மூன்று மாதங்களுக்கொருமுறை இன்றைய நவீன உலகிற்கு ஏற்றாற் போல் வெளியிட்டு வருகின்றார்.§

அடுத்ததாக தனது குருதேவரின் ஆணைகளை நிறைவேற்றுவதில் இவர் மிகவும் முனைப்பாக செயற்பட்டு வருகின்றார். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக குருதேவரால் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாதீனத்தில் கட்டப்பட்டு வரும் இறைவன் ஆலயமானது தற்சமயம் நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது. இதற்கென சிற்பிகளும், புனித கற்களும் இந்தியாவில் இருந்து கப்பல் மூலமாக இங்கு கொண்டுவரப்பட்டது என்பது ஆச்சரியமான தகவலே ஆகும். இது போதிநாத வேலன் சுவாமிகளின் அதி தீவிரமான முயற்சியினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.95§

இதனைத்தவிர இவர் ஆதீனத்தினை சிறந்த முறையில் வழிநடத்தி வருவதோடு உலகம் முழுவதும் சென்று சொற்பொழிவுகளையும், செயற்றிட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தி வருவதோடு (பார்க்க ஆவணக்காணொளி: 12) அமெரிக்க அரசாங்கத்தின் உதவியுடன் இத்தீவில் ஆதீன செயற்பாடுகளை மேற்கொள்ளும் இவ்வாதீனத்தின் அரச தொடர்பினை சிறந்த முறையில் பேணியும் வருவதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமெரிக்க அமைச்சரவை பேரவையில் இந்து சமய பண்பாட்டு கலாசாரத்தினை நடை உடை பாவனை மூலமாகவும், சொற்பொழிவினுடாகவும் வெளிப்படுத்திய செயற்பாடானது உற்று நோக்கத்தக்கதே ஆகும். (பார்க்க ஆவணக்காணொளி: 03) இதனை விட சற்குரு நிலையில் காணப்படும் இவரை இறை நிலையில் வைத்து வணங்கும் செயற்பாடும் இவ்வாதீனத்தில் நிகழ்ந்து வருவதும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. (பார்க்க ஆவணக்காணொளி: 13) §

§

4.2 பரமாச்சாரியர்கள்

பரமாச்சாரியர்கள் என்று இவ்வாதீனத்தில் காணப்படுபவர்கள் சற்குரு நிலைக்கு முந்திய நிலையில் காணப்படுபவர்கள் ஆவர். பரமாச்சாரிய நிலையில் இருந்த போதிநாத வேலன் சுவாமிகள் குருதேவரால் சற்குருவாக ஆசி வழங்கப்பட்டார். எனவே பரமாச்சாரியர் என்று கூறப்படுபவர்களும் சற்குரு நிலையில் உள்ளவர்களும் இவ்வாதீனத்தினை பொறுத்தமட்டில் ஞானத்தால் வேறுபாடு அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். அந்தவகையில் இந்த பரமாச்சாரிய நிலையில் உள்ள பரமாச்சாரியர் சதாசிவாநந்த பழனி சுவாமி மற்றும் பரமாச்சாரியர் சிவாநந்த சேயோன் சுவாமி ஆகிய இருவரும் இவ்வாதீனத்தில் சிறந்த முறையில் மதிக்கப்பட்டு வருகின்றனர்.§

4.2.1 பரமாச்சாரியர் சதாசிவநாத பழனி சுவாமி

Saiva Siddhanta Church, Himalayan Academy, Hindu Heritage Endowment ஆகிய மூன்று அமைப்பிலும், அதன் செயற்பாட்டிலும் முக்கிய உறுப்பினராக இவர் விளங்குகின்றார். (பார்க்க படம்: 24) கணபதி குலத்திற்கு தலைவராக கடமை புரியும் இவர் புத்தகங்கள், சஞ்சிகைகள், மொழிபெயர்ப்புகள், சித்திர வேலைப்பாடுகள், இணையத்தள செயற்றிட்டங்கள், தேடல் கல்வி, பிரயாணக்கல்வி போன்ற விடயங்களுக்கு பொறுப்பாளராகவும் காணப்படுகின்றார். இங்கு தற்சமயம் நிர்மாணிக்கப்பட்டு வரும் இறைவன் கோயில் கட்டுமானப்பணியில் இவரது பங்கு அளப்பரியதாக காணப்படுகின்றது.§

இவர் இந்த ஆதீனத்தின் சிரேஸ்ட ஆலோசகராக கடமையாற்றுவதோடு ஏனைய இந்து சமய அமைப்புக்களுடனும், சர்வதேச அமைப்புக்களுடனும் இவ்வாதீனத்தின் தொடர்புகளை சிறந்த முறையில் வழிநடாத்திச் செல்பவராகவும் காணப்படுகின்றார். 1979ஆம் ஆண்டு hinduism today சஞ்சிகையின் பிரதம பதிப்பாசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர் தனது ஓய்வு நேரங்களில் ஆதீனத்தில் வெப்பத்தினை தணிக்கக் கூடிய தாவரங்களையும், அரியவகை தாவரங்களையும், மருத்துவ குணமுடைய மூலிகைகளையும், புனிதத் தன்மை வாய்ந்த தாவரங்களையும் தோட்டத்தில் நடும் செயற்பாட்டினை செய்து வருகின்றார்.96§

4.2.2 பரமாச்சாரியர் சிவநாத சேயோன் சுவாமி

இவரும் Saiva Siddhanta Church, Himalayan Academy, Hindu Heritage Endowment ஆகிய மூன்று அமைப்புக்களிலும் முக்கிய உறுப்பினராக விளங்குகின்றார். (பார்க்க படம்: 25) லம்போதர குலத்திற்கு தலைவராக கடமை புரியும் இவர் இக்குலத்திற்கு வழங்கப்பட்ட கடவுள் இந்து ஆலயம், சுகாதாரம், ஆதீன சமையலறை, விலங்குகள் பராமரிப்பு பொறுப்புக்களை இவர் குழு உறுப்பினர்களின் உதவியுடன் சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகின்றார்.§

§

வேதம் தொடர்பான விடயங்களில் கூடியளவான அறிவு இவருக்கு காணப்படுவதனால் அது தொடர்பான் போதிநாத வேலன் சுவாமி அவர்களால் வெளியிடப்படும் Hinduism Today சஞ்சிகையில் வெளியிடப்படும் விடயங்களுக்கு இவர் பெரிதும் உதவி செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவர் இறைவன் கோயிலின் நிர்மாணத்திற்காக அதிகளவான நிதிகளை பெற்றுக் கொடுத்துள்ள அதேவேளை இவ்வாதீனத்தில் பிரதம பூசகராக இருந்து அனைத்து விதமான கிரியைகளையும் மேற்கொண்டு வரும் இவர் நாள்தோறும் கடவுள் இந்து ஆலயத்தில் காலையில் 9.00 மணிக்கு சிவனுக்குரிய பூசைகளையும் மேற்கொண்டு வருகின்றார்.§

4.3 ஆச்சாரியர்கள்

ஆச்சாரியர்கள் எனும் பதமானது இவ்வாதீனத்தில் ஐந்து நிலைகளில் காணப்படும் துறவிகளில் மூன்றாவது நிலையில் காணப்படும் துறவிகளைக் குறித்து நிற்கின்றது. அதாவது அட்டாங்க யோகத்தில் அரைவாசிப்படிநிலைகளை சிறந்த முறையில் கடந்த நிலையில் காணப்படும் இவர்கள் தமக்கு கீழ்காணப்படும் துறவிகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருவதோடு தனது மெஞ்ஞானத்தினை அதிகரிக்கக் கூடிய முறையில் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதோடு இவ்வாதீனத்தின் இயக்கத்திற்காகவும் பல பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறிருக்க இவ்வாச்சாரிய நிலையில் தற்சமயம் ஆச்சாரிய குமார்நாத சுவாமி, ஆச்சாரிய ஆறுமுகநாத சுவாமி ஆகிய இருவர் காணப்படுகின்றனர்.§

4.3.1 ஆச்சாரிய குமார்நாத சுவாமி

கணபதி குலத்தில் உறுப்பினராகக் காணப்படுகின்றார். (பார்க்க படம்: 26) இவர் Himalayan Academy யில் தத்துவவியல், மனோதத்துவம், கலாசாரம் ஆகிய துறைசார்ந்த புத்தகங்களின் வெளியீட்டு பொறுப்புக்கள் அனைத்தும் இவருடையதேயாகும். இவ்வாதீனத்தின் வெளியீடாக வரும் Hinduism Today சஞ்சிகையினுடைய உப பதிப்பாசிரியராக இருந்து பக்க வடிவமைப்பு, அச்சுப்பதிப்பு, வடிவமைப்பு போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் இவரது வடிவமைப்புத் திறனை வெளிவரும் சஞ்சிகைகளில் இருந்து சிறப்பாக அறிந்து கொள்ளலாம்.§

இவர் தச்சு வேலையினை சிறப்பாக மேற்கொள்ளக்கூடியவராகக் காணப்படுவதனால் தனது ஓய்வு நேரங்களிலே ஆதீன தீவிலே காணப்படுகின்ற காடுகளில் அடர்ந்து கிளைகளை கொண்டு காணப்படும் மரங்களின் கிளைகளை வெட்டி ஆதீனத்தில் உள்ள கூடாரங்களையும், தளபாடங்களையும் மீள்நிர்மாணம் செய்து ஆதீனத்தின் அழகையும், ஸ்த்திரத் தன்மையினையும் அதிகரித்து செல்பவராகவும் இவர் காணப்படுகின்றார்.§

§

4.3.2 ஆச்சாரியர் ஆறுமுகநாத சுவாமி

இவரும் கணபதி குலத்தில் உறுப்பினராகக் காணப்படும் அதேவேளை Hinduism Today சஞ்சிகையின் முகாமைத்துவ பதிப்பாளராகக் காணப்படுகின்றமையினால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் இச் சஞ்சிகைக்கு தேவையான எழுத்தாக்கங்களையும், அறிக்கைகளையும், புகைப்படங்களையும் சேகரித்து அதனை ஒழுங்குபடுத்தி சமர்ப்பிப்பவராகக் காணப்படுகின்றார். (பார்க்க படம்: 27) இதனால் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், படப்பிடிப்பாளர்கள் போன்றோரின் இவ்வாதீனத்துடனான தொடர்புகளை இவர் பேணிப்பாதுகாக்க வேண்டியவராகவும் காணப்படுகின்றார்.§

இவரது ஊடகத்துறை சார்ந்த செயற்பாடானது ஊடகத்துறையில் இந்து சமயத்தின் பாதுகாப்பினையும், புனிதத் தன்மையினைப் பேணுவதாகவும் அமைந்துள்ளது. பல யாத்திரிகர்களும், குடும்ப அங்கத்தவர்களும் பங்குகொள்ளும் ஹோமம் வளர்க்கும் செயற்பாடானது வாரந்தோறும் இவ்வாதீனத்தில் நிகழும். இவ் நிகழ்வின் போது இவராலும் மந்திர உச்சாடனங்கள் மேற்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவர் தனது ஓய்வு நேரங்களில் தமது ஆதீன எல்லைக்குள் உண்ணக்கூடிய பழங்களைத் தரக்கூடிய மரங்கள், கடினமான மரங்கள், பனை மரங்கள் போன்றவற்றினை நடுவதனை வழக்கமாகக் கொண்டவராக காணப்படுகின்றார்.§

4.4 சந்நியாசிகள்

சந்நியாசிகள் எனும் பெயரில் இவ்வாதீனத்தில் அறியப்படுபவர்கள் சாதகர் நிலையில் இருந்து பல வருடங்கள் தமது கடைமைகளை சரிவர செய்தும், நியதிகளை பின்பற்றியவர்களும் சந்நியாசிகள் எனும் நிலைக்கு தரம் உயர்த்தப்படுகின்றனர். இவர்கள் இறை ஞானத்தினை பெறக்கூடிய வகையில் உடலையும் உள்ளத்தினையும் பக்குவ படுத்தியவர்களாகக் காணப்படுகின்றனர். தற்பொழுது எட்டு உறுப்பினர்கள் சந்நியாசிகள் நிலையில் இங்கு காணப்படுகின்றனர்.§

4.4.1 சந்நியாசின் முருகநாத சுவாமி

பிள்ளையார் குலத்தில் உறுப்பினரான இவர் இலாப நோக்கமல்லாது இந்து சமயம் சம்பந்தமாக பல்வேறு அமைப்புக்களாலும் தனி நபர்களினாலும் வெளியிடப்படும் வெளியீடுகளை ஆதீனத்திற்காக கொள்வனவு செய்பவராவார். (பார்க்க படம்: 28) இவர் இவ்வாதீனத்தினால் வெளியிடப்படும் வெளியீடுகளை மேற்பார்வை செய்பவராகவும் காணப்படுகின்ற இதேவேளை சமஸ்கிருத மொழியில் இவர் நன்கு தேர்ச்சி பெற்றமையினால் இவ்வாதீனத்தில் நிகழும் வாராந்த ஹோமம் வளர்க்கும் செயற்பாட்டில் ஆச்சாரிய ஆறுமுகநாத சுவாமி அவர்களுடன் இணைந்து சமஸ்கிருத மந்திர உச்சாடனங்களை மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதனை விட இவர் தனது ஓய்வு நேரங்களில் இயற்கையினால் சூழப்பட்ட ஆதீனத்தினை பாதுகாத்து தூய்மைப்படுத்தும் செயற்றிட்டங்களை மேற்கொள்வார்.§

§

4.4.2 சந்நியாசின் பிரமநாத சுவாமி

கணபதி குலத்தினுடைய உறுப்பினரான இவர் Hinduism Today சஞ்சிகை உட்பட இவ்வாதீனத்தினால் வெளியிடப்படும் வெளியீடுகள் அனைத்திற்கும் முகாமைத்துவ தயாரிப்பாளராக கடமையாற்றுவதுடன் அவைகளின் அச்சீட்டுப் பணிகளுக்கும் பேருதவியாளராக திகழ்ந்து வருகின்றார். (பார்க்க படம்: 29) மேலும் இந்தியா, உக்ரைன் உட்பட சில நாடுகளில் குரு தேவரின் நூல்களை மொழி பெயர்ப்பு செய்து மீளச்சு செய்து வெளியிட்ட சிறப்பினை உடையவராகக் காணப்படுகின்றார்.97§

தினந்தோறும் இவ்வாதீனத்தில் நிகழுகின்ற நிகழ்வையும், விசேட நாட்களில் நிகழ்கின்ற நிகழ்வுகளையும், பஜனைகள் மற்றும் குருக்களின் சொற்பொழிவுகளையும் புகைப்படங்கள் (photos), காணொளிகள் (videos) மற்றும் ஒலிப்பதிவுகளாகவும் (audios) ஆவணப்படுத்தி தமது ஆதீனத்திற்குரிய இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யும் பொறுப்பினை பெற்று அதனை திறம்பட மேற்கொண்டு வருகின்றார். அத்தோடு இவ்வாதீனத்திற்கு சுற்றுலா பிரயாணங்களை மேற்கொண்டு வருகைதருபவர்களையும், யாத்திரீகர்களையும், வழிநடத்தி அவர்களின் ஐயங்களை தீர்க்கும் பணியினையும் மேற்கொண்டு வருகின்ற அதேவேளை தனது ஓய்வு நேரங்களிலே நூற்றுக்கணக்கான பயன்தரும் மரங்களை பேணிபாதுகாப்பதுடன் அறுவடையும் மேற்கொண்டு வருகின்றார்.§

4.4.3 சந்நியாசின் சண்முகநாத சுவாமி

இவர் பிள்ளையார் குலத்திற்கு தலைவராக விளங்குகின்றார். (பார்க்க படம்: 30) பிள்ளையார் குலத்தினர் Saiva Siddhanta Church, Himalayan Academy ஆகிய இரு அமைப்புக்களின் நிர்வாக மற்றும் வர்த்தக செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்து தமது செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்லுகின்றனர். இவ்வாறிருக்க சந்நியாசின் சண்முகநாத சுவாமி Hinduism Today சஞ்சிகை, Mini Mela gift shop, visitor center ஆகியவற்றின் கணக்கெடுப்பு சம்மந்தமான விடயங்களை கவனித்து வருவதோடு Hindu Heritage Endowment அமைப்பின் இணையத்தளத்தோடு இணைத்து $12.8 million பெறுமதியான சொத்துக்களை நிர்வகித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.98§

இவர் பல இந்து பாரம்பரிய பஞ்சாங்கங்களின் உதவியோடு தான் சிறப்பாக கற்றறிந்த பஞ்சாங்க கணிப்பு திறமையினையும் வைத்துக்கொண்டு புதிய பஞ்சாங்கம் ஒன்றினை உருவாக்கி ஆதீன நாளாந்த செயற்பாடுகளுக்கும், இங்குள்ள துறவிகளின் நாளாந்த கடமைகளுக்கும் இவர் பெரிதும் உதிவி செய்கின்றார். அதாவது இவரால் உருவாக்கப்படும் பஞ்சாங்கத்தின் படியே ஆதீன செயற்பாடுகள் இடம்பெறுகின்றது என்று ஐயமின்றி குறிப்பிட முடியும்.§

§

மேலும் வெளிநாடுகளில் உள்ள ஆதீனத்தின் கிளைப்பதிப்பகங்களில் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், சொற்பொழிவுகளை நடத்துவதற்காகவும் சற்குரு போதிநாத வேலன் சுவாமிகளுடன் அடிக்கடி வெளிநாடு சென்று திரும்பும் இவர் ஆதீன வெளியீடுகளை கொள்வனவு செய்பவர்கள், புத்தகங்களை வாங்குபவர்கள், மாணவர்கள், ஆதீன அங்கத்தவர்கள் ஆகியவர்களின் தகவல்களை தரவுமயப்படுத்தி ஆவணப்படுத்துவதோடு அவர்களை மேற்பார்வை செய்பவராகவும் இவர் விளங்குகின்றார். இவர் தனது ஓய்வு நேரங்களில் பண்ணையில் உள்ள பசுக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவதோடு பண்ணையின் சுகாதார செயற்பாடுகளிலும் ஈடுபடுவார்.99§

4.4.4 சந்நியாசின் சரவணநாத சுவாமி

இவர் ஏகதந்த குலத்திற்கு தலைவராக விளங்குகின்றார். (பார்க்க படம்: 31) ஏகதந்த குலத்தினர் ஆதீனத்தின் உறுப்பினர்களுக்கும், Himalayan Academy களின் மாணவர்களுக்கும் உடல் நலத்தினைப் பேணக்கூடிய வகையில் அமைந்த சைவ உணவு வகைகளை தெரிவு செய்யும் பொறுப்பினை பெற்று தன் கடமைகளை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் சந்நியாசின் சரவணநாத சுவாமி அவர்கள் போதிநாத வேலன் சுவாமிகளின் சுற்றுப்பிரயாணங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு தபால் மூலமாக மேல் நிலைக்கற்கைகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்றார்.§

மேலும் இவ்வாதீனத்தில் நிகழும் வாராந்த ஹோமம் வளர்க்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதோடு தனது ஓய்வு நேரங்களில் பல நாடுகளிலும் உள்ள மாணவர்கள் மற்றும் அங்கத்தவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளவும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் தனிப்பட்ட முறையில் இணையத்தளங்களை உருவாக்கி கருத்துக்களை பகிர்து கொள்வதில் ஆர்வம் கொண்டு தனது ஓய்வு நேரத்தினை கழிப்பார்.100§

4.4.5 சந்நியாசின் யோகிநாத சுவாமி

இவர் சித்திதந்த குலத்திற்கு தலைவராக விளங்குகின்றார். (பார்க்க படம்: 32) சித்திதந்த குலத்தினர் கட்டிடம், தோட்டம், உபகரணங்கள் போன்றவற்றை பாதுகாத்தல் மற்றும் தோட்டத்தில் கீரைகள், பழங்கள், கிழங்குகள், உட்பட உணவு வகைகளை உற்பத்தி செய்தல் மற்றும் இந்துப் பண்டிகைகள், விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளல் அத்தோடு கடவுள் இந்து ஆலய ஒன்றுகூடலை ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்களை பொறுப்பேற்று மேற்கொண்டு வருகின்றனர்.101§

சந்நியாசின் யோகிநாத சுவாமி அவர்கள் தமிழில் நன்கு தேர்ச்சி பெற்று விளங்கியமையால் இந்தியாவில் உள்ள சிற்பிகளையும், பெங்களூரில் இருந்து புனித கற்களையும் கப்பல் மூலமாக ஆதீன இறைவன் கோயில் கட்டுமானப்பணிக்கு கொண்டுவர முடிந்ததோடு இவ் இறைவன் கோயில் நிர்மாணப்பணியை மேற்கொள்ளும் வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்களின் நிர்மாண செயற்பாட்டினை மேற்பார்வை செய்பவராகவும் விளங்குகின்றார்.§

§

4.4.6 சந்நியாசின் செந்தில்நாத சுவாமி

கணபதி குலத்தினுடைய உறுப்பினரான இவர் ஆதீன வெளியீடுகளில் பதிப்பு, வடிவமைப்பு, தயாரிப்பு ஆகிய செயற்பாடுகளில் சற்குரு போதிநாத வேலன் சுவாமி, பரமாச்சாரிய சதாசிவாநந்த பழனி சுவாமி, ஆச்சாரிய குமார்நாத சுவாமி ஆகியோருக்கு உதவியாக செயற்பட்டு வருகின்றார். (பார்க்க படம்: 33) ஆதீனத்தில் தொழிநுட்பம் சார்ந்த பணிகளை அதாவது ஆதீன இணையத்தளம், சமூகவலைத்தளங்கள், கணணி மென்பொருள் மற்றும் வன்பொருள் சார்ந்த தொழிநுட்ப செயற்பாடுகள் அனைத்தும் இவரின் ஆலோசனைகள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.102§

மேலும் ஆதீனத்தில் நிகழுகின்ற நிகழ்வுகளை காணொளிகளாக ஆவணப்படுத்தும் பொறுப்பினையும் இவர் பெற்றுள்ளதோடு Hinduis Today சஞ்சிகையில் கட்டுரைகளை எழுதியும், பதிப்பித்தும் வருகின்றார். அத்தோடு அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போதிநாத சுவாமிகளுடன் இணைந்து இந்து சமயம் சார்ந்த விடயங்களை போதனை செய்து வருவதோடு இவர் தனது ஓய்வு நாட்களில் யோகா பயிற்சிகளிலும், சமையல் நடவடிக்கைகளிலும், தீவில் நீண்ட நடைபயணங்களிலும் ஈடுபடுபவராக திகழ்ந்து வருகின்றார்.§

4.4.7 சந்நியாசின் சித்தநாத சுவாமி

இளம் சுவாமியான இவர் பிள்ளையார் குலத்தின் உறுப்பினராகக் காணப்படுவதோடு 2010ஆம் ஆண்டு மே மாதம் பௌர்ணமியன்று சந்நியாசின் தீட்சையினைப் பெற்றவராவார். (பார்க்க படம்: 34) இவ்வாதீனத்தின் பிரதான கணக்காளராகக் காணப்படுவதனால் இவ்வாதீனத்தின் எல்லா வகையான வரவு செலவு திட்டங்களை மேற்கொள்பவராகவும், வருடாந்த கணக்கறிக்கையினை பரிசோதனை செய்பவராகவும், ஆதீனத்தின் நிதிப்பரிமாற்றத்தினை மேற்கொள்பவராகவும், வரிசார்ந்த படிவங்களை பூரணப்படுத்துபவராகவும் இவர் காணப்படுகின்றமை இவரின் கணித மற்றும் கணணி தொடர்பான விடயங்களில் உள்ள அறிவை புலப்படுத்துவதாக அமைகின்றது.§

Saiva Siddhanta Church, Himalayan Academy, Hindu Heritage Endowment ஆகிய மூன்று அமைப்புக்களினதும் பேணிப்பாதுகாக்கும் பணியையும் இவர் மேற்கொண்டு வருவதோடு இந்தியாவில் இருந்து Mini Mela gift shop புனித கலை சார்ந்த பொருட்களை கொள்வனவு செய்யும் பணியினையும் இவர் மேற்கொண்டு வருகின்றார்.103 மேலும் இவ்வாதீனத்தில் நிகழும் வாராந்த ஹோமம் வளர்க்கும் செயற்பாட்டில் பங்குகொள்வதோடு தனது ஓய்வு நாட்களில் பசுக்களின் பண்ணையினை கவனித்து வருவதோடு விசேடமான உணவுகளையும், சூடான குழம்பு வகைகளையும் தயாரித்து ஆதீன அங்கத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பண்பினையும் உடையவராகக் காணப்படுகின்றார்.§

§

4.4.8 சந்நியாசின் கைவல்யநாத சுவாமி

பிள்ளையார் குலத்து உறுப்பினர்களில் இவரும் ஒருவராகக் காணப்படும் அதேவேளை இவர் நீண்ட காலமாக அதாவது 1967ஆம் ஆண்டிலிருந்து இவ்வாதீனத்தில் தொண்டாற்றி வருகின்றார். (பார்க்க படம்: 35) 2014ஆம் ஆண்டு ஆறாம் மாதம் பத்தாம் திகதி வைகாசி விசாகத்தில் சந்நியாச தீட்சையினைப் பெற்;றவராவார். மேலும் Hinduis Today சஞ்சிகையில் விளம்பரம் சம்பந்தமான அனைத்து விடயங்களையும் பொறுப்பேற்று மேற்கொண்டு வருவதுடன் ஆதீனத்தில் நிகழுகின்ற நிகழ்வுகள் பற்றியும், செயற்றிட்டங்கள் பற்றியும் விடயத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் அறிவித்தல் விடுக்கும் பணியினையும் மேற்கொண்டு வருகின்றார்.§

மலேசியா மற்றும் மொறீசியஸ் நாடுகளில் இரண்டு வருடங்கள் சைவ சித்தாந்தத்தினை கற்பித்ததோடு Himalayan Academy யினால் வெளியிடப்படும் ஆன்மீகம் சம்மந்தமான விடயங்களை வெளிநாடுகளில் குழுச் செயற்பாடுகளின் மூலமாகவும், தனிச்செயற்பாடுகளின் மூலமாகவும் மக்களுக்கு சிறந்த முறையில் சென்றடைவதற்கு பெரும் உதவியாக உள்ளார்.§

4.5 சாதகர்கள்

சாதகர்கள் என்ற ஆரம்ப நிலையினை இவ்வாதீனத்தில் அடைய வேண்டுமானால் இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேல் இவ்வாதீனத்தில் தொண்டுகளை மேற்கொண்டு அதில் துறவிகளுக்கு ஏற்றவாரான பயிற்சிகள் நிகழும். இப்பயிற்சியில் குறித்த காலம் சிறப்பாக தமது ஆச்சிரம வாழ்வை விரும்பி மேற்கொண்டால் இவர்கள் சாதகர்கள் எனும் துறவு நிலைக்குரிய ஆரம்ப நிலையில் இணைக்கப்படுவார்கள். இவ்வாறு இணைக்கப்பட்ட இவர்களுக்கு இறை ஞானத்தினை பெறுவதற்குரிய ஆரம்ப பயிற்சிகளை சிரேஸ்ட துறவிகள் வழங்குவார்கள். அத்தோடு சாதகர்கள் தமக்கு வழங்கப்பட்ட வேலைகளையும், கடமைகளையும் செய்து முடிக்க வேண்டியவர்களாக காணப்படுகின்றனர்.104§

மேலும் இவர்கள் பல நிபந்தனைகளுக்கும் உள்வாங்கப்படுபவர்களாக காணப்படுகின்றனர். அதில் தலைமயிர், தாடி, மீசை ஆகியவற்றை முழுமையாக மழித்தல், உடலை எந்நேரமும் சுத்தமாக வைத்திருத்தல், வெள்ளைநிற ஆடையினை சுத்தமாக அணிதல், உண்மை வார்த்தைகளை பேசுதல், நற்செயல்களை செய்தல் என பல கட்டுபாடுகளின் கீழ் வாழ்பவர்களாகக் காணப்படுகின்றனர். இது இந்து சமயத்தில் கூறப்படும் அட்டாங்க யோக நெறியின் இயமம், நியமம் என்ற முதல் இரு படி நிலைகளை குறிப்பதாகவே அமைகின்றது. இதனை மேல்வரும் திருமந்திரப்பாடல்கள் சிறப்பாக புலப்படுத்தி நிற்கின்றன.§

§

கொல்லான், பொய் கூறான், களவிலான், எண்குணன் நல்லான், அடக்க முடையான், நடுச்செய்ய வல்லான், பகுந்துண்பான், மாசிலான், கள், காமம் இல்லான், இயமத் திடையில்நின் றானே”§

~ (திருமந்திரம் 555) §

ஆதியை வேதத்தின் அப்பொருளாளனைச் சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப் பாதியுள் மன்னும் பராசக்தி யோடு உடன் நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே”§

~ (திருமந்திரம் 555) §

இந்த சாதக நிலையிலே ஒன்பது உறுப்பினர்கள் இவ்வாதீனத்தில் இயங்கி வருகின்றனர். அவர்களின் செயற்பாடுகளைப்பற்றியும், பணிகள் பற்றியும் அடுத்து நோக்குவோம்.§

4.5.1 சாதக ஹரநந்திநாதா

லம்போதர குலத்தின் உறுப்பினரான இவர் இறைவன் கோயில் கட்டுமானப்பணியில் நிதி சம்மந்தமான விடயங்களை மேற்கொண்டு வருவதோடு சில வருடங்களாக குருநாதரின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு காணப்படும் சுயம்பு லிங்கத்தின் புனிதத்தன்மையை தொடர்ந்தும் பேணுவதற்காக ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணிக்கு பூசையினை மேற்கொண்டு வருகின்றார். (பார்க்க படம்: 36) மேலும் அர்ச்சனைக்காக அடியவர்களால் கொடுக்கப்படும் பெயர் விபரங்களை நிர்வகிப்பதோடு பூசை முடிவில் விபூதி பிரசாதத்தினை அடியவர்களுக்கு கொடுக்கும்; பணியினையும் செய்து வருகின்றார்.§

ஆதீனத்திற்கு நன்கொடைகளையும், பரிசுப்பொருட்களையும், ஏனைய உதவிகளையும் செய்து வருகின்றவர்களின் தொடர்புகளை சிறப்பாக பேணி வருவதோடு அவர்களுக்கு வருடத்தில் ஒரு நாள் இரவு உணவினை வழங்கும் ஆதீன செயற்பாட்டிற்கு இவரே பேருதவியாக இருந்து வருகின்றார். தனது ஓய்வு நாட்களிலே இவ்வாதீனத்தில் காணப்படும் மயிர்களையுடைய ஒருவகையான பூனை இனத்திற்கு உணவளித்து பேணிவருவதுடன் காட்டுப்பகுதியில் ஆதீனம் காணப்படுவதனால் சமையல் உபகரணங்களையும், பொருட்களையும் சமையலுக்கு பொறுப்பானவர் மற்றும் சில சந்நியாசிகளுடனும் சென்று நகர்ப்பகுதியில் வாங்கி வருபவராகவும் திகழ்கின்றார்.105§

§

4.5.2 சாதக ஆதிநாதா

சித்தி தந்த குலத்தின் சிரேஸ்ட உறுப்பினரான இவர். (பார்க்க படம்: 37) இவ்வாதீனத்தில் கட்டடம் மற்றும் உபகரணங்கள் தொடர்பான விடயங்களில் சந்நியாசின் யோகிநாத சுவாமிகளுடன் இணைந்து தனது செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை இவ்வாதீனத்தில் சம்பளத்துக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளிகளை மேற்பார்வை செய்தும் வருகின்றார். இவர் சேதன மரக்கறி தோட்டங்களையும் உண்ணக்கூடிய பழங்களைத் தரக்கூடிய அதாவது வாழைப்பழம், பப்பாளிப்பழம் உட்பட பல பழ வகைகளையும் ஆதீன உறுப்பினர்களின் உதவியோடு உற்பத்தி செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.§

அத்தோடு ஆதீனத்திற்கு தேவையான நீர் வழங்கல் செயற்பாட்டினை இவரே மேற்கொண்டு வருகின்றார். அத்தோடு தனது ஓய்வு நாட்களில் தளபாடம் தயாரிக்கக் கூடியவாறு தூரநோக்கில் அறுவடைக்காக நடப்பட்ட 10000 மரக்கன்றுகளை பராமரிப்பதற்கான செயற்பாடுகளை இவர் முன்னெடுப்பதோடு தானிய வகைகளான கொக்கோ, மைலோ உட்பட சில தானியங்களின் விதைகளை நடும் வேலையினையும் இவர் செய்து வருகின்றார்.§

4.5.3 சாதக நீலகண்டநாதா

இவர் சித்திதந்த குலத்தின் உறுப்பினராவார். (பார்க்க படம்: 38) இவர் ஆயர்வேதம் தொடர்பான சிறந்த அறிவினை கொண்டு காணப்படுவதனால் நோயைக் குணப்படுத்தக்கூடிய மூலிகைகளையும், தாவரங்களையும் தோட்டத்தில் நட்டு வருவதோடு இவ்வாதீன துறவிகளுக்கு ஏற்படும் சிறு சிறு வியாதிகளுக்கு மருத்துவ சேவையினை வழங்குபவராகவும் காணப்படுகின்றார். அத்தோடு சத்குரு சுப்பிரமுனிய சுவாமிகளின் மகா சமாதியில் மாதம் ஒருமுறை நிகழ்த்தப்படும் விசேட பூசையிலும் கலந்து கொண்டு வருகின்றார்.§

புனித தியான மையத்தினை திறம்பட பேணிவரும் இவர் ஓய்வு நேரங்களில் சமையலறைக்கு அருகில் இருக்கும் தனது மூலிகைத் தோட்டத்தில் காணப்படும் மருத்துவ குணமுடைய தாவரங்களை பயன்படுத்தி மருத்துவ குணமுடைய உணவுகளை தயாரித்து ஆதீன துறவிகளுக்கு உணவாக வழங்கும் பழக்கத்தினையுடையவராகக் காணப்படுகின்றார்.§

4.5.4 சாதக தெஜதேவநாதா

சித்திதந்த குலத்தின் உறுப்பினரான இவர் கட்டட மற்றும் புனித தோட்டம் ஆகியவற்றிற்கு உதவி பொறுப்பாளராக திகழ்கின்றார். (பார்க்க படம்: 39) இவர் பழத்தோட்டம், மரக்கறி தோட்டம் ஆகியவற்றில் நடைபெறும் அறுவடை செயற்பாட்டினை கண்காணித்து வருவதோடு தொழில் உபகரணங்கள், வாகனங்கள், போன்றவற்றையும் கண்காணித்து வருகின்றார்.§

§

சத்குரு சுப்பிரமுனிய சுவாமிகளின் மகா சமாதியில் மாதம் ஒருமுறை நிகழ்த்தப்படும் விசேட பூஜையிலும் கலந்துகொள்ளும் இவர் தனது ஓய்வு நேரங்களில் சமையலுக்கு உதவி செய்தல், யோகாசனப் பயிற்சியினை மேற்கொள்ளல் போன்றவற்றினையும் மேற்கொண்டு வருகின்றார்.§

4.5.5 சாதக நந்திநாதா

லம்போதர குலாமின் உறுப்பினரான இவர் இவ்வாதீனத்தில் உள்ள அனைவருக்கும் உணவினை வழங்கும் பிரதான சமையலாளராகக் காணப்படுகின்றார். (பார்க்க படம்:40) இதனால் வாரம் ஒருமுறை ஆதீனத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு சென்று சமையலுக்குத் தேவையான பொருட்களை ஆதீன துறவிகள் சிலருடன் சென்று வாங்கிவரும் செயற்பாட்டினை தொடர்ச்சியாக மேற்கொள்பவராகக் காணப்படும் அதேவேளை கடவுள் ஆலயத்துடன் தொடர்பு பட்ட உதவிகளை வழங்க வருபவர்களுக்கு விசேட உணவுகளை தயாரித்து அவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டினையும் இவர் மேற்கொண்டு வருகின்றார்.§

ஆலயத்திற்கு தேவையான பொருட்களை அதாவது இறைவனுக்குச் சாத்தும் பட்டாடைகள், பூஜைக்குத் தேவையான பொருட்கள் என அனைத்துப் பொருட்களையும் கொள்வனவு செய்பவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு சத்குரு சுப்பிரமுனிய சுவாமிகளின் மகா சமாதியில் மாதம் ஒருமுறை நிகழ்த்தப்படும் விசேட பூஜையிலும் கலந்துகொள்ளும் இவர் சாதக நிலையில் உள்ள சந்நியாசிகளினால் (புதிதாக இணைந்தவர்கள்) உச்சரிக்கப்படும் மந்திரங்களின் உண்மைத்தன்மையை சந்நியாசின் செந்தில்நாத சுவாமிகளுடன் இணைந்து ஆராய்ந்து தவறுகளை நிவர்த்திசெய்ய பேருதவியாகவும் திகழ்கின்றார்.§

இவர் விலங்குகள் மீது அதிகம் விருப்பம் கொண்டு காணப்படுவதனால் ஓய்வு நாட்களிலே ஆதீனத்தில் உள்ள பூனைகள், பசுக்கள், பறவைகள், மீன்கள் என அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளித்து வருபவராகவும், இறைவனுக்கு அணிவிக்கும் பூமாலையினைக் கட்டும் செயற்பாட்டினையும், மந்திரங்களை பயிற்சி செய்து பார்க்கும் செயற்பாட்டினையும் இவர் மேற்கொண்டு வருகின்றார்.§

4.5.6 சாதக ராஜநாதா

கணபதி குலத்தினுடைய உறுப்பினரான இவர் இவ்வாதீனத்தின் துறவிகளினால் பெரிதும் விரும்பப்படும் ஒருவராகக் காணப்படுகின்றார். (பார்க்க படம்: 41) அதற்கான காரணம் என்னவென்று பார்த்தோமானால் இவர் இனிமையாக அனைவருடனும் பேசிப் பழகும் சுபாவம் உடையவராகக் காணப்படுவதோடு இணையம் தொடர்பாக இவருக்கு இருக்கும் அறிவானது இங்குள்ள துறவிகளின் சில தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இருப்பதனாலும் இவர் அனைத்து துறவிகளுடனும் நெருங்கிப் பழக வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியமையினாலேயே இவர் அனைவரின் மனங்கவர்ந்தவராக திகழ்கின்றார்.106§

§

அத்துடன் ஆதீனத்தில் வருகைதரு மாணவர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு துணை செயற்பாடுகளை மேற்கொண்டும் வருகின்றார் இவர் சத்குரு சுப்பிரமுணிய சுவாமிகளின் மகா சமாதியில் மாதம் ஒருமுறை நிகழ்த்தப்படும் விசேட பூஜையிலும், வாரந்தோறும் இங்கு நிகழ்த்தப்படும் ஹோமம் வளர்க்கும் செயற்பாடுகளிலும் பங்கு கொள்வார். அத்தோடு தனது ஓய்வு நேரங்களில் ஆதீனத்தில் உள்ள துறவிகளுக்கு சிறப்பான பானங்களை தயார் செய்து வழங்கும் பழக்கத்தினை உடையவராகவும் திகழ்கின்றார்.§

4.5.7 சாதக மயுரநாதா

பிள்ளையார் குலத்தில் இருந்து தனது கடமைகளை மேற்கொள்ளும் இவர் கணித அறிவிலும் மற்றும் கணணி அறிவிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்று காணப்படுவதனால் நிர்வாகம், நிதிக்கணக்கு, தரவுப்படுத்தல் போன்ற ஆதீன செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவி வருகின்றார். (பார்க்க படம்: 42) இவர் தனது ஓய்வு நேரங்களில் ஆதீனத்தில் காணப்படும் இயந்திரங்களில் காணப்படும் சிறு சிறு பிழைகளை திருத்தம் செய்வதோடு பசுவில் பால் கறத்தல், சமையல் செயற்பாடுகளுக்கு உதவுதல் என பல செயற்பாடுகளை இங்கு மேற்கொண்டு வருகின்றார்.§

4.5.8 சாதக ஜெயநாதா

கணபதி குலத்தினுடைய உறுப்பினரான இவர் ஊடகத்துறை, பக்க வடிவமைப்பு, புகைப்பட வடிவமைப்பு, செயற்றிட்ட முகாமைத்துவ நிர்மாணிப்பு, விவசாயம் என பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றவராகக் காணப்படுவதனால் இவ்வாதீனத்தில் இவை தொடர்பான விடயங்கள் அனேகமானவற்றில் இவரது உதவி எனைய துறவிகளுக்கு தேவைப்பட்டு வந்துள்ளது. (பார்க்க படம்: 43) மேலும் சித்திரம் வரைதல், சிறப்பாக எழுதும் திறமை என்பன இவருக்கு இயல்பாகவே காணப்படுவதனால் Hinduism today சஞ்சிகையில் கட்டுரைகளை எழுதுவதற்கும், வடிவமைப்பதற்குமான சந்தர்ப்பம் தானாகவே கிடைக்கப்பெற்றதோடு அதனை சிறப்பாகவும் மேற்கொண்டு வருகின்றார்.§

4.5.9 சாதக தயநாதா

சித்திதந்த குலத்தின் உறுப்பினரான இவர் அண்மைக்காலத்தல் அதாவது 2012ஆம் ஆண்டுதான் இவ்வாதீனத்தில் இணைந்துள்ளார். (பார்க்க படம்: 44) இரண்டு வருடங்கள் இவ்வாதீனத்தில் சிறப்பாக தொண்டுகளை புரிந்து வந்த இவர். 2014ஆம் ஆண்டிலேயே சாதக எனும் இவ்வாதீன ஆரம்ப துறவு நிலைக்குரிய அடைமொழிப் பெயரினை பெற்றார். இவர் தற்சமயம் ஆதீன கட்டடத் தொகுதி, உணவு ஆகிய பிரிவுகளில் கொடுக்கப்பட்ட வேலைகளை சிறப்பாகச் செய்து வருகின்றார்.§

§

மேலும் அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சிவா மாட்டுத் தொழுவத்தினை சுத்தம் செய்தல், பசுவுக்கு உணவு வழங்குதல், கழிவுகளை அகற்றுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதோடு நிர்மாணத்துறை, நில அளவைத்துறை போன்ற துறைகளில் சிறந்த முறையில் ஆதீனத்தினரினால் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றார். இவர் தனது ஓய்வு நேரங்களில் சமையல் செயற்பாடுகளுக்கு உதவுவதோடு, சர்க்கரை நீக்கப்பட்ட ஐஸ்கிரீம், பேகன் போன்ற உணவுகளை ஆதீனத்தினருக்காக தயாரித்து வழங்கி வருகின்ற செயற்பாட்டினை வழமையாகக் கொண்டுள்ளார்.107§

இவ்வாறு இவ்வாதீனத்தில் துறவிகளின் துறவு வாழ்க்கையானது சுயநலமான ஒரு இறை இன்பத்தினை பெறும் நோக்கமாக அமையப் பெறாமல் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” எனும் திருமூலரின் கூற்றிற்கமைய ஒவ்வொரு துறவியும் இவ்வாதீனத்தில் பொதுச் சேவையினை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது இப்பணியே இவ்வாதீனத்தின் நிலையிருப்புக்கு அடிப்படையாக விளங்கி வருகின்றது என்பதனை மேற்கூறிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆணித்தரமாக குறிப்பிட முடியும்.§