KAUAI’S HINDU MONASTERY OF AMERICA

§

image§

நிறைவுரை§

உலகம் முழுவதும் காணப்படும் பல இந்து நிறுவனங்களைப் பற்றி அறிந்திருக்கின்றோம். ஆனால் அவைகள் இந்து சமயத்தின் தாயகமான இந்தியா மற்றும் பழங்காலம் முதலாக இந்துக்கள் வாழ்ந்து வரும் நாடுகளான ஈழம், நேபாளம் உட்பட்ட நாடுகளில் இருந்து சென்ற இந்துக்களால் உருவாக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருவதாகவே பெரும்பாலும் இருக்கும். அவ்வாறிருக்க முழுமையாக மேலைத்தேசத்தவரினால் உருவாக்கப்பட்தோடு இயக்கப்பட்டும் வரும் காவாய் இந்து ஆதீனம் பற்றியும், அதன் உலகளாவிய ரீதியிலான இந்து சமயப் பணிகளை பற்றியும் வெளிப்படுத்துவதாகவே “அமெரிக்க காவாய் இந்து ஆதீனம்” எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வானது அமைந்துள்ளது.§

மேலைத் தேசத்தவர்களின் கீழைத்தேச வருகையால் இந்து சமயத்திற்கு பாரிய சரிவு ஏற்பட்டது என்று பொதுவாக இந்துக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகின்றது. அதன் உண்மைத்தன்மையானது ஆதார பூர்வமாக காணப்பட்டாலும் அவ்வாறு ஏற்பட்ட சரிவு நிலையினை சரி செய்ததில் மேலைத்தேசத்தவர்களுக்கு பாரிய பங்குள்ளது. அவைகளை ஆசியியற் கழகத்தின் (The Asiatic Society) உருவாக்கம் மற்றும் கிழக்கத்திய புனித நூல்களின் (The Sacred Books of the East) தொகுப்பு ஆகியவைகளை முதன்மைப்படுத்தி ஆதார பூர்வமாக நிறுவியதோடு கூட்டு முயற்சிக்கு வெற்றி கட்டாயம் கிடைக்கும் என்பதையும் ஆய்வு தலைப்பில் நின்று விலகாது இவ்வாய்வின் இரண்டாவது அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளது.§

அமெரிக்காவில் இருந்து 1949ஆம் ஆண்டு ஈழம் வந்த சற்குரு சிவாய சுப்பிரமுணிய சுவாமிகள் அக்காலத்தில் ஈழத்திருநாட்டில் சித்தர் மரபையும், சைவ சித்தாந்த தத்துவ நெறியினையும் ஒருங்கே வளர்த்து வந்த யோக சுவாமிகளின் பல சீடர்களில் ஒருவரானார். இன்று இந்த சித்தர் மரபையும், சைவ சித்தாந்த நெறியையும் மிகச்சிறப்பாக நாம் பார்க்க வேண்டுமானால் கட்டாயம் காவாய் தீவில் உள்ள இந்து ஆதீனத்திற்கு செல்ல வேண்டும். அந்த அளவிற்கு அங்கு இவையிரண்டும் சிறப்பாக பேணப்படுவதோடு வளர்க்கப்பட்டும் வருகின்றன. ஈழத்தில் இருந்து திரும்பிய சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளால் 1979ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வாதீனத்தின் ஒன்றன் பின் ஒன்றாக மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு செயற்படுகளும் அதன் வளர்ச்சிப் பாதையின் ஒவ்வொரு படிநிலைகளாக அமைந்திருக்கின்றன. அவ்வாறிருக்க இவ்வாதீனத்தின் செயற்பாடுகளையும், அச்செயற்பாடுகள் இந்து சமய பாரம்பரியத்திற்கு அமைய மேற்கொள்ளப்படுகிறதா? என்பது பற்றியும் ஆராயப்பட்ட மூன்றாம் அத்தியாயத்திலே இவ்வாதீன செயற்பாடுகள் அனைத்தும் இந்து பாரம்பரியத்தில் நின்றே மேற்கொள்ளப்படுகின்றது என்ற முடிவினை கூறக்கூடிய வகையில் காணப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும்.§

§

இவ்வாய்வின் நான்காவது அத்தியாயத்திலே ஹவாய் இந்து ஆதீன வளர்ச்சியில் அவ்வாதீனத்தின் துறவியர்களினுடைய பங்கானது எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை இவ்வாதீனத்திற்குரிய 06 நாடுகளைச் சேர்ந்த 23 துறவிகளின் செயற்பாடுகள் அத்தோடு அவர்களின் கடமைகள் ஆகியன பற்றியும் ஆரயப்பட்டது. அதன் படி இவ்வாதீனத்து துறவிகள் துறவு வாழ்க்கையில் இருந்த போதிலும் இன்றைய நவீன உலக போக்கிற்கேற்ப இந்து சமய உண்மைகளை உலகிற்கு வழங்குவதன் மூலமாகவும், தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை எவ்வித சலன மனப்பாங்கும் இல்லாமல் மேற்கொள்வதனாலும், தியானம் மற்றும் யோகா பயிற்சிகளின் மூலமாக ஒருநிலைப்படுத்தப்பட்ட மனதுடன் இயங்குவதனாலுமே இந்த ஹவாய் இந்து ஆதீனமானது ஒரு ஸ்த்தரமான தன்மையில் இயங்கிக் கொண்டு வருகின்றது என்ற முடிவினை எடுக்க முடிகின்றது.§

எனவே ஹவாய் இந்து ஆதீனமானது தற்கால இந்து சமய வளர்ச்சிக்கு உலகலாவிய ரீதியில் மிகப் பெரும் பங்களிப்பினை வழங்கி இன்றைய நவீன உலகில் இந்து சமயப் பாரம்பரியத்தினை பாதுகாத்தும், இந்து சமயம் சார்ந்த சிறந்த சீடர்களையும், அறிஞர்களையும், பக்தர்களையும் உருவாக்கியும் வருகின்ற ஓர் தலைசிறந்த ஆதீனமாக இக் காவாய் இந்து ஆதீனம் காணப்படுகின்றது.§