சிவனை அடையும் வழி

8§

இந்து சைவ சமயம் என்றால் என்ன?§

லகின் மிகப் பழமையான மதம் சைவ சமயம். கருணைமிக்க சிவபெருமானை வணங்கும் இச்சமயம் சிறந்த ஒழுக்கங்களையும், உயர்ந்த தத்துவ ஞானத்தையும், குருவையும் மையப்படுத்தி, பக்தி மற்றும் ராஜயோக நெறிகளையும் வலியுறுத்தி நமக்குள்ளே சிவனோடு ஒன்றாவதை வலியுறுத்துகிறது. சைவசமயம் தொன்மையானது, தொடக்கம் இல்லாதது. உண்மையில் கால வரம்பற்றது. தற்போது இந்து சமயம் என்ற பெயரில் பல பன்முக சமயங்களின் தோற்றத்திற்கு அதுவே ஆணிவேர். சிவ வழிபாட்டின் மூலத்தை ஆராய்ச்சி செய்யும் கல்வியறிஞர்கள் அதன் தோற்றத்தை 8000 ஆண்டுகளுக்கு முன்னர் நாகரீக வளர்ச்சி அடைந்திருந்த சிந்துவெளி நாகரீக காலத்துக்கு இட்டுச் செல்கிறார்கள். ஆனால் சைவசமயம் இல்லாத காலமே இல்லை என்று புனித நூல்கள் கூறுகின்றன. சைவ சமயத்தில் தத்துவ ஞானம், பாரம்பரியம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆறு உட்பிரிவுகள் உள்ளன. அவை சைவ சிந்தாந்தம், காஷ்மீர் சைவம், பாசுபத சைவம், வீரசைவம், சிவ அத்வைதம், சித்த சித்தாந்தம் ஆகியன. அவை தத்துவ ஞான ரீதியாகவும், சரித்திர ரீதியாகவும், மொழிவாரியாகவும், புவியமைப்பு ரீதியாகவும் பல வகைகளில் வேறுபடுகின்றன. எனினும் ஒத்த நம்பிக்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் மிகப்பெரிய அளவில் அவை பகிர்ந்துகொள்கின்றன. அந்த ஆறு பிரிவினரும் வேதங்களையும் சைவ ஆகமங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். ஆறு பிரிவினரும் சிவபெருமானை சர்வசக்தி படைத்த சர்வேஸ்வரனாக ஏற்றுக் கொள்வதுடன், அவரை உள்நின்று உறைபவராகவும் எல்லை கடந்தவராகவும், இஷ்ட தெய்வமாக வழிபடப்படுபவராகவும், தியானத்தின் மூலம் அவர் எல்லா வடிவங்களையும் கடந்த முழுமுதற் பொருளாகவும் பரம்பொருளாகவும் மெய்யுணர்வு பெற்று உணர்கின்றனர். எல்லாப் பிரிவினரும் பின்வரும் முதன்மையான ஆகம கோட்பாடுகளை ஏற்கின்றனர்:§

1) சிவபெருமானின் ஐம்பெரும் சக்திகள் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்)§

2) பதி, பசு, பாசம் எனும் முப்பொருள்கள் (இறை, உயிர், தளை) இருப்பின் மூலப்பொருளாக இருக்கின்றன§

3) மும்மலங்கள் அல்லது தளைகள் (ஆணவம், கன்மம், மாயை)§

4) சிவனின் திரிசக்திகள் இச்சா, கிரியா, ஞானசக்தி (விருப்பம், செயல், ஞானம்)§

5) 36 தத்துவங்கள் அல்லது தோற்றத்தின் பிரிவுகள்§

6) சற்குருவின் அவசியமும் தீக்கையின் அவசியமும்§

7) மந்திரத்தின் சக்தி§

8) சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நால்வகை ஆன்மீகப் படிகள் (தொண்டு, பக்தி, சங்கமம், ஞானம்)§

image§

shutterstock§

சிவபெருமான் இமய மலையில் வீற்றிருக்கிறார். இது ஐந்து முகங்கள் பத்து கைகள் உள்ள சதாசிவ திருமேனி. அந்த ஐந்து முகங்கள் ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய அவரின் ஐந்தாற்றல்களைக் காட்டுகிறது§

குருதேவர்: உலகின் மிகச் சிறந்த மதம் சைவ சமயம். நாம் சைவர்களாக இருப்பதற்கு மிகவும் பெருமைப் படுவதோடு அதிா்ஷ்டமும் செய்திருக்கிறோம். இவ்வுலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தை அது கொண்டிருக்கிறது. ஆழமிக்க ஞானசாத்திரங்களை அது கொண்டுள்ளது. ஆன்மாவைத் தட்டியெழுப்பும் புனித மந்திர சுலோகங்கள் அதில் உள்ளன. நிகரற்ற யோக தியான ஒழுங்குமுறைகளை அது பெற்றிருக்கிறது. உண்மையிலேயே புனிதமிக்க பிரமிக்கும் கோயில்களும் அதில் உள்ளன. பக்திமிக்க ஞானிகளும் புனிதமிக்க ஆண், பெண் சாதுக்களும் அச்சமயத்தில் உள்ளனர்.§