சிவனை அடையும் வழி

28§

பக்தி என்றால் என்ன?§

க்தி என்றால் கடவுள்மீதும், தெய்வங்கள்மீதும், குருநாதர்மீதும் செலுத்தும் அன்பாகும். இந்த பக்தியை வெளிப்படுத்தும் பக்தியோகம் என்ற வழிமுறை எல்லா இந்துசமய பரம்பரையிலும் மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது. நமது இல்லத்தின் பூசையறையில் அல்லது கோயிலில் வழிபடும்போது அல்லது திருத்தல யாத்திரை செல்லும்போது நாம் பக்தியை வெளிப்படுத்துகிறோம். அதிகமான பக்தியை வெளிப்படுத்தும்போது அது இன்னும் மிக ஆழமாக நம்முள் வளர்கிறது. பக்திப் பாடல்கள் அல்லது பஜனைப் பாடல்களைப் பாடும்போது இந்த பக்தியுணர்வு நம்மிடம் ஏற்படுகிறது. பெரிய மகான்கள் மற்றும் சற்குருநாதரின் கதைகளைக் கேட்கும்போதும் பக்திப் பரவசம் அடைகிறோம்.§

சைவ சித்தாந்தத்திலும் பக்தியோகம் எல்லை மீறவில்லை. அது வெறும் ஆரம்ப நிலையில் இருப்போருக்கு மட்டுமல்ல. குருநாதர் சொல்லியிருப்பதுபோல், “தூய பக்தி யோகம் இப்பாதையின் ஆரம்ப நிலையில், இடைநிலையில், இறுதி நிலையிலும் காணப்படுகிறது.” அன்பான பக்தியையும் பாராட்டுதலையும் நாம் தட்டியெழுப்பும்போது கடவுளின் அருள் வீழ்ச்சிக்கு நாம் ஆளாகிறோம். குரு மீதும் நாம் பக்தியைக்காட்டி அவரின் ஆசியையும் அருளையும் அனுபவமாகப் பெறுகிறோம். ஆழ்ந்த பக்தி என்பது தெய்வத்தின்மீது நாம் காட்டும் அமைதியான அறிவார்ந்த அன்பாகும். அது நல்ல நண்பர்களுக்கிடையே ஏற்படும் நெருக்கமான நட்பு போன்றதல்ல. சைவ சித்தாந்தத்தில் சரியை பகுதியிலிருந்து இந்த பக்திப்பாதை தொடங்குகிறது. சேவையாற்றுதல் அல்லது கர்மயோகம் மூலம் நாம் முதலில் தெய்வங்களை அறிந்துகொண்டு அவர்களுடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்கிறோம். அதன்பிறகு பக்தி இயற்கையாகவே அனுபவிக்கப்படுகிறது. இது கிரியை நிலையாகும். நமது இயல்பு மென்மையானதாக, தளர்வுமிக்கதாக திருப்தியுள்ளதாக மாறுகிறது. குருதேவர் இதனை, “‘எல்லாம் சிவன் செயல்’ என்ற சிந்தனை மனதுக்குள் வரும்போது அதுதான் பக்தியோகப் பலன்களில் முதலாவது பலன்,” என்று விளக்கமளித்துள்ளார்.§

கடவுள்மீதும் தெய்வங்கள் மீதும் கொண்டிருக்கும் நெருக்கமான அன்பான பக்தியுறவு நமக்கு வாழ்க்கையில் ஒரு உறுதியான நிலைத்தன்மையை அளித்து தியானத்தில் வெற்றியடையவும் வழிவகுக்கிறது. ஏதாவது பிரச்சினைகள் அல்லது எதிர்மறையான கர்மவினைகள் எழுமானால் அவை தீர்வதற்கு அவற்றை தெய்வத்தின் காலடியில் பக்தர்கள் விட்டுவிடலாம். அந்த கர்மவினைகள் தீர்ந்ததும் பக்தன் தன் பக்தியை யோகவழியில் உள்முகமாகத் திருப்பி ஆழ்நிலை தியானத்துக்கு செல்ல முடிகிறது.§

image§

shutterstock§

இந்தியாவின் ஒரு சாலையோரக் கோயிலில் ஒரு பக்தை சிவபெருமானை வணங்கி தனக்கு வழிகாட்டவும் ஆசீர்வாதம் வழங்கவும் வேண்டுகிறார். கையில் திரிசூலம் ஏந்தியிருக்கும் அந்த மூர்த்திக்கு பக்தியுடன் பட்டுத்துணியாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.§

குருதேவர்: பக்தி யோகத்தில் மிகவும் பெரிய தடைக்கல்லாக இருப்பது சந்தேகத்தைக் கிளப்பும் குற்றங்குறைகளக் கண்டுபிடிக்கும் பகுத்தறிவு மனமாகும். சந்தேகமும் உண்மையை மறுக்கும் போக்கும் இதயத்தை இறுகச்செய்து மனதைக் குறுக்கிவிடுகிறது. பக்தியின் சக்தியும் அன்பின் ஆற்றலும் உங்கள் உடம்பில் ஓடும்போது தியானம் எளிமையாகக் கைகூடுகிறது. முன்கூட்டியே செய்யக்கூடிய விதிமுறைகளைக்கூட கடைப்பிடிக்கத் தேவையில்லை. ஏனெனில் நீங்கள் உயர் சக்கரத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.§