சிவனை அடையும் வழி

41§

நமது ஐந்து மூலக் கடமைகள் யாவை?§

குருதேவர் எல்லா இந்துக்களுக்கும் ஐந்து அனுட்டானங்களை (அன்றாட கடமைகளை) பரிந்துரைத்திருக்கிறார். அவை வழிபாடு, திருவிழாக்கள், யாத்திரை, தர்மம் மற்றும் வாழ்வியல் சடங்குகள் ஆகியன. சமஸ்கிருதத்தில் இதனை பஞ்ச நித்ய கர்மங்கள் என்பர். முதலாவதும் முதன்மையானதும் உபாசனா என்னும் தினசரி வழிபாடு. இதுவே சமய வாழ்வின் கருமூலம், ஆண்டவன் மீதும் தெய்வங்கள் மீதும் அன்பை பொழியச் செய்யும் ஆன்மாவின் இயல்பான செயலாகும். அடுத்தது உற்சவம் என்னும் திருவிழாக்களைக் கொண்டாடுவது. அத்திருநாட்களில்தான் தெய்வங்களின் அருட்சக்தி மிக அதிகமாக வெளிப்படுகின்றது. சிவபெருமானுக்கும், கணேசருக்கும், முருகனுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் முக்கிய பெருநாட்களில் திருவிழா கொண்டாடும்போது நாம் குடும்பத்தோடும் சமூகத்தோடும் ஒன்றிணைந்து விழா சடங்குகளிலும் அன்னதானத்திலும் கலந்து கொள்கிறோம்.§

வட இந்தியாவில் இந்துக்களுக்கு திங்கட்கிழமை புனித தினமாகும். அதேபோல் தென்னிந்தியாவில் வெள்ளிக்கிழமை புனித நாளாகும். இந்நாளில் நாம் கோயிலுக்குச் சென்று வணங்கி வழிபட்டு வருவதுடன், வீட்டை சுத்தப்படுத்தி பூஜை அறையை அலங்கரித்து, வழிபாட்டிலும், ஜெபத்திலும், ஞானசாத்திரங்களைப் படிப்பதிலும் கூடுதல் நேரம் ஈடுபடுகிறோம். இந்நாள் நமக்கு ஓய்வு நாள் அல்ல. வழக்கமாக செய்யும் கடமைகளைச் செய்கிறோம். நமது மூன்றாவது கடமை தீர்த்தயாத்திரை என்னும் புனிதயாத்திரையாகும். ஆண்டுக்கு ஒரு முறையாவது ஒரு புனித தலத்துக்கு நாம் சிறப்பு யாத்திரைப் பயணம் மேற்கொள்கிறோம். இப்படி செய்வதால் நாம் நமது அன்றாட வாழ்விலிருந்து முழுவதும் விலகி, நமது சிந்தனையை கடவுள் மீதும், தெய்வங்கள் மீதும் குரு மீதும் முழுமனதாக வைக்கிறோம்.§

இம்மூன்றுவகை வழிபாட்டு முறைகளும்—அதாவது தினசரி பூஜை, திருவிழாக்கள் மற்றும் யாத்திரை செல்வது—நம்முடைய இயல்பான வெளித்தோற்றத்தின் உள்முகமான பரிபூரணத்தை வெளிக்கொண்டுவர உதவுகிறது. நமது நான்காவது கடமை தர்மம் என்கின்ற கடமையும் நன்னடத்தையும் கொண்ட தன்னலமற்ற வாழ்க்கை. இங்கு இயம நியம விதிகள்தான் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறன. தர்மம் என்பது பெற்றோர்களிடமும், பெரியவர்களிடமும், ஆசிரியர்களிடமும், சுவாமிகளிடமும் மரியாதையோடு இருப்பது என்பதாகும். நமது ஐந்தாவது கடமை சம்ஸ்காரம் என்னும் வாழ்வியல் சடங்கு காரியங்களாகும். தனி நபர் ரீதியில் மேற்கொள்ளப்படும் இச் சடங்குகள் பிறப்பிலிருந்து இறப்புவரை நமது வாழ்வின் முக்கிய காலக்கட்டத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் புனிதமாகக் கொண்டாடப்படுகின்றன. முதலாவது முக்கிய சம்ஸ்காரம் ( சடங்கு) என்னவென்றால் பெயர் சூட்டு விழா. அதேபோல் முதல் முறை அமுதூட்டல் (அன்னப்பிராசனம்), காது குத்துதல், ஏடு தொடக்குதல் (அட்சரராரம்பம்) போன்று இன்னும் பல உள்ளன. வாலிப வயதினருக்கு மிக முக்கியமான சடங்கு திருமண சடங்காகும். உயிர் நீத்தபோது ஈமச் சடங்கின்மூலம் ஆன்மா உடம்பிலிருந்து விடுவிக்கப்படுகிறது. முக்கியமான காலக்கட்டத்தில் நிறைவேற்றப்படும் சடங்குகளால் தேவர்கள், தெய்வங்கள், சமுதாயம், கிராமம், குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் சிறப்பு ஆசியைப் பெறுகிறோம்.§

image§

shutterstock§

நாம் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை சமய ஒழுக்க விதிகள் எளிமையாக வண்ணத் தாள்களில் எழுதிக் காட்டப்பட்டுள்ளது. அவற்றைப் பின்பற்றுவதால் நாம் பலமிக்க, பாதுகாப்புமிக்க, பொறுப்புள்ள, சகிப்புத்தன்மையுள்ள, பாரம்பரியமிக்க நல்ல குடிமகனாக ஆகிறோம்§

குருதேவர்: அன்றாட ஆன்மீக சாதனைகளைச் செய்தல், நல்லவர்களோடு சேர்ந்திருத்தல், திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளல், மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவை நம்முள் உயர்சக்தியை எழுப்பி, மனதை உபயோகமிக்க எண்ணங்களில் திருப்பி, தொல்லை கொடுக்கும் புதிய கர்மவினைகள் செய்வதிலிருந்து தடுக்கின்றன§