சிவனை அடையும் வழி

67§

உறுதிகொண்ட இந்துவாக இருப்பது எப்படி?§

“நம்முடைய சமய நம்பிக்கையை தேர்வுசெய்து ஏற்றுக்கொண்டபின் அச்சமய வழியை நன்கு கற்று, அதை மனப்பூர்வமாக வாழ்வில் கடைப்பிடித்து, நம்பிக்கை மிக்க ஒரு சமூகத்தை உருவாக்கவும், நமக்குப் பின் வரும் அடுத்த தலைமுறையினருக்கு அதை உயிரோட்டத்துடன் ஒப்படைக்க வேண்டும் என்பதும் நமது ஆன்மிகக் கடமையாகிறது,” என்று குருதேவர் போதித்திருக்கிறார். உறுதிகொண்ட இந்துக்களாக இருக்க வேண்டுமெனில் முதலில் நமது சமயத்தை நன்கு படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால் நம் சமயத் தத்துவதையும், பண்பாட்டையும் சூட்சும ஞானவிஷயங்களையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவதாக கற்றதை நம் வாழ்வில் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அப்படியெனில் உறுதியான ஈடுபாடு இருக்க வேண்டும்; நற்குணம் கொண்டிருக்க வேண்டும்; கற்ற கோட்பாடுகளை வாழ்வில் செயல்முறைப் படுத்த வேண்டும். நமக்கு இது சைவத் தமிழர்களின் நடை உடை பாவனைகளை, மனப்பான்மையை, பண்டை பழக்க வழக்கங்களை, வழிபடும் முறைகளை, உடைகள் மற்றும் தூய்மையான சைவத் தமிழர்களின் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்பதாகும். மூன்றாவது யாதெனில் நாம் பின்பற்றும் சமயத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வது.§

பலதரப்பட்ட சமுதாயத்தில் நாம் வெவ்வேறு பின்னணியைக் கொண்ட மக்களோடு ஒருவருக்கொருவர் உறவாடி வாழ்கிறோம். உங்களிடம் இந்து சமய நம்பிக்கையைப் பற்றி கேள்விகள் கேட்கப்படலாம். கேள்வி கேட்கும் சிலர் யாதொரு மதத்தையும் சேராதவராக இருக்கலாம். மேலும் சிலர் சமயத்தை உதறிவிட்டு விஞ்ஞானத்திலேயே வாழ்வின் எல்லா விடைகளும் உள்ளன என்று நம்புகின்றவராக இருக்கலாம்.§

“நீங்கள் பசுக்களை வணங்குகிறீர்களா?” என்ற கேள்வி உங்களிடம் கேட்கப்படலாம். “ஏன் அத்தனை இந்துக் கடவுள்கள்?” “ஏன் நெற்றியில் பொட்டு வைக்கிறீர்கள்?” இப்படியெல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்கு தக்க விடைகளைக் தேடிக் கண்டுபிடித்து தயாராக இருக்க வேண்டும். தைரியமாகவும் கனிவோடும் பதில் அளியுங்கள். நமது சமயத்தை அவர் உண்மையில் தெரிந்துகொள்ள விரும்புகிறார் என்று யூகித்துக் கொள்ளுங்கள். சிலர் உங்களை வம்புக்கு இழுப்பார்கள் அல்லது அவர்களின் வழிக்கு உங்களை இழுப்பார்கள். அப்படி நடக்கும் என்று உங்கள் மனதில் பட்டால் உடனே ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அந்த விவாதத்திலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் உமது சமய நம்பிக்கையை வகுப்பிலோ அல்லது பொது மேடையிலோ பகிர்ந்து கொள்ளலாம். மொத்தத்தில் நாம் ஒவ்வொருவரும் நல்ல இந்துவாகத் திகழ்ந்து இந்து சமயத்துக்காக தோள் கொடுப்போம்.§

குருதேவர் தமது முப்பெரும் தொகுதியான குருபோதனை நூல்களில்—சிவனோடு ஒரு திருநடனம், சிவனோடு வாழ்தல், சிவனோடு ஐக்கியமடைதல்—ஆகிய நூல்களில் நமக்கு போதுமான வழிகளைக் காட்டியுள்ளார். இந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள தத்துவம், கலாச்சாரம், யோகா போன்றவற்றை ஆயுதமாக உபயோகித்து நாம் நமது சைவ சமயத்தை தற்காக்கலாம், விளக்கமளிக்கலாம், பாதுகாக்கலாம், அழியாமல் காப்பாற்றலாம், விளம்பரப்படுத்தலாம்.§

image§

shutterstock§

சுவாமி விவேகானந்தர் (1863-1902) கைகளை கட்டிக்கொண்டு, அமைதியான முகத்துடன் ஆனால் தீர்க்கமான பார்வையுடன் நின்று கொண்டிருக்கிறார். மானிடர்களிடம் அவர் சிங்கமாகவும், இந்து சமயத்தை தைரியமாக தற்காப்பவராகவும் ஓர் சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். அவரின் பொன்மொழிகள் நமக்கும் அவ்வாறான தைரியம் வேண்டுமென உற்சாகமூட்டுகின்றன§

குருதேவர்: எல்லா இனத்தைச் சார்ந்த, எல்லா நாடுகளைச் சார்ந்த, எல்லா கலாச்சாரம் சார்ந்த, எல்லா பிரிவையும் சார்ந்த இந்து மக்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து நின்று தாங்கள் பெருமை வாய்ந்த சமயத்தின் அசராத பக்தர்கள் என்று உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நேரம் வந்துவிட்டது.§