Sutras in Tamil

சூத்திரம் 1

உண்மையை நாடுவோர் கடவுளை உணர்தலையே தம் வாழ்க்கையின் தலையாய குறிக்கோளாகக் கொள்ளல் வேண்டும். அவர்கள் சிவனோடு நடனமாட, சிவனோடு வாழ, சிவனோடு இணையப் பழகுதல் வேண்டும். உள் ஆழத்தில் தாம் கடவுளோடு நிலையான அழிவற்ற நிலையில் ஒன்றாக இருப்பதை அவர்கள் காண்பர்.§

சூத்திரம் 2

கடவுள், கடவுளர், குருவுக்கு முழுமனத்தோடு சேவை செய்வதும் வாழ்க்கையின் நான்கு பாரம்பரிய இலக்குகளான தர்மம், செல்வம், அன்பு, மோட்சம் ஆகியவற்றை நிறைவேற்றுதலுமே வாழ்க்கையின் நோக்கம் என்பதை உன்மையை நாடுவோர் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஆம். அவர்கள் தெய்வீகத்தின் சேவகர்கள். §

சூத்திரம் 3

உண்மையை நாடுவோர் சிவ உண்ர்வில் குளிர்காய்ந்த வண்ணம் ஒவ்வொரு மனிதனிடமும் மிருகம், பறவை, பாம்பு, பூச்சி, செடிகொடி, மரம் ஆகியவற்றிடமும் தூய உயிர்ச்சக்தியைக் காண்பதோடு மட்டுமின்றி நுண்ணுயிர்களும் சிவனே தான் என்றறிவர்.§

சூத்திரம் 4

உண்மையை நாடுவோர் தம் சற்குருவின் உள்மனதோடு ஒன்றியிருக்க முழுமுயற்சி செய்து, சிவபெருமானின் திருப்பாதங்களைச் சென்றடைவதற்குத் தம்மை மேல்நோக்கி அழைத்துச் செல்ல ஆசானின் துணை மிக முக்கியம் என ஒப்புக் கொள்வர். §

சூத்திரம் 5

உண்மையை நாடுவோர் பழமையான ஞானமொழிகளைக் கவனத்தில் கொள்வர். இந்தத் தூல உடல் என்றும் நிலையாது. வயது சிறுத்தை போல் பதுங்கி வரும். கைகால் தம் சக்தியை இழக்குமுன் ஒருவர் தன்னை அறியும் மங்களகரமான வழியை ஆரம்பிப்பர். §