Sutras in Tamil

சூத்திரம் 26

உண்மையை நாடுவோர் குற்றமுணர்வதால் ஏற்படும் வருத்தத்தினை வெளிப்படையாகக் காண்பிப்பதோடு அடக்கமாயிருந்து தாம் செய்த தவறுக்கு வெட்கப்படவும் வேண்டும். அனைவரும் திருப்தியைத் தன்னுள் வளர்த்து சாந்தத்தையும் சந்தோஷத்தையும் வாழ்வில் நாட வேண்டும். ஆம், சந்தோஷமும் முழுமையும் நிறைந்தது அவர்கள் வழி.§

சூத்திரம் 27

உண்மையை நாடுவோர் அனைவரும் தாராள மனப்பான்மையோடு எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தசாம்சம், தானங்களை வழங்க வேண்டும். அவர்கள் கடவுள், கடவுளர், குரு, நம் ஞான ஒளி மார்க்கத்தின் மேல் அசைக்க முடியாத திட நம்பிக்கையை வளர்க்க வேண்டும். §

சூத்திரம் 28

உண்மையை நாடுவோர் அனைவரும் வழிபாட்டில் தீவிரமானவர்கள். தெய்வீக அன்பை தினசரி பூசை, ஆழ்ந்த தியானத்தின் வழி வளர்த்துக் கொள்வர். அனைவரும் நம் புனித நூல்களை ஆர்வத்தோடு கேட்பதோடு, நம் பரம்பரையில் உதித்த ஞானிகளின் போதனைகளைக் கேட்கவும் படிக்கவும் வேண்டும்.§

சூத்திரம் 29

உண்மையை நாடுவோர் அனைவரும் சற்குருவின் துணையோடு அறிவாற்றல், ஆன்மீக மனோதிடம், பகுத்தறிவு ஆகியவற்றை வளர்க்க வேண்டும். அவர்கள் சமய நெறிகள், கட்டுப்பாடுகள் மேல் தாம் மேற்கொண்ட விரதங்களை நிறைவேற்றுவதினின்றும் தவற மாட்டார்கள்.§

சூத்திரம் 30

உண்மையை நாடுவோர் புனித உருத்திராட்ச மணியை எண்ணியவாறு அவர்களின் புனித மந்திரத்தைத் தினமும் செபிக்க வேண்டும். அனைவரும் தினசரி சாதனை, பிராயச்சித்தம், தியாகம் ஆகிய ஒருவகைத் தவத்தினையும் அனுஷ்டிக்க வேண்டும். §