சிவனை அடையும் வழி

25§

தீமை, நரகம், பாவம் பற்றி எப்படிப் பார்க்கிறோம்?§

மிக உயர்ந்த நோக்கில் பார்த்தால் நன்மையோ தீமையோ இல்லை. நன்மைக்கு எதிர் சக்தியாக இறைவன் தீமையைப் படைக்கவில்லை. இறைவன் உயிர்களுக்கு அறவினையையும் (தர்மம்), கன்மத்தையும் (வினை) அளித்து இந்த பெரிய அனுபவக் கடலில் விருப்பம்போல செயல்படுவதற்கு சுதந்திரத்தையும் அளித்திருக்கிறார். நாம் அனுபவக் கல்வி கற்றுக்கொள்ளவும் பரிணாம வளர்ச்சி பெறவும் கடவுள் நமக்களித்த அருட்பிரசாதம் இது. என்றென்றும் அழியாத நரகமோ அல்லது சாத்தானோ இல்லை. ஆனாலும் தவறான வழிகளில் சிந்தித்து செயல்படுபவர்களுக்கு நரகமான மனவேதனைகளும் துன்பப் பிறப்புக்களும் உண்டு.§

பாவம் என்பது தர்மச்செயல்களை மீறும் கீழ்மையான விலங்குமனம் மற்றும் அறிவுசார்ந்த மன இயல்போடு சம்பந்தப்பட்டது. பாவ காரியத்தால் மனிதனின் உண்மையான இயல்பு மாசுபடுவதோ அல்லது கெட்ட செயல்கள் ஆன்மாவை என்றென்றும் நரகத்தில் தள்ளிவிடுவதோ அல்லது அடைத்துவிடுவதோ இல்லை. எனினும் பாவச்செயல்கள் உண்மையானவை என்பதால் அதை செய்வதை நாம் தவிர்க்கவேண்டும். ஏனெனில் கர்மவினைக் கொள்கையின்கீழ் அவை துன்ப அனுபவங்களாக மீண்டும் நம்மிடமே திரும்பிவரும். கெட்டசெயல்கள் செய்திருந்தால் அவற்றை நாம் சாதனா பயிற்சி, வழிபாடு மற்றும் பிராயச்சித்த விரதமூலம் நிவர்த்தி செய்யலாம்.§

சைவர்களாகிய நாம் உலகில் தீமைக்கும் நன்மைக்குமிடையே பெரிய வேறுபாடுகளைக் காண்பதில்லை. மாறாக, எல்லா மனிதர்களுக்கும் விலங்குணர்வு (இச்சாவுணர்வு), அறிவுணர்வு, ஆன்மீகவுணர்வு என்று மூவித இயல்புகள் இருப்பதை நாம் அறிகிறோம். விலங்குணர்வு என்பது புறத்தே இருக்கும் நான், எனது, என்னுடையது என்ற கீழ்மையான விலங்கு மன இயல்பாகும். இக்குணம் மேலோங்கி ஆதிக்கம் செலுத்தும்போது மக்கள் கோபம், பயம், பேராசை, பொறாமை, புண்படுத்துதல் போன்றவற்றிற்கு ஆளாகிறார்கள்.அறிவார்ந்த இயல்பு என்பது ஆன்மாவின் மனத்தொடர்பான அம்சமாகும். இக்குணம் ஆளும்போது மக்கள் திமிர்பிடித்தவர்களாகவும் மோதலுக்கும் வாதிடுவதற்கும் வாய்ப்புள்ளவர்களாக ஆகிறார்கள். ஆன்மீகவுணர்வு அல்லது மெய்யுணர்வு கொண்ட ஆன்மாக்களின் இயல்பு காருண்யம், எதிர்கால நோக்கு, அடக்கம், அமைதி, புரிந்துணர்வு ஆகிய நற்குணங்களின் மூலாதாரமாக இருக்கின்றது. பக்குவப்படாத இளம் ஆன்மாக்களின் இச்சாமனம் (விலங்குமனம்) அதிக வேகம் கொண்டது. அதனை அடக்கியாளக்கூடிய புத்தி இன்னும் வளராமல் இருக்கிறது. அற்பத்தனத்தையும் பொல்லாத்தனத்தையும் பிறரிடம் காணும்போது, நாம் மக்களிடமுள்ள முக்குண இயல்புகளையும் நினைவில் நிறுத்தி இக்கீழ்மையான இச்சாமன இயல்பில் உழல்வோர்களைக் கண்டு ஈவிரக்கம் காட்டுகிறோம். தாமே உருவாக்கிய வினையின் காரணமாக அவ்வினைப்பயனை அனுபவித்து அவர்கள் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைவார்கள் என்று நாம் தெரிந்துகொள்கிறோம். உள்ளார்ந்த தீமை என்று ஒன்றில்லை என்றும் உணர்ந்துகொள்கிறோம்.§

image§

shutterstock§

பாலியிலுள்ள ஒரு கோயிலின் நுழைவாயிலை இந்த பயங்கரக் குரங்கு காவல் காக்கிறது. கோயிலில் நுழையக் கூடாதவர்களை இது மிரட்டிவிடுகிறது. இது பயங்கரமானது என்றாலும், பாவ புண்ணியத்தைப்போல், மனநீதில் தூய்மையானவர்கள் இதற்கு பயப்படுவதில்லை.§

குருதேவர்: இந்து சமயம் மிகவும் குதூகலமான சமயம். பல்வேறு மேற்கு நாட்டு நம்பிக்கைகளில் நிலவும் மனத்தடைகளையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு சுதந்திரமாக இருக்கிறது. பழிவாங்கும் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையிலிருந்து அச்சமயம் விடுபட்டிருக்கிறது. என்றுமே நரகத்துன்பந்தான் (விமோசனமே இல்லை) என்ற அபிப்பிராயத்திலிருந்தும் அது விடுபட்டுள்ளது. மூலப் பாவம் என்ற நம்பிக்கையிலிருந்தும் அது விடுபட்டிருக்கிறது.§