Sutras in Tamil

சூத்திரம் 41

உண்மையை நாடுவோர் மரங்கள், செடிகொடிகள், மீன்கள், பறவைகள், தேனீக்கள், பாம்புகள், மிருகங்கள், பலவித உருவ அமைப்புக்களைக் கொண்ட ஜீவராசிகளுக்கும் காவலாயிருந்து மனித குலத்தில் ஜாதி, கோட்பாடு, வர்ணவேறுபாடு, பால்வேறுபாடு பார்க்காமல் அவர்களின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகத் திகழ வேண்டும்.§

சூத்திரம் 42

உண்மையை நாடுவோர் அனைவரும் இவ்வுலகத்தின் கலப்பு இன அனைத்துலகப் பிரஜைகளாவர். அவர்கள் உலகளாவிய நிலையில் சிந்தித்து உள்ளூரில் செயல்படுவர். அவர்கள் மனிதகுலத்தின் சகல பண்பாடுகளையும் மொழிகளையும் மனிதர்களையும் பாதுகாக்கும் காவலராயிருப்பர். ஒருவரைத் தாழ்த்தி மற்றவரை உயர்த்த மாட்டார்கள். §

சூத்திரம் 43

உண்மையை நாடுவோர் அனைவரும் தம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகம் கடவுளின் சிருஷ்டி என்பதையுணர்ந்து அதைக் கௌரவித்து வணங்குவார்கள். உலகின் பல்வேறு தன்மைகளையும் செல்வங்களையும் பாதுகாத்து நிலையான நிரந்தர சூழ்நிலையை எய்த அவர்கள் செயல்படுவர்.§

சூத்திரம் 44

உண்மையை நாடுவோர் அழியும் நிலையிலுள்ள தாவரங்களையோ, மிருகங்களையோ தம்வசம் வைத்திருக்கக் கூடாது. மிருகங்களைச் சித்திரவதை செய்து பெறப்படும் தயாரிப்புகளைப் பாவிப்பதோ உரோமத்தோல் தந்தம் ஊர்வனவற்றின் தோல் ஆமையோடு போன்றவற்றை வைத்திருப்பதையும் அனுமதிக்ககூடாது. மிருகங்களை சித்திரவதை செய்து பரிசோதனை செய்யப்பட்ட தயாரிப்புகளை பாவிப்பதையும் அவர்கள் அனுமதிக்கக் கூடாது.§

சூத்திரம் 45

உண்மையை நாடுவோர் அனைவரும் இயற்கையின் மதிப்பு மிக்க செல்வங்களை வீணாக்காமல் சிக்கனமாகவும், புத்திசாதுரியமாகவும் பயன்படுத்த வேண்டும்.§