Sutras in Tamil

சூத்திரம் 46

உண்மையை நாடுவோர் தம் மனைவியைத் தவிர்த்து அனைவரிடமும் எட்டுவகைப் பிரம்மச்சாரியக் கொள்கைகளை அனுஷ்டிக்க வேண்டும். அவர்கள் காமக் கற்பனை, காமப் புகழ்ச்சி, காதலிப்பது போல் நடித்தல், காமப் பார்வை, இரகசிய காதல் பேச்சு, காதல் ஏக்கம், இரகசியச் சந்திப்பு, உடலுறவு ஆகியவற்றைத் துறத்தல் வேண்டும்.§

சூத்திரம் 47

எந்தளவு புகழ்ச்சியென்றாலும் உண்மையை நாடுவோர் கிரகித்துக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே, ஆனால் அதேபோல் எவரொருவர் மனத்தளவிலும், உணர்ச்சியளவிலும் ஏற்படும் துன்பங்களையும் உடலளவில் ஏற்படும் சித்திரவதைகளையும் கிரகித்துக் கொள்ளும் எல்லையற்ற தன்மையை கொண்டிருக்கின்றாறோ அவரே உண்மையான சிவனடியார்கள்§

சூத்திரம் 48

உண்மையை நாடுவோர் அனைவரும் ஒவ்வொரு நாளும் பாரம்பரிய உருவங்கள், இசை, பாடல்கள் ஆகியவை தம்மைச் சூழ்ந்திருக்க இருக்க வேண்டும். ஞானவொளிப் பாதைக்கு எதிரான கருத்துகளைப் போதிக்கும் கீழ் உலகக் கேவலமான இசையை அவர்கள் ஒருபோதும் கேட்கவே கூடாது.§

சூத்திரம் 49

உண்மையை நாடுவோர் பொழுது போக்கிற்காகவும் சமகாலத்தில் உலகில் ஏற்படும் விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் தொலைக்கட்சியைப் பார்க்கலாம். அதைப் பார்ப்பது தினமும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போகக் கூடாது. நிர்வாணம், கேவலம், அளவிற்கு மீறிய வன்முறைகள் கொண்ட காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.§

சூத்திரம் 50

கஷ்டகாலம் என்பது இறைவன் கொடுத்த வரம் என்பதையும் கர்மவினைகள் சூழ்ந்து வரும் போது முகம் சுழிக்காமல் அதனை நேர் கொண்டு ஏற்க வேண்டும் என்பதையும் உண்மையை நாடுவோர் உணர்வர். §